நம்மை சுற்றி சாதாரணமாக கிடைக்கும் பூக்களில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது. இவற்றை நுகர்வதாலும், உண்பதாலும் பல நன்மைகள் ஏற்படும்.
மல்லிகைப் பூ
குழந்தையின்மையை போக்கும் சிறந்த பூ மல்லிகைப் பூ. ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவக்கூடியது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகள், சினைப்பை கட்டி, நீர்க்கட்டி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்தது. அன்றாடம் பெண்கள் தலையில் வைப்பதால் பல நன்மைகள் ஏற்படும். தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகையை மார்பில் வைத்துக் கட்டலாம் அல்லது அரைத்து பற்றாக போடலாம்.
ரோஜாப்பூ
உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பூ. இதழ்களை அப்படியே மென்று சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப் புண் சரியாகும். பூச்சி கொல்லி பயன்படுத்தாத வீட்டு தோட்டத்தில் வளர்ந்த பூக்களாக இருக்க வேண்டும். மலச்சிக்கலுக்கு சிறந்தது. மூல நோய்க்கு சிறந்தது. இரத்த சோகை போக்கும்.
தாமரைப்பூ
நரை, திரை, மூப்பு நீக்கும் பூ தாமரைப்பூ. தொடர்ந்து சாப்பிட இந்த தொந்தரவுகள் நீங்கும். வெண்தாமரை மூளைக்கு சிறந்தது, செந்தாமரை இதயத்திற்கு நல்லது. தாமரையின் தண்டு கருப்பைக்கு சிறந்தது.
நந்தியாவட்டை பூ
கண்களுக்கு சிறந்த மலர் நந்தியாவட்டை. பூச்சிகள் இல்லாத சுத்தமான நந்தியாவட்டை பூக்களை கண்களின் மீது வைத்து ஒரு துணியால் கட்டி இரண்டு மணி நேரம் வைத்து எடுக்க கண் தொந்தரவுகள் தீரும்.
நொச்சிப் பூ
மருத்துவ குணம் அதிகம் கொண்ட மூலிகைகளில் ஒன்று நொச்சி. இதன் பூக்கள் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த மருந்து. நொச்சி பூக்களை சேகரித்து உலர்த்தி தலையணை தயாரித்து பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். சீதபேதிக்கும் சிறந்தது.
வேப்பம்பூ
கொதிக்கும் நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி, தலைபாரம், பித்த வாதத்தை போக்கும். கண் நோய்க்கும் மிக சிறந்த மருந்து. அடிக்கடி இதனை உண்டுவர நோய்கள் அகலும்.
மருதாணிப்பூ
உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும் மருதாணியின் பூக்கள் தூக்கமின்மை போக்கும். மருதாணி பூக்களை உலர்த்தி தலையணையாக தயாரித்து பயன்படுத்த தூக்கமின்மை நீங்கும். அம்மை நோயால் ஏற்படும் உடல் எரிச்சல் நீங்கள் மருதாணிப் பூவை ஊற வைத்த நீரில் குளிக்க தணியும்.
அரளிப்பூ
தலையில் வைத்துக் கொண்டால் பேன் ஒழியும்.
சங்குப்பூ
நினைவாற்றலை அதிகரிக்கும் பூ. உடலில் ஏற்படும் பல உடல் பாதைகளுக்கு சிறந்த பூ. இதனை தேநீராக தயாரித்து பருக பலன் கிடைக்கும்.
செம்பருத்திப்பூ
இருதயத்தை பாதுகாக்கும், முடி உதிர்வை தடுக்கும். கண் எரிச்சல் நீங்கும். இந்த பூவின் வழுவழுப்புத் தன்மை கர்ப்பப்பை புண், வாய், குடல் நோய்களுக்கு சிறந்தது. ஐந்து இதழ் கொண்ட செம்பரத்தையே மருத்துவ குணம் கொண்டது.
ஆவாரம்பூ
நீரிழிவு மருந்துகளில் சேர்க்கக் கூடிய மருந்தில் ஒன்று ஆவாரம்பூ. ஊறவைத்த ஆவாரம்பூ வெள்ளைப் படுதலை போக்கும்.