நம் தலைமுறையினர் நாகரீகம், வளர்ச்சி, கௌரவம் என்கிற பெயரில் நிறைய வசதி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். பலநாட்டின் உணவு, பலநாடுகளின் தொழில்நுட்பம் என உலகநாடுகளில் கிடைக்கும் எல்லா வசதி வாய்ப்புகளையும் நினைத்த மாத்திரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.
ஆரோக்கியமும் பாரம்பரியமும்
இந்த வாய்ப்புகளால் வாழ்க்கை தரம் உயர்ந்து இருந்தாலும் ஆரோக்கியத்தின் தரம் குறைத்துள்ளது. தரமான ஆரோக்கியத்தை தம் வாழ்வியலாக கொண்டு வாழ்ந்தது நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தருகிற பாடம்.
வளர்ச்சியின் பெயரால் பெற்றுக்கொண்ட வசதிகளைக் கொண்டு ஆரோக்கியத்தைப் பெறமுடியாத போது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாடமே நம்மை வழிநடத்துகிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் சம்பிரதாயமாக செய்கிற நமக்கு தெரியவேண்டிய உண்மை நம்முன்னோர்கள் ஒவ்வொரு சம்பிரதாயதையும் வாழ்வியலாகக் கொண்டிருந்தனர் என்பதே.
இவ்வாறாக பல நல்ல செயல் முறைகளை கவர்ச்சி காரணமாக நம் தலைமுறையினர் இழந்திருந்தாலும் என்றும் நம்மை விட்டு சில பழக்கவழக்கங்கள் நீங்கி விடக்கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள் அவற்றை கடவுள், பக்தி, கலாச்சாரம் என்ற பெயர்களில் அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைத்துள்ளனர்.
நமக்கு தெரிந்த நல்லவை
சாதாரணமாக நமக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் ஆரோக்கியம் பற்றி நாம் பெரிதாக ஒன்றும் கவலைப்படுவதில்லை. உதாரணமாக விடியற்காலை விழிப்பது உடலுக்கு நல்லது என அனைவருக்கும் தெரியும். ஆனாலும் எத்தனைப்பேருக்கு எத்தனைநாள் வரை எழுந்திரிக்க முடியும் என்பது நமக்கு தெரிந்தது தான்.
நாள் ஒன்றுக்கு இருமுறை குளித்தால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும் என்பது அனைவரும் அனுபவிக்க முடியும். ஆனால் அதனை ஐயப்பன் பெயரில் சொன்னால் மட்டும் தான் சாத்தியமாகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆரோக்கிய செயலையும் எதாவது ஒரு சடங்கோடு இணைத்து வாழ்ந்த வாழ்வை பார்க்கிற பொழுது ஆச்சரியமாகவே இருக்கிறது. சாதாரண நிலையில் ஆலோசனையாக சொல்வதை விடவும் சடங்கோடு சொன்னால் நீண்டநாள் நிலைத்து இருக்கும் என்று அன்றே நம் முன்னோர்கள் நினைத்திருந்ததாகவே கருதத் தோன்றுகிறது.
எந்த மதமானாலும், எந்த சமூகமனாலும் அவர்கள் ஏற்படுத்திய வாழ்கை முறை சம்பிரதாயங்கள் இன்றும் நம் கண்முன்னே பார்க்க முடிகிறது. ரம்ஜான் மாதத்தில் கஞ்சி குடித்து உடலை பேணிக் கொள்கிற இஸ்லாமிய சிநேகிதிகளை பார்க்கிறோம். அமாவாசையில் விரதம் இருந்து ஆரோக்கியத்தை பெற்றவர்கள் இருகிறார்கள்.
இவ்வாறாக ஒவ்வொரு சம்பிரதாயதிற்குள்ளும் ஆரோக்கியம் இணைந்து இருக்கிறது. இந்த இணைப்பில் சம்பிரதாயத்தோடு இருக்கிற வாழ்வியல் பழக்கங்களில் ஒன்று, கூழ் குடிப்பது. கூழ் என்றவுடன் நாம் யோசிப்பது சாலை ஓரங்களில் தெரிகிற இரண்டு மூன்று வகைகள் மட்டுமே. ஆனால் கூழுக்கு என்று பெரிய வரலாறே உண்டு.
கூழ் வரலாறு
இன்றும் கூட கூழோ கஞ்சியோ உழைத்த காசில் குடிக்க வேண்டும் என்று சொல்லும் வழக்கு மொழி இருக்கிறது. இவ்வாறு பண்டையகாலம் தொட்டு உழைப்போடு உணவை சேர்த்துக் சொன்னவர்கள் நாம். அத்தகைய பண்டைய உணவுகள் பல இன்று நம்மிடம் வழக்கத்தில் இல்லை. இன்றும் நம்மோடு பயணிக்கும் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவே கூழ்.
பச்சை புரட்சி
பச்சை புரட்சி, வறுமை, ஏழைகளின் உணவு, மூடநம்பிக்கை, கௌரவம் என்று பல தவறான புரிதலின் விளைவாக பல காலங்களாக நம்மிடம் இருந்த சத்துமிக்க தானியங்களான நம் சிறுதானியங்களும் காணாமல் போனது. சற்றும் சிந்திக்காமல் காற்றடிக்கும் பக்கமெல்லாம் நாமும் திசைதிரும்பினோம்.
ஆன்மிகம், ஆரோக்கியம், பொன், பொருள், நிலம், வற்றாத ஆறு என்று செல்வச்செழிப்போடு எல்லா வளங்களையும் பெற்றிருந்த நாம் அவற்றின் மீது ஒரு சலிப்பு ஏற்பட எதிர் வழியில் பயணிக்க தொடங்கிவிட்டோம். இவையெல்லாம் நடக்கும் என்று முன்னமே அறிந்திருந்த நம் முன்னோர்கள் அடிப்படை வாழ்வியலுக்கு இன்றியமையாத சிலவற்றை பக்தி என்ற பெயரிலும் பயமுறுத்தி நம் வாழ்வியலோடு இணைத்துள்ளனர்.
ஆடி மாதம் கூழ்
ஆடிமாதம் கூழூத்தும் சம்பிரதாயமும் அதைப்போலத்தான். ஆடிமாதம் கூழூத்தவில்லை என்றால் ஆத்தா குத்தம், நோய்கொடுப்பா என்றெல்லாம் பயமுறுத்தியதால் என்னவோ இன்றும் சில பல இடங்களில் கூழ் திருவிழா நடைபெறுகிறது.
இவை சடங்குகளாகவும் சம்பிரதாயமாகவும் மட்டுமில்லாமல் நாம் ஆரோக்கியத்திற்க்கான ஆணிவேராகவும் இருக்கிறது இந்த கூழ். இதற்கு சான்று இந்த பழமொழி ‘கூழானாலும் குளித்துக் குடி’.
நமது அடிப்படை உணவாக இருந்த இந்த கூழ் பல இடங்களில் இன்று அன்றாட வாழ்வில் காணாமல் போக Health is Wealth என்று சொல்லக்கூடிய Health திலும் காணாமல் போக தொடர்ந்து சேமித்து வைத்திருந்த Wealth தையும் இழக்க செய்கிறது. என்னதான் செய்வது இதற்கு கவலையே இல்லை, இந்த இழப்பினை உடனடியாக மீட்டெடுக்கும் எளிமையான உணவு நம் கேழ்வரகு கூழ்.
கேழ்வரகின் முக்கியத்துவம்
கேழ்வரகு கூழ் தனக்குள் அப்படி எதைத்தான் ஒளித்து வைத்திருக்கிறது என்கிறீர்களா? உடல் ஆரோக்கியம் தருகிற அதிசயமான பல காரணங்கள் இருக்கிறது. கூழ் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு கேழ்வரகை பற்றிப் பார்ப்போம்.
தாய் பாலுக்கு அடுத்த உணவாக கருதப்படும் இந்த கேழ்வரகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏற்ற உணவு. கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நாட்டுப் பசும் பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. கேழ்வரகில் உள்ள நார் சத்துகள் மலச்சிக்கலைத் தடுக்கிறது. கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் கொண்டதால் இரத்த சோகை, மாதவிடாய் தொந்தரவுகளுக்கு நல்லது. கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்றது. .
கேழ்வரகு கூழ் பயன்கள்
இனி கேழ்வரகு கூழ் தரும் மாபெரும் அதிசயங்களைப் பார்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி, உடலுக்கு பலம், உடல் சமநிலை என உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கக் கூடியது இந்த கேழ்வரகு கூழ்.
அன்றாடம் காலையில் கூழையும் கஞ்சியையும் பருகலாம். குறிப்பாக ஆடிமாதத்தில் பருகுவது மிகவும் சிறந்தது.
அதுவும் ஊர்கூடி என்பதற்காக ஆடி திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். என்ன அப்படி விசேஷம் இந்த ஆடிமாதத்தில் என்கிறீர்களா, காரணம் இருக்கிறது. சுழன்று கொண்டிருக்கும் பூமிக்கு நடுவில் இருக்கும் சூரியன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் கதிர்வீச்சின் திசையை அல்லது கோணத்தை மாற்றும் என்று படித்திருக்கிறோம்.
நாம் இருக்கும் இந்த தமிழகத்தில் வெப்ப காலம் குளிர்காலமாக மாறும் நேரமிது. சூரியனின் இந்த கதிர்வீச்சு மாற்றத்தினால் உடலில் ஏற்ப்படும் பல்வேறு மாற்றங்களை சமன் செய்யும் ஆற்றல் இந்த கூழுக்கு உண்டு.
உடலின் சமநிலையை நோய்க்கு எதிராக சீராக்கும் இந்த கேழ்வரகு கூழின் அவசியத்தை புரிந்திருந்த நம் முன்னோர் இதற்கு ஒரு விழாவையே ஏற்படுத்தினர். ஊரோடு அனைவரின் ஆரோக்கியத்தையும் கருதி பக்தியுடன் இதனை பின்பற்றுமாறு வழிவகுத்துள்ளனர்.
சாதாரணமாகவே கேழ்வரகில் பல சத்துக்கள் அதாவது நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்று பார்த்தோம். மாவாக்கிய கேழ்வரகை முதலில் புளிக்க வைக்க பின் காய்ச்சி மீண்டும் புளிக்க வைத்தப்பின் பருகுவதனால் பல நோய்களுக்கு இது மருந்தாகிறது.
புளிப்பதனால் அல்லது நொதிப்பதனால் பல குடலுக்கும் உடலுக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இவை உடலையும் குடலையும் காக்கின்றன. மேலும் சின்னவெங்காயம், துவையல் போன்ற பதார்த்தங்களை இணைத்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலும் சமநிலைப் படுகிறது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு கூழ் பாரம்பரியமாக எவ்வாறு தயாரிப்பது என இந்த பகுதியில் பார்க்கலாம் – கேழ்வரகு கூழ்.