ஏழிலைப்பாலை மரம் – நம் மூலிகை அறிவோம்

Blackboard tree; Alstonia scholaris; ஏழிலைப்பாலை மரம்

தமிழகத்தில் சாலையோரங்களில் பல இடங்களில் பார்க்கக் கூடிய ஒரு மரம் இந்த ஏழிலைப்பாலை மரம். மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இந்த மரங்களை பெருமளவில் பார்க்க முடியும். நல்ல உயரம் வளரக்கூடியது. இதற்கு ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி, ஏழிலம்பாலை, முக்கம் பாலை, பேய்மரம் என்று வேறு பெயர்களும் உள்ளது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த மரத்தை காணலாம். இதன் மரப்பட்டை, வேர், இலை, பூ, காய் ஆகியவை மருத்துவ பயன்கொண்டது.

இந்த மரத்தின் தண்டு, இலை என அனைத்திலும் லேடக்ஸ் நிரம்பி உள்ளது. எதை ஓடைத்தாலும் பால் வரும். இதன் இலைகள் மாவிலைப்போல் இருக்கும். இலைகள் கூட்டாக ஒரு காம்பில் ஐந்து முதல் ஏழு இலைகளைக் கொண்டிருக்கும். அதனாலேயே இதற்கு எழிலைப் பாலை என்ற பெயர் உள்ளது. அதேப்போல் இந்த மரத்தின் இலைகள் உதிராமல் வளரும் தன்மைக் கொண்டது. எழிலைப் பாலையின் பட்டைகள் தடிமனாக இருக்கும்.

பல மருத்துவகுணங்கள் கொண்ட இந்த மரத்தினை எளிமையாக வளர்க்கலாம். இதன் கிளைகளை வெட்டி மண்ணில் வைத்தாலே போதும் வளரும் தன்மைக் கொண்டது. எழிலைப் பாலையின் பூக்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனுடைய பூக்கள் பூக்கும் காலத்தில் அந்த பூக்களின் மணம் சில கிலோமீட்டர் தூரம் வரை வீசக் கூடும்.

இது ஒரு தெய்வீக மரம். அந்த காலத்தில் யக்ஷி தேவதை வருவாள் என்ற நம்பிக்கையும் கேரளமக்களிடம் உள்ளது. அதே போல் மலைவாழ் மக்கள் இந்த மரத்தில் பேய் உலவுவதாக நம்புகின்றனர். இந்த மரத்திலிருந்து கரும் பலகைகள் செய்யவும் பயன்படுத்துவதுண்டு.

எழிலைப் பாலை மரத்தில் வடியும் பால் தலைவலி, அஜீரணம், மூட்டுவலி, வயிற்று வலிக்கு சிறந்தது.

மலேரியாவிற்கு நல்ல ஒரு மருந்தாக உள்ளது. கொசுவினால் பரவும் நோய்களையும், தொற்றுநோய்க்கும் சிறந்தது. சருமம் சார்ந்த தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. இந்த கசாயம் தோல் நோய்களுக்கு சிறந்தது.

எழிலைப் பாலையின் இலைகளை வறுத்து பொடியாகிக் கொண்டு அதனை சூலை, குன்மம் போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்தது. இந்த பொடியை புண்கள் மீது கட்டிவர விரைவில் புண் மறையும்.

குளிர் ஜுரம், யானைக்கால் வியாதிக்கும் சிறந்த மருந்து இந்த எழிலைப் பாலை.

வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பிற்கு எழிலைப் பாலையின் பட்டை பயன்படும்.

(11 votes)