கண் நோய்

அழகை ரசிக்க மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கடக்க அவசியமாக இருப்பது கண்கள். நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளையும் நமது விழிகள் மூலம் எந்தளவு நாம் பார்க்கிறோமோ அதுவே நமக்கான பார்வைத்திறனாக உள்ளது. இவற்றின் அளவுகளில் ஏற்படும் மாறுதல்களே கண்களின் குறைபாடு உள்ளதை காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் கண்களில் பல நோய்கள் ஏற்படுகிறது. அவற்றில் சாதாரணமாக பலரையும் தாக்கக் கூடியது கண் எரிச்சல், கோழை, கண் சிவப்பு, கண் சூடு, வலி போன்றவையாகும்.

பிரகாசமான பார்வைத் தெளிவை பெறவும் கண் நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாக்கவும் பல வீட்டு வைத்திய முறைகள் இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது காலை வேளையில் சூரிய ஒளியை கண்களில் பெறுவது. இதனால் கண் சம்மந்தமான பல நோய்கள் மறையும். மேலும் கண்களுக்கான பயிற்சி, கண்களை சுத்தமாக குளிர் நீரில் கழுவுவது ஆகியவற்றை தொடர்ந்து செய்து கண்களை சுத்தமாக பாதுகாக்க கண் சம்மந்தமான நோய்களில் இருந்து நாம் நம்மைப் பாதுகாக்கலாம்.

கண் நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க சில வீட்டுக் குறிப்புகள்

கண்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் மூலிகைகளின் மிக முக்கியமானது முருங்கை கீரையும் பொன்னாங்கண்ணியும். இதனை காலையில் உண்டுவர கண்கள் சம்மந்தமான பல நோய்கள் மறையும். அடிவயிற்றில் விளக்கெண்ணை தேய்ப்பதும், வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதும் கண்களுக்கு பலத்தை அளிக்கும்.

கண் எரிச்சல்

  • திப்பிலி, கடுக்காய், அதிமதுரம், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு சுடுநீரில் சிறிது நேரம் ஊறவைத்து பின் அதனுடன் தேன் கலந்து ஒரு தேநீராக பருக கண்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
  • அரைக்கீரை சாப்பிடவும் கண்ணெரிச்சல் நீங்கும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

கோழை

சிலருக்கு அதிகப்படியான உடல் உஷ்ணத்தாலும், கழிவுகள் அதிகம் உடலில் தேங்குவதாலும் கண்களில் கோழை ஏற்படும். இதற்கு சிறந்த ஒரு தீர்வு கொத்தமல்லி இலைகள். மல்லி இலைகளை அன்றாடம் சிறிதளவு எடுத்து நன்கு மைய அரைத்து ஒரு உருண்டை அளவு காலை வேளையில் உண்டு வர கண் கோழை நீங்கும்.

கண் வலி / கண் சிவப்பு மறைய

வில்வம், புளியம் பூ கண்களில் ஏற்படும் சிவப்பு, வலி போன்ற தொந்தரவிற்கு நல்ல பலனை அளிக்கும். வில்வத்தின் கொழுந்து இலைகளை வதக்கி இளம் சூட்டுடன் கண்களில் ஒத்தடம் கொடுக்க வலி, சிவப்பு மாறும். அதேப்போல் புளியம் பூவை அரிது கண்ணைச் சுற்றி பற்றிடவும் அவை நீங்கும். நெல்லிகாயும் வலி, எரிச்சலுடன் கண் சூடு தணிய உதவும்.

(1 vote)