Aristolochia Indica; Indian Birthwort; ஈஸ்வர மூலி
உடலில் தேங்கும் நச்சுக்கள், விசக்கடிகள், கெட்ட இரத்தத்தால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்த மூலிகை இந்த ஈஸ்வர மூலி மூலிகை. ஈச்சுர மூலி, தராசுக் கொடி, பெரு மருந்து, தலைச் சுருளி. ஈசுர மூலி, பெருங் கிழங்கு என பல பெயர்கள் இந்த ஈஸ்வர மூலி மூலிகைக்கு உண்டு.
இந்த மூலிகை ஏறு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் தனி இலைகளாக மாற்றிலையடுக்கத்தில் அமைந்திருக்கும். இந்த இலைகளிலும், வேர்களிலும் எண்ணெய்ச் சுரப்பிகள், எண்ணெய் சத்துக்கள் நிரம்பியுள்ளது. இவை நறுமண எண்ணெய்களாகும். கைப்பு சுவை கொண்ட இலை, வேர் ஆகியவை பயன்படும் பகுதிகள்.
ருது உண்டாக்கியாக செயல்படும் இந்த மூலிகை உடலுக்கு பலமளித்து வெப்பமுண்டக்கியாகவும் உள்ளது. தாது விருத்தியாகவும், மாதவிலக்கு தூண்டியாகவும் கூட செயல்படும் மூலிகை ஈஸ்வர மூலிகை.
உடலில் ஏற்படும் வீக்கம், வெரிகோஸ், குளிர் ஜுரம், இரத்தமின்மை, இருதய நோய், சொறி, சிரங்கு, தேமல், உடல் சூடு மற்றும் விஷங்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும் மூலிகை. இதுமட்டுமல்லாமல் உடலில் ஏற்படும் பல பல உபாதைகளுக்கும் சிறந்த மூலிகை. இரத்தத்தை சுத்தப்படுத்தும் அபாரமான மூலிகை. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் குறிப்பாக மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் மிக சிறந்த மருந்து இது.
ஈஸ்வர மூலி பயன்கள்
கசப்புச் சுவை கொண்ட ஈஸ்வர மூலி இலையை உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை எடுத்து வர இரத்த சோகை, மாந்தம், பேதி, ஜூரம், இருதய நோய், சொறி, சிரங்கு ஆகியன மறையும். விசக்கடிகளுக்கும் இதனை அளிக்கலாம். அதேப்போல் ஈஸ்வர மூலி வேரைத் தேனில் உரைத்து மிளகளவு உள்ளுக்குக் எடுத்துவர இரத்த சோகை, வெண் குஷ்டம் மறையும். ஈஸ்வர மூலி இலையைக் கசக்கி விஷக்கடிவாயில் தேய்த்து விட விஷம் இறங்கும். ஈஸ்வர மூலி மூலிகை வேரை எடுத்து அதனுடன் பத்துமடங்கு நீர் சேர்த்து சுண்டக் காய்ச்சி இரண்டு வேளை கொடுக்க பாம்பு மற்றும் தேள் விஷங்கள், இரத்தப்போக்கு நீங்கும்.