எருக்கன், எருக்கு என்றும் இதனை அழைப்பதுண்டு. இந்த எருக்கஞ்செடி தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலுமே பார்க்க முடியும். எருக்கன் இலைகள் பெரிய இலைகளாக எதிர் அடுக்குகளில் நேராக வளரக்கூடியது. இது ஒரு குறுஞ்செடி வகையைச் சேர்ந்தது. நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரண்டு வகை உண்டு. வெள்ளை எருக்கன் செடியின் பூ விநாயகருக்கு உகந்தது. மேலும் மருத்துவப் பயன்கொண்டது. இவை இறைவழிபாட்டுக்கு மட்டுமல்லாமல் நாட்டு மருத்துவத்திலும், வீட்டு மருத்துவத்திலும் கூட அதிகம் பயன்படுகிறது.
செடி முழுவதுமே வெண்மையான மென்மையான காம்பினால் மூடியது போல் இருக்கும். விதைகள் பஞ்சுடன் இணைந்திருப்பதால் காற்றில் பறக்கக்கூடியதாக இருக்கு. எருக்கன் இலை, பட்டை, பூ, வேர் என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.
எருக்கன் இலைகள் இலை நஞ்சு நீக்கியாகவும், வாந்தி உண்டாக்கக் கூடியதாகவும், பித்தத்தைப் போக்கக் கூடியதாகும், வீக்கங்கள் கட்டிகள் கரைப்பதற்கும் பயன்படுகிறது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றவும், பசியை உண்டாக்கக் கூடியதாகவும், முறை நோய் போன்றவை நோய் நீக்கவும் பயன்படுகிறது. குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் எருக்கன் மருந்து ஆகாது.
வலி குணமாக
பாதையில் நடக்கும் போது சில நேரங்களில் கூர்மையான முட்களோ, கண்ணாடித் துண்டுகளோ, கற்களோ குத்திவிடக் கூடும். தொடர்ந்து அந்த இடத்தில் இரத்தம் கட்டி புடைத்து புரையோடி வீங்கும். இதனையே குதிக்காளான் என்பர். இதனை அறுவைச் சிகிச்சையின்றியே எருக்கன் இலைகளைப் பயன்படுத்தி குணமாக்கலாம். வலி ஏற்படவுடன் தொடக்கத்திலேயே இவ்வாறு சிகிச்சையை பின்பற்ற விரைவில் பூரண பலனை பெறலாம்.
இதற்கு முதலில் மஞ்சள் நிறமடைந்து பழுத்த எருக்கன் இலைகளைச் சேகரித்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக செங்கல் ஒன்றினை எரியும் அடுப்பில் வைத்து பழுக்க சூடாக்கி அதன் மேல் எருக்கன் இலைகளில் மூன்று அல்லது நான்கை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். அந்த இலைகளுக்கு மேலே சூடு பொறுக்கமளவுக்கு குதிகாலை அழுந்த ஊன்றி, பதித்து எடுத்து வர விரைவில் வீக்கம் வடிந்து குணம் தெரியும்.
பாம்புக் கடிக்கு
பாம்பு கடியுண்டவர் உடனடியாக எருக்கன் இலைகள் சிலவற்றைப் பறித்து வாயிலிட்டு நன்றாக மென்று தின்றால் விஷமுறிவு ஏற்படும். அல்லது இலைகளை விழுதாக அரைத்து அதில் ஒரு பெரு நெல்லிக்காய் அளவு உட்கொள்ள விரைவில் பலன் கிடைக்கும்.
தேள் – எலி கடிகளுக்கு
இலைகளின் விழுதை அரைத்து தேள் கடிவாயில் அரைத்த இலையை வைத்து கட்டி விட வேண்டும், அதேப்போல் சுண்டைக்காய் அளவு விழுங்க தேள்கடி விஷம் இறங்கி குடைச்சல் நின்று விடும்.
எலி கடிக்கு
எலி கடியால் பாதிக்கப்படின் தாமதியாது நெல்லிக்காய் அளவு இலை விழுதை எடுத்து விழுங்கி விடவும். அரைத்த இலை விழுதையும் கடிவாயில் கட்ட விரைவில் பலன் கிடைக்கும்.
சருமத்தில் வரும் நோய்களுக்கு
எருக்கன் இலை, வேர், பட்டை சமமாக உலர்த்தி இடித்து தூள் செய்து அதனைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து சருமத்தில் இருக்கும் ரணத்தின் மீது தடவி வரலாம். மேலும் கொட்டைப் பாக்களவு பசுவின் வெண்ணையில் தூளைக் கலந்தும் மூன்று வேளைகள் உட்கொள்ள வேண்டும். உப்பு சேர்க்காத தயிர், பால் சாதம் போன்ற உணவுகளையே உண்டு வர வேண்டும் விரைவில் அரிப்பும், வலி நீங்கி குணம் தெரியும்.
வயிற்று பூச்சி வெளியேற
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற இந்த எருக்கன் இலைகளை கசக்கி எருக்கன் இலைச் சாறு மூன்று துளி எடுத்து அதனுடன் மூன்று பங்கு தேன் கலந்து பருக வயிற்றில் இருக்கும் புழு பூச்சிகள் வெளியேறும்.
மலம் இளக
விளக்கெண்ணையில் சில துளி எருக்கன் இலை சாறை விட்டு சாப்பிட இறுகிப்போன மலம் இளகி வெளியேறும்.
எருக்கம் தைலம்
பலவிதமான தொந்தரவுகளுக்கு சிறந்த ஒரு மருந்து இந்த எருக்கன் இலைகள். உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் சிறந்தது. எருக்கன் இலைகளின் பழுத்த இலைகளை சேகரித்து அதனை சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து வசம்பு, பெருங்காயம், பட்டை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு தைலமாக காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி தைலமாக பயன்படுத்தலாம். உடல் வலிகளை நீக்கும், நான்கு துளி காதில் விட ரத்தம் வடிதல் நீங்கும்.
எருக்கன் பூக்கள்
பசியின்மை, வாந்தி, பேதி, இரைப்பிருமல் போன்ற தொந்தரவுகளுக்கும் எருக்கன் பூக்கள் நல்ல ஒரு பலன் கொடுக்கக் கூடியது. எருக்கன் பூக்களை விழுதாக அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வர இந்த தொந்தரவுகள் நீங்கும்.
பால்வினை நோய்
பால்வினை நோய்க்கும், வெள்ளை, தொழுநோய்க்கும் எருக்கன் சிறந்த ஒரு மருந்து. எருக்கன் பூக்களை காய வைத்து பொடியாக்கி 2 வேளை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய்கள் நீங்கும்.