உலகில் பிறந்த அனைத்து உயிரினத்திற்கும் அவசியமானது உணவு. உயிர் வாழ மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உணவு அவசியப்படுகிறது. உலகில் கண்ணுக்குத் தெரியாத பல ஆற்றல் அதாவது சக்திகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் புவி ஈர்ப்பு சக்தி. நமது உடல் இந்த புவி ஈர்ப்பு சக்தியால் பூமியில் இயல்பாக உள்ளது.
பூமியின் இந்த எல்லையை நாம் தாண்டும் பொழுது நமது உடல் நிலையற்று பறக்க தொடங்கும். அதுவே பூமியின் கட்டுக்குள் இருக்கும் பொழுது ஈர்ப்பு சக்தியால் நிலையாக உள்ளோம். இது நமக்கு கண்ணுக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும் ஒவ்வொரு திசையும் நமது இரத்த ஓட்டமும் இவற்றின் அடிப்படையில் கண்ணுக்கு தெரியாமல் செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் அடிப்படையில் நாம் உண்ணும் உணவும் சீராக செரிமானமாகி ஆரோக்கியத்தை அளிக்க சில திசைகள் உகந்தது, சில திசைகள் உகந்ததல்ல. அன்றைய காலத்தில் குறிப்பிட்ட சமூகமே படிப்பறிவை பெற்றிருந்ததால் நமது முன்னோர்கள் எதையுமே நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்காக சாஸ்திரம் சம்பிரதாயம் என பெயர் வைத்து அனைவரையும் பழக்கப்படுத்தினார்கள்.
காரணம் தெரியாமல் அவர்களும் பின்பற்ற இன்று இவையே மூட நம்பிக்கை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றோ சோம்பேறிகளாக மாறிய நமது சமூகம் எதையும், குறிப்பாக நாம் உண்ணும் உணவை சமைக்க கூட சோம்பேறிகளாக மாறி, முன்னோர்கள் கூறியதை கடைபிடிக்க முடியாத காரணத்தால் அறிவியல் காரணம் கேட்கும் சமூகமாகவும் இன்றைய சமூகம் மாறியுள்ளது.
காந்த ஆற்றல் கொண்ட நமது உடல் சில திசைகளை பார்த்தவாறு உணவுண்பது செரிமானத்தை அதிகரிக்கவும், உண்ட உணவு சீராக உட்கிரகிக்கவும் தான். அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் மட்டுமே நமது முன்னோர்கள் உணவருந்தினர். இன்று போல் மின்சாரம் இல்லாத காரணத்தால் அல்ல, சீரான செரிமானம் என்னதான் மின்சார வெளிச்சம் கிடைத்தாலும் சூரிய ஒளிக்கு ஈடாக செயல்படாது என்று தெரிந்து தான்.
உணவும் திசையும்
அந்த வகையில் கிழக்கு நோக்கியவாறு காலை சூரியனை பார்த்து உணவை உண்ண என்றுமே இளமையுடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ துணைபுரியும். அடுத்ததாக தெற்கு திசை நமது காந்த சக்தியை ஈர்க்கும் திசையாக இருப்பதால் உணவருந்த சிறந்த திசையாக உள்ளது. அடுத்ததாக சூரியன் மாலை வேளையில் அஸ்தமனமாகும் திசையான மேற்கு சில நேரங்களில் சில இடங்களில் உணவருந்த சிறந்த திசை. ஆனால் நமது உடலுக்கு எதிர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தும் வடக்கு திசை எக்காரணத்தைக் கொண்டும் உணவருந்த ஏற்ற திசை அல்ல. வடக்கு நோக்கி உணவருந்தினால் செரிமானம் இயல்பாக இருக்காமல் போகும். இதனால் நோய், தொற்றுகள் ஏற்படும்.
இதையே நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்த சாஸ்திரப்படி அல்லது நல்லது என வாழ்வியலை அழியாமல் பாதுகாக்க தமிழர்களுக்கு ஒரு கோட்பாடாக அளித்தனர். அதன்படி கீழ்காணும் முறைகளை நமது முன்னோர்கள் உணவருந்த எந்த திசை என்றும் உணவு உண்ணும் முறை என்றும் வகுத்து அளித்தனர்.
எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பலன்
- கிழக்கு நோக்கி உண்டால் ஆயுள் வளரும்.
- மேற்கு நோக்கி உண்டால் பொருள் சேரும்.
- தெற்கு நோக்கி உண்டால் புகழ் அதிகரிக்கும்.
- வடக்கு நோக்கி உண்டால் நோய் வளரும்.
உணவருந்தும் முன்
ஒவ்வொரு வேளை உணவருந்தும் முன்னும் இந்த உணவை பெற உதவிய சூரியன், அன்னபூரணி, பிற உயிரினங்கள் (பறவைகள், புழு, பூச்சிகள்) மற்றும் உழவனுக்கும் நன்றி சொல்லி உணவருந்த சிறந்த பலனை பெறலாம். அன்றாடம் நாம் உண்ணும் முன் ஒரு பிடி சோறு பறவைகளுக்கு வைப்பது சிறந்தது.