உலகமே இன்று இயற்கையின் பக்கம் திரும்ப தொடங்கிவிட்டது. மண்பாண்டங்கள், பித்தளை பொருட்கள், செப்புப் பாத்திரங்கள், மர சாமான்கள், மர பொம்மைகள், துணிப்பைகள், மண்ணுக்கு தீங்கு விளைவிக்காத விளையாட்டு பொருட்கள், பனைஓலை பொருட்கள், இயற்கை உணவுகள், நாட்டு விதைகள், பாரம்பரிய பொருட்கள் இப்படி பலவிதங்களில் பல முறைகளில்…
விலைமலிவு என்று பிளாஸ்டிக்கின் பக்கம் ஓடிய சமூகம் இன்று காணாமல் போக தொடங்கிவிட்டது. விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை நல்ல பொருள், நல்ல உணவு, உடலுக்கும் மண்ணிற்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்காத பொருளைத் தேடும் சமூகமாக மாற தொடங்கியது இன்றைய சமூகம்.
சுயநலத்தோடு திரும்பிப் பார்த்த இன்றைய சமூகம் இன்று தங்களை சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கும் இவற்றை கொண்டு சேர்க்கும் எண்ணத்தோடு தங்களது வீடுகளில் நடக்கும் சடங்குகள், விழாக்கள், திருமணங்கள், பிறந்தநாள் போன்றவைகளிலும் பண்டிகைகளுக்கும் இயற்கை சார்ந்த பொருட்களை பரிசளிக்க தொடங்கியுள்ளனர்.
இவை இன்று நேற்று வந்த செயல்முறைகள் இல்லை. காலம் காலமாக விழாக்கள் இயற்கையைச்சார்ந்தே இருந்திருந்தது. அதிலும் குறிப்பாக திருமணங்களை எடுத்துக்கொள்ளலாம்.
முன் திருமணங்கள் வயல்வெளிகளில் நடந்தது. வாழ்த்தவந்தவர்கள் கைகளில் அன்று நெல்மணிகள் அளிக்கப்பட்டது. அதாவது (நெல்) விதைகள் அளிக்கப்பட்டது. இந்த விதைகளை, நெல்மணிகளை வந்தவர்கள் திருமணமான மணமக்களை ஆசிர்வதிக்க தூவினார். சிலகாலங்களில் திருமணம் நடந்த வயலில் தூவிய நெல்மணிகள் முளைத்து நெற்கதிர்களாகி மீண்டும் பல்கிப்பெருகி நெல்லாகவும் அரிசியாகவும் மாறியது. அதாவது திருமணமானவர்கள் வாழ்வில் இந்த விதைகளைப்போல் பல்கிப்பெருகி வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
இன்று இவையெல்லாம் காணாமல் போய்விட்டது. விதைகள் மலடாகியது.. அவற்றிலிருந்து கிடைக்கும் உணவை உண்டவர்களும் மலடாகிப்போனார்கள்.. இந்த நிலையை மாற்ற இளைய சமூகம் விழித்துக் கொண்டு திருமணங்களுக்கு வருபவர்களுக்கு இயற்கையையும் அவற்றை சார்ந்து வாழும் நம் சமூகத்தையும் காக்க இயற்கையான பொருட்களை தங்களது நிகழ்வுகளுக்கு வரும் நண்பர்களுக்கும் சமூகத்தினருக்கும் பரிசளிக்கத்தொடங்கிவிட்டனர்.
அந்த வரிசையில் எதையெல்லாம் தாம்பூலப் பையில் வைத்து நமது சமூகத்தையும் வரக்கூடிய சமூகத்தையும் ஆரோக்கியமான சமூகமாக மாற்றலாம் என்று பார்க்கலாம்.
காய்கறி விதை
திருமணம் நடக்க விருக்கும் இடத்தையும் காலத்தையும் பொருத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசளிப்பது சிறந்தது. அதாவது சித்திரை வைகாசியில் திருமணம் நடத்துபவர்கள் காய்கறி விதைகளை வந்தவர்களுக்கு பரிசாக அளிக்கலாம், ஆடி மாதத்திற்கு பின் திருமணம் நடத்துபவர்கள் அதுவும் வளமான தெந்தமிழகம், கொங்கு மண்டலதை சேர்ந்தவர்கள் நமது பாரம்பரிய நெல் ரகங்களை பரிசாக அளிக்கலாம். இல்லையில்லை நாங்கள் மழையை நம்பியே வாழ்க்கையை நகர்த்துகிறோம் என்ற வகையில் குறைந்த மழையை பெரும் மத்திய வடக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது திருமணங்களில் சிறுதானிய விதைகளை பரிசாக அளிக்கலாம்.
விதை பந்து
இந்த காலகட்டம் இல்லாமல் மற்ற காலங்களில் திருமணங்கள் நடத்துபவர்கள் அரிய ரக மர விதைகளை விதை பந்துகளாக மாற்றி வந்தவர்களுக்கு பரிசளிக்கலாம். இவ்வாறு செய்வதால் வந்தவர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த விதை பந்துகளை வீசினால் கூட போதும் அதிலிருக்கும் விதைகள் தனக்கு கிடைத்திருக்கும் சிறிய அளவிலான நீர் மற்றும் உரத்தைக் கொண்டு வளரத் தொடங்கி விடும்.
கீரை செடிகள்
இவையெல்லாம் இல்லை நாங்கள் நகரங்களில் இருப்பவர்கள் என்கிறீர்களா.. வருபவர்களுக்கு கருவேப்பிலை, கற்றாழை, வல்லாரை, கொத்தமல்லி போன்ற செடிகளை பரிசளிக்கலாம்.
அதிலும் ஒரு வாரமே முளைத்திருக்கும் வெந்தயக் கீரை / வல்லாரைக் கீரையை இயற்கை குடுவையாக விளங்கும் கொட்டாங்குச்சியில் வளர்த்து வந்தவர்களுக்கு பரிசளிப்பது வந்தவர்களை நெகிழ வைப்பதோடு ஆரோக்கியத்தை காக்கும் விழிப்புணர்வு செயலாகவும் விளங்கும்.
காய்கறி செடி / மரக்கன்று
இவ்வாறு காய்கறி செடிகளை வளர்த்தும் பரிசளிக்கலாம் மரக்கன்றுகளை பரிசளிக்க விரும்புவார்கள் அரிய ரக மரங்களான இரும்புக்கு இணையான தோதகத்தி, பனை, நாட்டுநெல்லி, சந்தனம், செம்மரம், கருவேலம், ஆலமரம், வாதுமை, வேங்கை, இலந்தை மர விதை, அரசமர விதை போன்றவற்றை பரிசளிக்கலாம்.
பனை ஓலை
இவை மட்டுமல்ல திருமணங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட விளையாட்டு பொம்மைகளை பரிசளிக்கலாம். பொதுவாக இன்றைய திருமணங்களில் பலூன்கள், பாப்கான்கள், சாக்லேட்டுகள், மெஹந்தி போன்றவற்றை தவிர்த்து பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், மர விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சிகள், நுங்கு வண்டி, தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதோடு பரிசுமாளிக்கலாம்.
மரப்பாச்சி பொம்மை
பொதுவாக திருமணங்களில் மரப்பாச்சி பொம்மைகள் அல்லது தொட்டிலில் இருக்கும் கண்ணன் பொம்மைகள் பரிசளிப்பது வழக்கம். இவற்றைக் கூட வந்தவர்களுக்கும் அளிக்கலாமே. இன்று மர விளையாட்டு சாமான்களை நம் குழந்தைகள் அரிதாக பார்க்கின்றனர். அவர்களின் கைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்த மர பொம்மைகள் பரிசளிக்கலாமே.
காகித பொம்மைகள்
பறக்க விடும் பலூன் களுக்கு பதிலாக பனைஓலை பொருட்கள் விதவிதமாக செய்து அளிக்கலாம். இவை மட்டுமல்ல காகித பொம்மைகளையும் செயல்முறைவிளக்கத்தையும் கற்றுக் கொடுத்து இந்த பொம்மைகளையும் நமது பிஞ்சு குழந்தைகள் கையில் பரிசளிக்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான காகித பொம்மைகளோடு விதை பென்சிலையும் பரிசளிக்கலாம். பென்சில் கரைய கரைய அதிலிருக்கும் விதைகளை நடுவதில் அதிக ஆர்வமும், அக்கறையும் குழந்தைகளுக்கு இயல்பாக தோன்றிவிடும்.
மர சீப்பு
அழகையும், ரசனையையும் விரும்பும் பதின்பருவ இளைஞர்களின் கவலையைப் போக்கும் வகையில் மரத்தால் ஆன சீப்புகளை பரிசளிக்கலாம்.
விசிறி
பெரியவர்களுக்கோ பனையோலையிலான விசிறி, உடலுக்கு குளிரூட்டும் வெட்டிவேர் விசிறி ஆகியவற்றை பரிசளிக்கலாம். இவற்றோடு இன்றிருக்கும் சர்க்கரை வியாதி, உடல் பருமன் போன்றவற்றை போக்கும் இயற்கை உணவு பொருட்களான வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள், நாட்டுரக அரிசிவகைகளையும் பரிசளிக்கலாம். இவற்றால் தயாரான பலகாரங்களையும், இளநீர், நுங்கு, பதநீர், சத்தான இயற்கை சுவையூட்டிய முளைதானிய பால் ஆகியவற்றையும் பரிசளிக்கலாம். அவற்றைப்பற்றிய விழிப்புணர்வும் அளிக்க நல்ல வரவேற்பு கிடைக்கும்.
புத்தகங்கள்
அனைவருக்கும் ஏற்றவகையில் விழிப்புணர்வுடன் கூடிய புத்தகங்கள் (சில ஆரோக்கியம் சார்ந்த புத்தகங்களை பெற – இங்கு இணையவும்) அவசியம். ஏதோ ஒருநாள் இவற்றை அளிப்பதுமட்டும் போதாது. காய்கறி, கீரை விதைகளை பரிசளிப்பவர்கள் அவற்றை எவ்வாறு எளிமையாக பயன்படுத்துவது என்பதையும், இந்த கீரை விதைகளால் நமக்கும், நமது சமூகத்திற்கும் ஏற்படும் நன்மைகளையும் கட்டாயம் தெரியப்படுத்தவேண்டும்.
விதைப்பந்துகளை அளிப்பவர்கள் அந்த விதைகளில் அவசியத்தையும் அவற்றை தூக்கியெறியும் இடத்தையும் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை வண்ண வண்ண ஓவியங்களில் தெரியப்படுத்தலாம்.
இந்த பரிசளிப்பிற்கு முன்னுதாரணமாக பரிசளிப்பவர் இருக்க வேண்டும் என்பது மிகமிக அவசியம். பரிசு ஒன்றாகவும் நாம் வேறாகவும் இருந்தால் வந்தவர்கள் நம்மை மட்டுமல்ல இயற்கையின் பொக்கிஷமான விதைகளையும் நமது பரிசையும் ஏளனம் செய்வார்கள்.
இயற்கையை நேசிப்பவராக மட்டுமில்லமல் ஆரோக்கியத்தை, இயற்கையையும் காக்கும் நல்விதையாகவும் நாம் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தாலே போதும் நாள் அளிக்கும் சிறிய பரிசு பெரிதாக அவர்களின் மனதில் நிலைப்பதோடு வாழ்விலும் எளிதாக பிரதிபலிக்கும். சாதாரண விதைப்பந்தையும் முறையாக பராமரித்து விருட்சமாக மாற்றுவார்கள்.