நவீன தொழில்நுட்பம் பல சாதனைகளை செய்தாலும் மனித ஆரோக்கியத்திற்கு ஆணிவேராக இருப்பது சத்தான நமது பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகள் மட்டுமே. பாரம்பரிய நாட்டு விதைகள் செழிப்பான மண்ணோடு சேர இயற்கையின் பல பரிமாற்றங்கள் இணைந்து உலக ஜீவராசிகளுக்கும் தேவையான ஒருங்கிணைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை அளிக்கிறது. இவ்வாறான உணவுகளில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஒருசேர அளவறிந்து இருப்பதே இதன் சிறப்பு.
பொதுவாக உணவில் அறுசுவை உணவு என்றும் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கொழுப்புசத்து என உணவு தொகுப்பின் மூலமாகவும் அறியலாம். நவீன உணவுகள் இவற்றில் சிலவற்றை மட்டுமே உள்ளடக்கியதாக இருப்பதால் பல நோய்களும், உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. அதுவே நமது நாட்டுரக உணவுகள் இந்த இரண்டு தொகுப்புகளையும் பூர்த்திசெய்யும் வகையில் இயல்பாக இருப்பதே இதன் சிறப்பு. இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது செழிப்பான மண்ணிலிருக்கும் மண்புழுக்களும் செடிகளை பாதுகாக்கும் முறைகளும் தான், அதாவது மூடாக்கு எனப்படும் மண்ணை மூடும் முறை.
மண்ணை தின்று மண்ணிலிருக்கும் மக்கு பொருட்களை தின்று உயிர்வாழும் ஊர்வன வகையைசேர்ந்தது மண்புழுக்கள். மண்ணிற்கு வளத்தை மேம்படுத்தும் மண்புழுக்கள் மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கவல்லது. உழவனின் நண்பன் என்று சொல்வதற்கு பதிலாக ஆரோக்கியத்தின் பாதுகாவலன் என்று மண்புழுக்களை சொல்லலாம். மண்புழுக்கள் எந்த மண்ணில் வாழ்கிறதோ அந்த மண்ணில் விளையக் கூடிய உணவுகளை உண்ணும் பொழுது மனித ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமல்லாமல் அனைத்து ஜீவராசிகளின் ஆரோக்கியமும், பூமியின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
மண்புழுக்களின் தோலில் சுரக்கக்கூடிய சிலவகையான சுரப்பிகள் மண்ணையும் மண்வளத்தையும் காக்கக்கூடியதாக அமைகிறது. மண்ணையும், மண்ணிலிருக்கும் தாவர கழிவுகளையும் வாய்முலமாக விழுங்கி உடலின் இறுதிவரை கடத்தி பின் செரிமாணமாகிய பொருளை மண்புழுக்கள் வெளித்தள்ள அவையே மண்புழு உரமாகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழக்கூடிய இந்த மண்புழுக்கள் மண்ணையும், தாவர கழிவையும் உண்டு மண்ணை வளமாக்குகிறது என்றால் சாதாரண வளம் மட்டுமல்ல, அந்த மண்ணில் வளரக் கூடிய செடிகள் எளிதாக சத்துக்களை கிரகிக்கும் வகையில் செழிப்பாக்குகிறது. செடி வளர்ச்சிக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்தோடு பல வகையான நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளது. இவ்வகை சத்துக்களின் துணையோடு செடிகள் பூச்சி மற்றும் நோய்யெதிர்ப்பு தன்மையுடனும் வளருகிறது. அதுமட்டுமல்லாமல் மண்புழுக்கள் மண்ணின் இயற்பியலை வளமான நிலைக்கு மாற்றுகிறது. மண்ணிலிருக்கும் நோய்க்கிருமிகளை, தீமைசெய்யும் நுண்ணுயிர்களை அழித்து தனது சுற்றுப்புறத்தையும், காற்று, வெப்பம் போன்ற சுற்றுசூழலையும் பாதுகாக்கிறது.
மண்புழுக்களில் பல வகைகளும், பல நிலைகளிலும் வாழக்கூடியவை உள்ளது. இவற்றால் மண்ணிற்கு சத்துக்கள் மட்டுமல்லாது காற்று, நீர் போன்றவைகளும் எளிதாக கிடைக்கப்பெறுவதுடன் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுகிறது. அதனாலேயே செடிவளர்ச்சிக்கு மண்புழுக்களின் உரம் அத்யாவசியமாகிறது. இன்றைய சூழலில் வீட்டுத்தோட்டத்தில் மண்புழுக்களை தொட்டிகளில் நேரடியாக வளர்க்கமுடியாத காரணத்தால் தனியாக வீட்டுக்கழிவுகளில் இருந்தும் மற்ற தாவர கழிவுகளில் இருந்தும் மண்புழு உரத்தை தயார்செய்து வாரம் ஒருமுறை ஒவ்வொரு தொட்டிக்கும் ஒரு கையளவு என்ற விதத்தில் அளிப்பது சிறந்தது.
செடிவளர்ச்சிக்கு மிகமுக்கியமான இரண்டில் ஒன்று மண்புழுக்கள், மற்றொன்று மூடாக்கு.
மரங்கள் எவ்வாறு மண்ணை தனது காய்ந்த இலைகளால் மூடி பனித்துளிகளை ஈர்த்துக்கொண்டு மண்ணின் ஈரப்பதத்தை காத்ததோ அதேபோல் நாம் நமது வீட்டிலிருக்கும் செடிகளுக்கும் மூடாக்கிடுவோம். மண்ணை மூடும் செயலை மூடாக்கிடுவது என்று கூறலாம்.
செடிகள் ஒளிசேர்க்கை செய்ய இலைகள் தான் சூரியனைப்பார்க்கவேண்டும். செடிவளர்ச்சிக்கு அவசியமாகும் பல நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் வாழும் மண் சூரியனைப்பார்க்க வேண்டாம். அதனால் மண்ணை மூடவேண்டும். இதுதான் மூடாக்கு என்பதாகும்.
மூடாக்கிடுவது என்பது காய்ந்த இலைதழைகள், கரும்பு சக்கை,
வைக்கோல், அன்றாடம் கிடைக்கும் சற்று உலர்ந்த காய்கறி கழிவுகள் என மக்கக்கூடிய அனைத்துப்பொருட்களையும் செடிகளின் கீழ் உள்ள மண்ணிலிடுவது. இதனால் மண்மூடப்படும். சில இடங்களில் மக்கக்கூடிய பொருட்கள் மட்டுமில்லாமல் நெகிழிகளைக்கூட இந்த மூடாக்கிட பயன்படுத்துகின்றனர். இதனால் மண்ணிற்கும் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படும். அதனால் அவற்றை தவிர்த்து மக்கக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது அவசியம்.
- மேலும் இந்த மூடாக்கிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..
- மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும், நீரின் அளவு குறையும்.
- மண்ணின் தட்பவெப்பநிலை காக்கப்படும். (வெயில்காலத்திலும்)
- மண்ணை மூட, மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள், மண்புழுக்களுக்கு அவை சிறந்த கூடாரமாக அமையும்.
- மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்களுக்கும், மண்புழுக்களுக்கும் எளிதாக உணவு கிடைக்கும்.
- மண் வளமாகும். பழுத்த இலைகள் சிதைந்து மக்கு உரமாகி நேரடியாக செடிகளுக்கு கிடைக்கப்பெறும்.
- செடி, கொடி, மரங்கள் செழிப்பாக இருக்கும்.
- மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் எளிதாக கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
- களைச்செடிகளை வளரவிடாது.
- பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
- மண்ணரிப்பு தடுக்கப்படும். (மழைக்காலங்களில் தொட்டிகளில் அல்லது நிலத்தில் இருந்து மண் தெறித்து வெளியேறுவது தடுக்கப்படும்).
- பழுத்த இவற்றிலிருந்து கரிம சத்துக்கள் அதிகம் மண்ணிற்கு கிடைக்கும்.
செடிகளுக்கு மூடாக்கிடுவதன் மூலம் தண்ணீரின் தேவை குறைவது மட்டுமல்ல இவ்வளவு நன்மைகளும் செடிகளுக்கு கிடைக்கிறது.
மூடாக்கு, மண்புழு உரமும் செடிவளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். இவையிரண்டும் சீராக இருக்க செழிப்பான செடிகளும், சுவையான சத்தான காய், பழங்களும் சாத்தியமாகும்.