உடலுக்கு அருமருந்தாக இருக்கும் சுவை துவர்ப்பு. இரத்தத்தை சுத்திகரிப்பது மற்றும் இரத்த விருத்திக்கும் பிரதானமானதாக இருப்பதும் இதுவே. இந்த சுவை அபரிவிதமாக இருக்கும் இரண்டு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கசாயமே இந்த மா நாவல் கசாயம். நாம் உண்டு தூரப்போடும் நாவல் கொட்டை மற்றும் மாங்கொட்டையை கொண்டு மிக எளிமையாக வீட்டிலேயே இதை தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் கசாயம் செய்து பருகிவர இரண்டு மாதங்களில் நீரிழிவு கட்டுக்குள் வருவதையும், குறைவதையும் காணமுடியும். மேலும் இந்த கசாயம் இரத்த சோகை, மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் பெண்களுக்கும் சிறந்தது.
முதலில் மாம்பழம் கிடைக்கும் காலத்தில் (சித்திரை மாதம்) மாம்பழத்தை உண்டபின் அதன் கொட்டைகளை தூர போடாமல் சிறிது வெயிலில் காயவைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேப்போல் நாவற்பழங்கள் கிடைக்கும் காலங்களில் (ஆடி மாதம்) பழங்களை உண்ட பின் அதன் கொட்டைகளை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றில் இருக்கும் பருப்பை மட்டும் தனியாக எடுத்து காய வைக்கவும். நாட்டு நாவல் பழ கொட்டைகள் சிறந்தது.
இரண்டு பருப்புகளும் தயாராக இருக்க, இரண்டையும் ஒன்றாக சேர்த்து நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும். பின் அவற்றை மாவு சல்லடையில் சலித்து எடுத்துக் கொண்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியில் அன்றாடம் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனை சூடாக இருக்கும் வெந்நீரில் போட்டு ஓரிரு நிமிடம் மூடி வைத்து பின் கலந்து குடிக்க வேண்டும். இதனை காலையில் குடிக்க விரைவில் சிறந்த பலனை பெறலாம். இரண்டு மாதங்கள் பருக நீரிழிவு கட்டுக்குள் வரும்.