கொத்தமல்லி பயன்கள்

Coriandrum Sativam; Coriander Seeds; கொத்தமல்லி

தமிழக உணவுகளில் பெரும்பாலும் உணவு தயாரித்தப்பின் இறுதியில் சேர்க்கப்படும் இயற்கை மணமூட்டியாக, சுவையூட்டியாக இருக்கும் கீரைகளில் ஒன்று கொத்தமல்லி. என்ன கொத்தமல்லி கீரையா? என்கிறீர்களா.. ஆம், கொத்தமல்லியும் கீரைகளில் ஒரு வகை தான். இரும்பு சத்துக்கள், வைட்டமின் சி சத்துகள் உட்பட பல சத்துக்களும் உயிர்சத்துக்களும் நிறைந்த கீரை. இன்று பொதுவாக சந்தைகளில் கிடைக்கும் கொத்தமல்லி ஹைப்ரிட் ரகங்களாக பெரும்பாலும் உள்ளது. நாட்டு கொத்தமல்லி கீரையின் தண்டுகள் சிறிதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். மேலும் நாட்டு கொத்தமல்லி இலைகளை சாதாரணமாக தொட்டாலே போதும் பல மணிநேரத்திற்கு நமது கைகளில் கொத்தமல்லி நறுமணம் வீசும். மேலும் இது மருத்துவகுணங்கள் அதிகம் நிறைந்ததாக இருக்கும்.

எங்கு கிடைக்கும் இந்த நாட்டு கொத்தமல்லி என்கிறீர்களா? வீட்டில் மிக எளிதாக நாட்டு தனியா விதைகளைக் கொண்டு இதனை வளர்க்க முடியும். எவ்வாறு கொத்தமல்லியை வீட்டில் வளர்க்கலாம் என விரிவாக கொத்தமல்லி வளர்ப்பு என்ற பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம். கொத்தமல்லிக்கு தனியா, உருள் அரிசி, கொத்தமுரி என பல பெயர்கள் உள்ளது. கொத்தமல்லி இலைகள் சிறகு வடிவக் கூட்டிலைகள் மாற்றடுக்கில் இருக்கும். இதன் தண்டுகளின் நுனியில் கூட்டாக வெண்ணிற பூக்கள் இருக்கும். கொத்தமல்லியின் செடியின் இலை, விதை ஆகியவை பயன்படும் பகுதிகள். பசியைத்தூண்டும் பண்புகளும், சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் கொண்டது கொத்தமல்லி.

கொத்தமல்லி பயன்கள்

கொத்தமல்லி இலைகள் பித்தத்தினால் தோன்றும் நோய்கள், காய்ச்சல், சுவையின்மை, பலமின்மை, ஆண்மைக் குறைவு, அஜீரணம், வலிப்பு நோய் களுக்கு சிறந்த பலனை அளிக்கும், அதேப்போல் கொத்தமல்லி விதைகள் அதாவது தனியா இரத்தப் போக்கு, இரத்தமூலம், அஜீரணக் கழிச்சல், இருதய பலவீனம், வயிற்று வலி, தலை வலி, தலைசுற்றல், வாய் நாற்றம், விக்கல், தலைவறட்சி, கல்லடைப்பு, கண்நீர் வடிதல், இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்தது.

தனியா – சில மருத்துவம்

  • கொத்தமல்லி விதையை வாயிலிட்டு மென்றுவர வாய் நாற்றம் நீங்கும்.
  • கொத்தமல்லி விதையை சிறிது காடி நீரில் அரைத்துக் கொடுக்க சாராய வெறி அடங்கும்.
  • வீக்கங்கள், கட்டிகள் கரைய அல்லது பழுத்து உடைய கொத்தமல்லி இலையை நல்லெண்ணையில் வதக்கிக் கட்டி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • தனியாவுடன் அதற்கு பாதி ஆளவு சந்தனம், நெல்லி வற்றல் சேர்த்துப் பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து தினமும் 2 வேளைகள் ஒரு சிட்டிகை அளவு எடுத்து வர அஜீரணம், தலைசுற்றல், பலமின்மை, ஆண்மைக்குறைவு, நெஞ்செரிச்சல், இருதய பலவீனம், விக்கல் முதலியன தீரும்.
  • கொத்தமல்லி விதையை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடிநீராக செய்து குடித்துவர தைராய்டு, உட்சூடு, விக்கல், நாவறட்சி, குழந்தை மாந்தம், பெரு ஏப்பம் தீரும்.
(8 votes)