Cocos Nusifera; Coconut Tree; தென்னை
தமிழகத்தில் கிராமங்கள், நகரங்கள், வீடுகளில் பரவலாகப் பார்க்கப்படும் ஒரு மரம் தென்னை மரம். மரங்களாக மட்டுமில்லாமல் தென்னந் தோப்புகளுக்கும் தமிழகத்தில் பஞ்சமில்லை. தெங்கு, தென்னம் பிள்ளை, புல்மரம், தாழை, பூலோக கற்பக விருட்சம், நாளி கேரம் என பல பெயர்களும் இந்த தென்னை மரத்திற்கு உண்டு. இந்த மரத்தின் அனைத்து பாகங்களுமே பயன்படும் பகுதிகள். இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அடிக்கடி தென்னை மரத்தை விவசாய நிலத்துடன் ஒப்பிடுவதுண்டு. தென்னையிலிருந்து தேங்காய், தென்னை மட்டை, நார், ஓலை என ஒரு பொருளைக் கொண்டு பல வழிகளில் ஒரு விவசாயி லாபத்தை ஈட்டுவதுபோல நமது ஒரு நிலத்தையும் மாற்றினால் உழவன் அதிலிருந்து பல வழிகளில் லாபத்தையும் எந்த சூழலிலும் பெறமுடியும். இவ்வாறு நமது நிலத்தை மாற்றினால் ஒருபோதும் விவசாயிக்கு எந்த கால, சூழலிலும் நஷ்டம் ஏற்படாது என்பர். அவ்வளவு சிறப்பான மரம் இந்த தென்னை மரம்.
தென்னை மரம் பருத்து கிளைகளற்று, நீண்டு வளர்ந்த தண்டினைக் கொண்ட மரம். தண்டின் நுனியில் தொகுதியாக பல இலைகள் காணப்படும். கிளைத் தலையுடைய கூட்டில் காம்பற்ற சிறு மலர்கள் தோன்றும். இந்த மலர்களை உறுதியான மடல் பாதுகாப்பாக மூடும். இதன் கனிகள், காய்கள் குலை குலையாக இருக்கும். இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்ட தென்னையின் சமூலமே பயனளிக்கக் கூடியது. இலை, குருத்து, பூ, பாளை, காய், வேர்கள், சிரட்டை என ஒவ்வொன்றுமே சிறப்பானது. அதிலும் இறைவனுக்கும் படைக்கும் மிக பிரதானமான ஒரு பொருள் என்றால் அது தேங்காய். தாய்ப்பாலுக்கு இணையான பல சத்துக்கள் தேங்காயில் உள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றலும் சிறுநீரை பெருக்கும் தன்மையும் நிறைந்தது தென்னை. மேலும் மலச்சிக்கல், அஜீரணம், குடல் புண், வெள்ளை, வெட்டை, பெரும்பாடு, உட்காய்ச்சல், கழிச்சல், மூடி உதிர்தல், நீர்க்ககட்டு, விரைவீக்கம், நீரிழிவு போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை அளிப்பதுடன் உடலுக்கு நல்ல பலத்தையும் அளிக்கிறது. இளநீர் உடல் வெப்பத்தை நீக்கி, குளிர்ச்சியைத் தரும். இளநீரில் செவ்விளநீர் என்ற வகையுமுண்டு அது மிக அபூர்வமானது. தமிழகத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். இதனை வெட்டினாலும் இதன் மட்டைகள் வெளிறிய சிவப்பு நிறத்திலிருக்கும் அதாவது ஆரஞ்சு நிறத்தில் இதன் உள் மட்டைகள் காணப்படும். இது அதிகமான மருத்துவகுணங்களைக் கொண்டது. பொதுவாக சந்தைகளில் இது கிடைப்பதில்லை. நீரெரிச்சல், நீர்க்கடுப்பு, உட்சூடு போன்றவற்றிற்கு இந்த செவ்விளநீர் சிறந்தது.
நீர்ச்சுருக்கு, அதிமூத்திரம், நீரிழிவு தீர
இளம் தேங்காயின் மட்டையை இடித்துப் பிழிந்த சாறெடுத்து அதனில் கால் கப் அளவு காலையில் பருகிவர நீர்ச்சுருக்கு, அதிமூத்திரம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு, மூலரணம் தீரும் அல்லது அவற்றை மென்றும் உண்ணலாம், துவர்ப்பாக இருக்கும். இது இரத்தத்தை சுத்திப்படுத்தும், புது இரத்தத்தையும் பெருக்கும்.
உள்ளுறுப்புகளில் ஏற்படும் புண்ணுக்கு
தேங்காய்ப் பாலை வாய் கொப்பளித்தும், குடித்தும் வர வயிற்றுப் புண், உதட்டுப்புண், நாக்குப்புண், உள்வாய்ப் புண், தொண்டைப் புண் நீங்கும். உப்பு, புளி, காரம் தவிர்க்க வேண்டும்.
விரைவீக்கம் கரைய
விரைவீக்கம் கரைய முற்றிய தேங்காயைத் துருவி விளக்கெண்ணெயிலிட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். இதனை இளஞ்சூட்டில் இரவு தோறும் கட்டிவர விரைவீக்கம் கரையும்.
தாது கெட்டிப்பட / மலச்சிக்கல் தீர
வெடிக்காத தேங்காய்ப் பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பாலில் அரைத்து ஓரிரு ஸ்பூன் அளவு காய்ச்சிய பாலில் கலந்து தினமும் 2 வேளை உண்டுவர நீர்த்துப்போன தாது கெட்டிப்படும். நரம்புத்தளர்ச்சி, விரைவீக்கம், மலச்சிக்கல் ஆகியவற்றிற்கும் சிறந்தது.
தாய்ப்பால் சுரப்பு நிற்க
தென்னம்பூவை வதக்கி மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு நிற்கும்.
வெள்ளை, வெட்டை தீர
தென்னம்பூ ஒரு நெல்லிக்காய் அளவு / சிறிதளவு வாயிலிட்டு மென்று தின்ன வெள்ளை, வெட்டை, இரத்த வாந்தி, கட்டி, சிலந்தி, உட்சூடு, மேகநோய் மறையும்.