Syzygium Aromaticum; Clove; கிராம்பு
மசாலாக்கள் சேர்த்து செய்யும் பல உணவுகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ஒரு நறுமண பொருள் என்பதால் பலருக்கும் இலவங்கம் தெரியும். அதுமட்டுமல்லாமல் பற்களில் ஏற்படும் வலிகளுக்கும் தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை இலவங்கம் அளிக்கும் என்பதனாலும் பலர் கிராம்பை பயன்படுத்துவதுண்டு. இதுமட்டும் தான் இலவங்கத்தின் பயன்களா என்றால், உயிர்காக்கும் மிக பொருளாகவும் இது உள்ளது என்பதே உண்மை.
கிராம்பு, அஞ்சுகம், கருவாய்க் கிராம்பு, உற்கடம், வராங்கம், திரளி, சோசம் என பல பெயர்களும் இந்த இலவங்கத்திற்கு உண்டு. பெரும்பாலும் மலைப் பிரதேசங்கள், குளிர் அதிகம் உள்ள இடங்களில் விளையும் மர வகையைச் சேர்ந்தது இந்த கிராம்பு. இவை தனி இலைகளைக் கொண்டது. இலைகளில் நறுமண எண்ணெய் சத்துக்கள் உள்ளதால் இலைகள் நறுமணமுடையவையாக உள்ளது. இந்த மரத்தின் மலராத மொட்டுக்களை பறித்து காயவைத்து கிடைப்பதே நாம் பயன்படுத்தும் கிராம்பு. காரமும், விறுவிறுப்பும் கொண்ட நன்கு காய்ந்த இந்த மலராத மொட்டுக்களே இந்த மரத்தின் பயன்படும் பகுதியாகவும் உள்ளது. உணவு, அழகு சாதன பொருட்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்களில் இதனை பயன்படுத்துவதுண்டு.
கிராம்பு மருத்துவம்
பசியைத் தூண்டும் ஆற்றல் கொண்ட இந்த கிராம்பு காது நோய்கள், பல் நோய்கள், ஆசனவாய்க்கடுப்பு, படை, மயக்கம், வாந்தி, இரத்தப் போக்கு, கண்ணில் பூ விழுதல் போன்ற தொந்தரவுகளுக்கும் மிக சிறந்த பலனை அளிக்கும். அஜீரணத்தைப் போக்கும் தன்மைக் கொண்டது. கிராம்பு தலைவலி, உடல் அசதி ஆகியவற்றையும் தீர்க்கும். சுவாச தொந்தரவுகள், மூச்சு விடுவதின் சிரமம், உடலின் பிராண சக்தி குறையும் பொழுதும் கிராம்பை வாயில் உள்ளடக்க இந்த தொந்தரவுகள் நீங்கும். உடலில் ஏற்படும் தொற்றுநோய்களை விரட்டும் ஆற்றலும் இதற்கு மிக அதிகம்.
சுருள் பட்டை, கிராம்பு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு அன்றாடம் பசும் பாலில் காய்ச்சி பருகிவர உடலில் ஏற்படும் மேற்கூறிய பல நோய்கள் அகலும். கிராம்பை நீர் விட்டு வெண்ணெய் போல் அரைத்து மூக்கிலும், நெற்றியிலும் பற்றுப் போட நீர் ஏற்றம், தலைவலி, தலைபாரம் ஆகியவை மறையும். கிராம்பை புகையவிட்டு இதன் புகையை வாயின் வழியாகக் கொள்ள தொண்டைப்புண், தொண்டைக் கம்மல் பறந்தோடும்.
கிராம்பை தணலில் வதக்கி எடுத்துவைத்துக் கொண்டு அவ்வப்பொழுது சுவைத்து வர பற்கள் கெட்டிப்படும். தொண்டைப் புண், வாய்ப்புண், ஆசனவாய்க் கடுப்பு மறையும். மலச்சிக்கல் நீங்கி, சுகபேதியாக நிலாவாரைக் குடிநீருடன் இரு சிட்டிகை அளவு கிராம்புத் தூள், சுக்குப்பொடி சேர்த்து உட்கொள்ள மலச்சிக்கல் நீங்கி சுகபேதியாகும்.