குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் விருப்பமான காய்கறி வகையில் மிக முக்கியமான காய் காலிபிளவர். கோபி 65, காலிபிளவர் வறுவல் மட்டுமில்லாமல் குருமா, பிரியாணி போன்ற உணவுகளில் இருக்கும் காலிபிளவரை தனியாக எடுத்து சுவைப்பார்க்கும் பழக்கம் இன்றும் அனைவரிடமும் உண்டு. சுவை, மணம் மட்டுமில்லாமல் காலிபிளவர் சத்துக்களும் குறிப்பிடத்தக்கது.
காலிபிளவர் பயன்கள்
இரைப்பை, பெருங்குடல் புற்றுநோய் வாய்ப்பை பெருமளவில் குறைக்கும் ஆற்றல் கொண்டது காலிபிளவர். உறுதியான நரம்புகளை அளித்து, எலும்புகளுக்கு பலமளிப்பதும், வயிற்றில் வரும் பல உபாதைகளை போக்கவும் சிறந்த காய். நுரையீரல், இருதயத்தை பாதுகாத்து, உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டதும் இந்த காலிபிளவர். கருவில் வளரும் குழந்தையின் மூளை, உடல் உறுப்புகளுக்கும் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும். ஹோர்மோன் சமநிலைக்கும் உதவும்.
அன்றாடம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள், வைட்டமின் கே சத்துக்கள், நார்சத்துக்கள் காலிபிளவரில் நிறைந்துள்ளது. திருமணமான பெண்களுக்கு சிறந்தது. குழந்தைப்பேறு அளிப்பதுடன் சிறந்த இரத்த ஓட்டத்தையும் அளிக்கும் பூ இந்த பூக்கோஸ் என்ற காலிபிளவர். என்றும் இளமையுடன் இருக்க உதவும்.
மூட்டுவலி, முடக்குவாதம், வீக்கங்களுக்கும் சிறந்த காய். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அவ்வபொழுது காலிபிளவர் உட்கொள்ள நல்ல பலனை பெறலாம்.
அதிக சத்துக்கள் காலிபிளவரில் இருந்தாலும் இன்று பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் காலிபிளவர் அனைத்துமே கொடிய இரசாயன நச்சுக்கள், பூச்சிக் கொல்லிகள் தெளிக்கபட்டே சந்தைக்கு வருகிறது. காய்கறிகள், பழங்கள் வரிசையில் அதிக இரசாயனங்கள் கொண்டுள்ள காய்கறியும் இதுவே. அதனால் இரசாயனங்கள் இல்லாமல் விளைவிக்கப் பட்ட காலிபிளவரையே பயன்படுத்துவது சிறந்தது.
காலிபிளவர் எல்லா காலத்திலும் கிடைக்காது. அதனால் கிடக்கும் காலத்தில் விலை சற்று மலிவாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும். கரும்புள்ளிகள், அழுகல் இருக்க அவற்றை வாங்கக் கூடாது.
காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து எடுக்க வேண்டும். சிறு சிறு புழுக்கள் ஆங்கங்கே இடுக்குகளில் இருக்கும், அவற்றை நன்கு கவனமாக பார்த்து சுத்தம் செய்யவேண்டும்.
சமைக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் காலிபிளவரில் இருக்கும் சிறு சிறு புழுக்கள் மடிந்து விடும். பின் அவற்றை நீக்கிவிட்டு நன்கு கழுவியபின் சமைக்க வேண்டும்.