Eletaria Cardamomum; Caramom seeds; Elachi
ஒவ்வோரு வீட்டிலும் இருக்கும் ஒரு நறுமணப்பொருள் ஏலக்காய். இது இல்லாத இனிப்பு வகை பலகாரங்களே இல்லை எனலாம். ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையில் ஒவ்வொருநாளும் நாம் பயன்படுத்தும் ஒரு நறுமண மருந்துப் பொருள் ஏலக்காய். மேலும் இறைவனுக்குப் படைக்கும் உணவுகளிலும் ஏலக்காய்க்கு ஒரு தனி இடமுண்டு. சர்க்கரைப் பொங்கல், மசாலா டீ, இனிப்பு அப்பம், இயற்கை சாறுகள், இனிப்பு உணவுகள் என அனைத்திலும் ஏலக்காய் சேர்க்கும் நம்மிடம் உள்ளது. நறுமணப்பொருள் என்பதற்காக மட்டுமா இந்த ஏலக்காயை நாம் உணவுகளில் பயன்படுத்துகிறோம். இல்லை நறுமணத்துடன் மருத்துவ பண்புகளும் ஏலக்காயை உணவுகளில் அவசியமாக்குகிறது.
பொதுவாக மலை பிரதேசங்களிள் மூன்று அடி நீளம் வளரக்கூடிய ஒரு செடி வகை தாவரம் ஏலக்காய். துடி, ஆஞ்சி, கோரங்கம் என பல பெயர்கள் ஏலக்காய்க்கு உண்டு. இந்த தாவரத்தின் அடியிலிருந்து வெளி வரும் பகுதியில் பூக்கள், காய்கள் காணப்படும். காய் பச்சை நிறத்தில் காய்க்கும். காயில் மூன்று அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் 5 – 8 விதைகள் வரை இருக்கும். இதன் இந்த விதைப் பகுதியே மருத்துவ பயன்கொண்டது. இதில் நறுமண எண்ணெய் சத்துக்களும் உள்ளது.
சிறுநீர்ப் பெருக்கியாக பயன்படும் ஏலக்காய் வாய் மற்றும் தொண்டையில் ஏற்படும் நோய்கள், குடல்நோய், இருமல், நெஞ்சில் கோழை கட்டுதல், நீர்ச்சுருக்கு, வாந்தி, வயிற்றுப் போக்கு, வாய் நாற்றம், வயிற்றுப் பொருமல், ஆண்மைக் குறைவு, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், மாந்தம், வயிற்றுப்போக்கு, வியர்க்குரு, உடல்சூடு, பித்தம், உஷ்ண பேதி போன்றவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும்.
அஜீரணம் நீங்க
ஏலக்காய், சீரகம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து வறுத்துப் பொடியாக்கி ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வீதம் காலையில் மட்டும் சாப்பிட்டுவர அஜீரணம் நீங்கும்.
பித்த தலைவலி
பல மருத்துவகுணம் கொண்ட ஏலத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடிநீராக / தேநீராக காய்ச்சி அன்றாடம் இரண்டு முறை பருகிவர பித்தத்தால் ஏற்படும் தலைவலி தீரும்.
வாய், தொண்டைப் புண்கள் மறைய
நெல்லி, ஏலம், வால் மிளகு, அதிமதுரம், சந்தனம் ஆகியவற்றின் பொடிகளை ஒரு ஸ்பூன் விதம் எடுத்து சர்க்கரை சிறிது சேர்த்து வைத்துக்கொண்டு இரண்டு சிட்டிகை வீதம் எடுத்து வர இருமல், வாய், தொண்டைப் புண்கள், வயிற்றுவலி, நாவறட்சி, வாந்தி ஆகியன தீரும்.