சங்கு பூ / Butterfly Pea / Sangu Poo

உடல் பருமன், நீரிழிவு, சோர்வு, நியாபக மறதி, இரத்த ஓட்ட குறைபாடு, மன உளைச்சல், மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, கருப்பை கோளாறுகள், மலச்சிக்கல், கண்பார்வை கோளாறு, இளநரை, முகப்பொலிவின்மை, அறிவாற்றல் குறைபாடு, நோய்யெதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற தொந்தரவுகளில் சிக்கியுள்ளீர்களா? இதோ உங்களுக்கான நமது பாரம்பரிய உணவு.. சங்கு புஷ்பம்.

Clitoria ternatea L., சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இந்த கொடிவகை செடி. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவதுண்டு.

பொதுவாக சாலை ஓரங்களில், வேலியோரங்களில் காணப்படும் இவற்றின் பூ, இலை, வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்கள் நிறைந்தது. பொதுவாகவே இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்துமே மருத்துவகுணங்களும், உயிர்காக்கும் தன்மையும் கொண்டது என்பதை மறந்துவிடக்கூடாது. தேங்காய், எலுமிச்சை, வாழை வரிசையில் சங்குபுஷ்பமும் அடங்கும்.

வெள்ளை, நீல நிறங்களில் காணப்படும் சங்கு பூ ஆசிய நாடுகளை தாயகமாக கொண்டிருந்தாலும் இன்று பல நாடுகளிலும் விளைவிக்கப்படும் செடிவகையாகும். மண்ணிற்கு நல்ல தழைச்சத்தினை அளிக்கக்கூடிய செடிவகையான இவற்றின் இரண்டு நிற மலர்களும் மருத்துவகுணங்கள் நிறைந்தவை.  

வெள்ளை நிற பூக்கள் கொண்ட சங்குப்பூ செடிகள் வேரை கொண்டு கஷாயமாக உட்கொள்ள வெட்டை, தலை நோய், சுரம், பேதி பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள், புண்கள் ஆகியவற்றிற்கு போக்கலாம்.

ஊதாநிற பூக்கள் உள்ள சங்குப்பூ வேர்களைக்கொண்டு கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய், மூட்டு வலி முடக்குவாதம், தலை பாரம், மலச்சிக்கல் ஆகியவற்றை போக்கலாம்.

மருத்துவகுணங்கள் கொண்ட இவற்றின் விதைகள் நல்ல மணமுடையதாகவும், புளிப்பு சுவையையும் கொண்டவை. விதைகளுக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உண்டு மேலும் குடலில் உள்ள பூச்சிகளையும் போக்கும் தன்மை கொண்டவை. இலைகள் துவர்ப்பு சுவையை அளிக்கிறது.

கருப்பை கோளாறு

ஆங்கிலத்தில் இந்த சங்குப்பூ மலர்களை Butterfly Blue Pea என்று அழைக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்பு போல் இருக்கும் இந்த மலர்கள் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், குழந்தையின்மை தொந்தரவுகள், மலட்டு தன்மை, மாதவிடாய் கோளாறுகள், சிறுநீர் தொற்றுகள் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. பால்வினை, வெள்ளைபோக்கு பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

இரத்தக்கொதிப்பு

படபடப்பு, இரத்தக்கொதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும் இந்த சங்கு பூக்கள் உடலின் கார அமிலத்தன்மையை சமன்படுத்துவதோடு, உயிரணு சிதைவையும் தடுக்கிறது. ஊதா நிற பூக்களில் உள்ள ஆன்தோசயனின் உடலில் உள்ள புற்றுநோய்க்கு மருந்தாகவும், உடலில் உள்ள தொற்றுகள் மற்றும் தீமை செய்யும் கிருமிகளை அழிக்கக்கூடியதாகவும் உள்ளது.

கொழுப்பை கரைக்க

உடலில் கொழுப்புக்களை கரைக்க கூடிய இவை இதயத்திற்கு பலத்தை அளிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சமீபத்திய ஆய்வுகள் மாவுச்சத்து உணவுகளை ஜீரணிக்க இந்த சங்குப்பூக்கள் உதவுகிறது என வெளியிட்டுள்ளது.

சிறுநீரக பாதிப்புகளுக்கு – சங்குப் பூ தேநீர் / Butterfly Pea Tea

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் சங்குப்பூ தேநீர் உடலில் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகளுக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு சங்குபூ

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த சங்குப்பூக்கள் உடலில் உள்ள கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.

என்றும் இளமைக்கு சங்குபூ

யாருக்கு தான் அழகாகவும், பளபளவென்று பொலிவான முகமும், கருகருவென்று கூந்தலும் பிடிக்காது. இவற்றை பெறவேண்டுமா அப்படியானால் காட்டாயம் அதற்கு உதவுகிறது சங்குப்பூக்கள். அதுமட்டுமல்ல என்றுமே இளமையாக உற்சாகமாகவும் இருக்கலாம் நமது சங்குப்பூக்களின் உணவுகளோடு. புரத சத்துக்களை சேதப்படுத்தும் மூலக்கூறுகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது. அதனால் மேனியையும், முகப்பொலிவையும் அளிப்பதோடு இளமையுடனும் புத்துணர்வுடனும் இருக்க உதவுகிறது.

நீரிழிவு

உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் அபார சத்துக்கள் இந்த சங்குப்பூக்களில் உள்ளது. இன்சுலின் சுரப்பையும் சீராக வைக்க உதவுகிறது.

மன அழுத்தம், மன உளைச்சல்

மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றை போகும் மாமருந்தாக சங்கு பூக்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் மன ரீதியான பதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.

மூட்டுவலிக்கு, வாத நோய்

உடலில் ஏற்படும் நெறி கட்டிகள், மூட்டுவலிக்கு, வாத நோய் வீக்கங்களை சங்கு பூ இலை, செடி குறைக்கும் தன்மை கொண்டது. ஒருவாரம் இதனை பருக சிறந்த பலன் கிடைக்கும்.

சிறுநீர் கடுப்பு, மாதவிடாய் காலங்களில் வரும் வலிகளையும் குறைக்கும் தன்மை தொண்டது.

மலச்சிக்கல், மூலம்

மலச்சிக்கல், மூலம் உள்ளவர்கள் தொடர்ந்து சங்குப்பூக்களை பயன்படுத்த சிறந்த நிவாரணம் பெறலாம். விளக்கெண்ணெயுடன் சங்கு பூ இலைகளை அரைத்து விழுதை காய்ச்சி தைலமாக தயாரித்துக்கொண்டு மூலத்திற்கு மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு சங்கு பூ  

குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் சங்குப்பூக்களை அவ்வப்பொழுது சேர்ப்பதால் குழந்தைகளுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். இது நினைவாற்றலை  அதிகரிக்கும் ஆங்கில மருந்துகளில் ஒரு மூலப்பொருளாகவும் உள்ளது. அதிலும் தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வினையும் போக்கும். சிறந்த Memory Plus மருந்து என்பதற்காக உடனே அதிகமாக உட்கொள்ள கிளம்பிவிடாதீர்கள். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு குழந்தைகளுக்கு மாதம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்த சங்குப்பூக்களில் தயாரிக்கப்படும் உணவுகளை அளிப்பது போதுமானது.

சுவாச சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல நிவாரணத்தை சங்குப்பூக்களின் தேநீர் அளிக்கும். இதனை வீட்டில் வளர்க்க சுவாச ரீதியான தொந்தரவுகள், மன ரீதியான தொந்தரவுகள் அகலும்.

நெறிக்கட்டிகள் அல்லது வியர்வை வெளியேறாமல் கட்டிகள், புண்கள், துர்நாற்றம் இருந்தால் சங்கு புஷ்பம் இலைகளை சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுத்து அருந்த நீங்கும். சங்கு பூ இலைகளை அரைத்து கட்டிகள் மீது பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும். இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருமலுக்கு சங்குப்பூ, இலை கஷாயம் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

அதிகமாக சங்கு பூக்கள் கிடைக்கும் காலங்களில் அவற்றை நிழலில் உலர்த்தி காயவைத்து எடுத்துவைத்துக்கொள்ளலாம். தேவைக்கேற்ப நீரிழிவு, இருதய தொந்தரவுகள் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

யானைக்கால் நோய்

யானைக்கால் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது இந்த சங்குப்பூ செடிகள். சங்குப்பூ செடியின் சமூலம் அதாவது பூ, இலை, வேர், கொடி, விதை ஆகியவற்றை அரைத்து பூசிவர யானைக்கால் வீக்கம் குறையும், அதனுடன் இதன் தேநீரை அருந்த விரைவில் நல்ல பலனை அடையலாம். சங்கு பூ செடியின் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி காலில் கட்டி வைத்தால் யானைக்கால் நோயினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

சங்கு பூதேநீர் தயாரிக்க

சங்கு பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

சங்குப்பூக்களின் வேர்கள் குடல், வயிறு ஆகியவற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கவல்லது. வேர்களை கஷாயமாக வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்த பூச்சிகள் வெளியேறும்.

நெய்யில் வறுத்த விதைகளை தேநீராக வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க இரப்பை நோய் குணமாகும்.

வெள்ளைப்படுதல் உள்ளவர்கள் இதன் இலைகளை நீரில் காய்ச்சி அதனைக்கொண்டு உள்ளுறுப்புகளை நாளொன்றிற்கு இரண்டு முறை கழுவ விரைவில் சரியாகும். மேலும் அங்கு ஏற்படும் புண்கள், கட்டிகளும் போகும்.

நீண்ட நாட்களாக இருக்கும் கபநோய்கள், சிறுநீர் பாதையில் வரும் நோய்களுக்கு இந்த சங்கு பூ செடியின் பட்டையை நன்கு இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்து அருந்த விரைவில் நிவாரணம் பெறலாம். 

தூக்கமின்மை

தூக்கமின்மை தொந்தரவை போக்கும் ஒரு அற்புத தேனீர். இரவு படுக்கும்முன் ஐந்தாறு பூக்களை நீரில் காய்ச்சி அருந்த தூக்கமின்மையிலிருந்து வெளிவரலாம்.

உடலில் ஏற்படும் வீக்கங்கள், வலிகள், கட்டிகள், கண் சார்ந்த நோய்கள், HIV ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது.

தலையில் ஏற்படும் புழுவெட்டு, வழுக்கைக்கு இதன் இலைகளை அரைத்து ஒருமணிநீராம் தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்க விரைவில் சிறந்த பலனை பெறலாம்.

கருவுற்றிருக்கும் பெண்களை தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சங்குப்பூ தேநீரை அவ்வப்பொழுது பருகலாம். 

தெற்காசிய நாடுகளில் இதனைக்கொண்டு தேநீர், ப்ளூ ரைஸ் என பல பல உணவுகளை தயாரிக்கின்றனர். அதுவும் ஸ்டார் ஹோட்டல்களில் இவற்றின் விற்பனை படு ஜோர்.ப்ளூ டீ எனப்படும் இந்த சங்குப்பூ தேநீர் செய்ய ஐந்தாறு ஊதா நிற சங்குப்பூக்கள் தேவை, அதனை ஒரு கப் நீரில் லேசாக கொதிவிட்டு அருந்தலாம். கூடுதல் சுவைக்கும் வித்தியாசமான நிறத்திற்கும் சிறிது இஞ்சி, எலுமிச்சை, தேன், பனஞ்சக்கரை ஆகியவற்றை சேர்த்தும் பருகலாம்.

வீட்டில் இருக்கும் அற்புத உணவும் மருந்துமாக இந்த சங்குப்பூக்கள். இதனை எளிமையாக வீட்டில் நாமே வளர்த்து தேவைக்கேற்ப பறித்து பயன்படுத்த இளமையும், உற்சாகமும் நிறைந்த ஒரு ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம். 

சங்கு பூ பயன்கள்

(5 votes)