சாதாரணமாக தோட்டங்கள் சாலையோரங்கள் தண்டவாளங்களில் அதிக மணற்பாங்கான இடங்களிலும் தனிப்பட்ட கூட்டமாக வளரக்கூடிய ஒரு வகையான செடி தான் இந்த பிரம்மதண்டு. பொதுவாக இது 35 சென்டிமீட்டர் உயரம் வளரும் 30 சென்டிமீட்டர் அடர்ந்து படர்ந்தும் வளரக்கூடியது. பல மடல்களாக கடினமாக கூரிய முள்களையையும் கொண்ட இதனுடைய இலைகள் 10 சென்டிமீட்டர் நீளமும் 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இதன் இலைகள் கண்டங்கத்திரி செடியின் இலை போல கரடுமுரடாக முட்கள் நிறைந்ததாகவும் இருக்கும். பளிசென்ற மஞ்சள் நிற பூக்களையும் கொண்டு பார்வைக்கு அழகாக இருக்கும் செடி இனம்.
குடியோட்டி பூண்டு
இதற்கு ‘குடியோட்டி பூண்டு‘ என்ற பெயரும் உண்டு. பல நோய்களை வேரோடு அறுத்து ஓடவிடும் செடி என்பதால் இந்த பிரமதண்டுக்கு குடியோட்டி பூண்டு என பெயரும் உண்டு. இதன் காய்கள் மூன்று சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இதன் காய்கள் நட்ட குத்தலாக இலைகளின் காம்பின் இணைப்பில் சேர்ந்திருக்கும்.
காய் பழுத்து மேல்பகுதி தானே திறந்துகொள்ளும், உள்ளே நூற்றுக்கணக்கான மிகச் சிறிய கடுகு போன்ற உருண்டையான விதைகள் பொலபொலவென்று நிறைந்திருக்கும். இந்த விதைகளின் மேல் முள் போன்ற ஆனால் கூர் இல்லாத பாகம் அமைந்து கன்னங்கரேலென்று இருக்கும். செடியை அசைத்தால் விதைகளுடன் கூடிய காய் சலசலவென்று சப்தமிடும். வேகமாக காற்று அடிக்கும் பொழுதுதான் இந்த காய்களில் உள்ள விதைகள் கீழே சிதறும், அதுவரை அவைகள் பாதுகாப்பாக உள்ளேயே இருக்கும். முட்கள் நிறைந்த செடியாக இருந்தாலும் இதன் காம்புகளை உடைத்தால் மஞ்சள் நிறமான பால் வெளியேறும்.
தேள் கடி விஷம் நீங்க
பிரம்மதண்டு இலைகளின் முட்களை நீக்கிவிட்டு கையில் வைத்து கசக்கி அதை சூடேறத் தேய்த்துக்கொண்டே இருந்தால் தேள் விஷம் முறிந்து கடுப்பு நின்றுவிடும்.
பேய் சிரங்கு, நமட்டு சிரங்கு குணமாக
பிரம்மதண்டு இலைகளை கொண்டு அம்மியில் வைத்து மைய அரைத்து அதை சிரங்கின் மேல் கனமாகப் பூசி வைத்திருந்து சீயக்காயை சுட்டு அம்மியில் வைத்து ஒரு துண்டு மஞ்சளுடன் சேர்த்து மை போல அரைத்து அதைக் கொண்டு காலை வேளையில் சிரங்கு உள்ள பகுதியை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் மருந்து அரைத்துப் போடவேண்டும். இதை மூன்று நாள் செய்தால் சிரங்கு மறைந்துவிடும்.
பல் சம்பந்தமான கோளாறுகள் குணமாக
செழிப்பாக வளர்ந்து பூ, காய்களுடன் இருக்கும் பிரம்மதண்டு செடி ஒன்றை வேருடன் பிடுங்கி வந்து அதை சுத்தம் செய்து கழுவி நுனி முதல் வேர் வரை பொடியாக நறுக்கி ஒரு தட்டில் போட்டு வெயிலில் காய வைக்கவேண்டும். எல்லாம் சருகாகக் காய்ந்தபின் அதை உரலில் போட்டு இடித்து மாசல்லடையில் சலித்து ருசிக்குத் தேவையான உப்பு சேர்த்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை இந்த தூளைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.
குஷ்டம் குணமாக
குஷ்ட வியாதியை ‘தொழுநோய்’ என்றும் கூறுவதுண்டு. மனிதருக்கு வரக்கூடிய மிகக் கொடுமையானதும் அருவருப்பானதும் இது. குஷ்ட நோய் ஒட்டுவாரொட்டி நோயல்ல என பல ஆய்வுகள் இன்று வெளியிட்டுள்ளது. ஆனால் குஷ்ட நோயை ஆரம்பத்திலேயே கவனித்து தக்க சிகிச்சை அளித்து வந்தால் அது பூரணமாக குணமாகும். குஷ்ட நோயை குணமாக்கும் சக்தி பிரம்மதண்டு செடிக்கு உள்ளது. இதை சரியாக பயன்படுத்தினால் நல்ல பயன் அடையலாம். நன்றாக செழித்து பூ, காய்களுடன் வளர்ந்திருக்கும் ஒரு பிரம்மதண்டு செடியை வேருடன் பிடுங்கி வந்து சுத்தம் செய்து நுனி முதல் அடிவரை நன்றாக காயும் வரை வெயிலில் காய வைத்து காய்ந்தவுடன் அதை சுத்தமான இடத்தில் வைத்து தீமூட்டி எரியும்படி செய்ய வேண்டும். கரியான பின் அதை ஒரு சட்டியில் வைத்து மேலும் தீ எரித்து, அந்த கரியில் தீப் பிடித்து நெருப்பாகி அதுதானே சாம்பலாகும் வரை வைத்திருந்து இறக்கி அதை மாச்சல்லடையில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு பசுவின் வெண்ணெயில் ஒரு துளி அளவு இந்த சாம்பலைப் போட்டு குழப்பி காலை வேளையில் மட்டும் தொடர்ந்து 40 நாட்கள் கொடுக்க நல்ல நிவாரணம் தெரியும்.
இருமல் இளைப்பு குணமாக
சுவாச காசத்தின் பொழுது மூச்சு வாங்கி கஷ்டப்படும் பொழுதும் சாதாரண இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இந்த பிரம்மதண்டு சாம்பலை ஒரு துளி அளவு எடுத்து தேனில் கலந்து எடுத்து வந்தால் இளைப்பு நிற்கும் இருமல் குணமாகும்.
கண் சம்பந்தமான எந்த கோளாறுகளும் குணமாக
பிரமத்தண்டு பூக்கள் 20 கொண்டு வந்த ஒரு பானையில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி மேலும் தேவையான அளவு விளாவி காலையில் தலை முழுக வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் முழுகி வந்தால் கண் சம்பந்தமான அத்தனை கோளாறுகளும் குணமாகும்.
வீக்கம் வாட
பிரமதண்டின் இலைகளைத் தேவையான அளவு எடுத்து வந்து உரலில் போட்டு இடித்து சாறெடுத்து சாறை கொதிக்க வைத்து கடைசியாக ரூபாய் எடை கட்டி கற்பூரம் சேர்த்து கலக்கி வீக்கத்தின் மேல் பூசி வர வீக்கம் வாடிவிடும்.