உடல் உறுப்புகளை பலப்படுத்தும் முறை

பிரபஞ்ச படைப்பில் உயரிய வளர்ச்சி பெற்றுள்ள மனிதன் இன்று தன் வாழ்வியல் சுகங்களை ஆனந்தமாய் அனுபவிக்கும் நிலையினை இழந்து பல சங்கடங்களில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறான். அதிலும் முக்கியமாக உடல் மற்றும் மனரீதியான தொந்தரவுகளினால். இவற்றிற்கு மிக முக்கியமான காரணம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறைகேடுகளே.

வாழ்க்கை உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும். மனம்போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், ஒரு கட்டத்தில் நாம் வெறுமையாய் உணர்வோம். உணவு விஷமித்தால் உடலும் விஷமாகும். அத்துடன் மனமும் விஷமித்து நம் சிந்தனையும் விஷமாகும். விஷமான உடல் உணர்வோடு செய்யும் எந்த ஒரு செயலும் ஆரோக்கியமாக இருக்காது.

சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் சரி, யோகியாக வாழ்ந்தாலும் சரி உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும். யோகத்திற்கும், போகத்திற்கும் உடல் பிரதானமாகும். எனவே உடலை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது. நம்மில் பெரும்பளோருக்கு நமக்கு இருக்கும் தொந்தரவுகளும் அவற்றில் இருந்து வெளிவர பல வழிகளும் தெரியும். ஆனால் ஒரு சூழ்நிலைக் கைதியாகவும், அலட்சியம், வெறுப்பு, விரக்தி, சோம்பேறித்தனம் போன்றவற்றாலும் தெளிவான தொலை நோக்குப் பார்வையும் இன்றி அவதிப் பட்டுக் கொண்டிருகின்றோம். நமது பேராற்றலையும் இழந்துக் கொண்டிருகின்றோம். இவற்றில் இருந்து மீண்டு நம்மை நாமே சீராக்கி பிரபஞ்ச சக்தியை முழுமையாகப் பெற்று விரும்புவதை ஆரோக்கியமாக எளிதில் அடைவோம்.

உடலின் கழிவுகளை (நச்சுக்களை) அன்றாடம் நீக்குவதன் மூலமாக இதனை எளிதாக அடையமுடியும். உறுப்புகளின் சங்கமமே உடல். ஒவ்வொரு உறுப்பையும் சுத்தப்படுத்தி சுறுசுறுப்பாக இயங்க வைப்பதே ஆரோக்கியமான உடல் மன நிலையைக் கொடுக்கும். இதற்கு முன் முகம் சொல்லும் கண்ணாடி என்ற பதிவின் மூலமாக உடலில் எந்த இடத்தில் நச்சு அதிகமாகி உடல் உறுப்பு தொந்தரவுக்குள்ளாகி உள்ளது என்பதின் வெளிப்படைப் பார்த்தோம். அவ்வாறு வெளிப்படும் அறிகுறிகளை வைத்தி உடல் உறுப்பை எவ்வாறு சீராக்குவது என்று இனிப்பார்போம்.

முதலில் உடல் உறுப்புகளுக்கும் மனதிற்கும் சக்தியை அளிக்கும் இரத்தத்தை எவ்வாறு சுத்திகரிப்பது என்று பார்ப்போம். இரத்தம் ஆக்சிஜனை மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்புவதோடு மனித உடம்பில் சக்தியை கடத்தும் பொருளாகவும் செயல்படுகிறது. உடல் அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தியை எளிதாக கொடுக்கக்கூடியது எலுமிச்சை.

தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்து உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை உணர்ந்தவருக்கே தெரியும் இதன் அருமை.

அடுத்ததாக நமது உடம்பில் ரத்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது நமது சிறுநீரகங்களாகும்.

சிறுநீரகம்

கன்னம், கீழ் கண்கள் மற்றும் காதுகளில் பருக்கள், கட்டிகள் வெளிபட்டால் அது சிறுநீர் பை, சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள தொந்தரவுகள் அல்லது கழிவுகளின் காரணமாகும்.

சிறுநீரகங்கள் உணர்வுப் பூர்வமான உறுப்பாகும். சிறுநீரகங்களில் உண்டாகும் சிறுநீரகக் கட்டி, சிறுநீரக வீக்கம், சிறுநீரகங்கள் சுருங்கிப் போதல், சிறுநீரகங்களில் உண்டாகும் சீழ் வியாதிகள், சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று வியாதிகள், சிறுநீர் அதிகமாகப் போதல், நீர் சுருக்கு, நீர் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற வியாதிகளுக்கு மிகச் சிறந்த பலனைத் தரக்கூடியது யானை நெரிஞ்சில்.

வேருடன் செடியை பிடுங்கி அலசி நீரில் போட்டுவைக்க தண்ணீர் கொலகொலப்பக மாறும். அந்த தண்ணீரை தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர சிறுநீரக கழிவுகள், தொந்தரவுகள் நீங்கும்.

யானை நெருஞ்சில்

பத்துநாட்களுக்கு ஒருமுறை இயற்கை முறையில் (எந்த ரசாயனமும் ஊசி மூலம் செலுத்தாத) பெற்ற வாழைத்தண்டை பிழிந்தோ சமைத்தோ சாப்பிட்டு வர ஆங்கில மருந்துகளினால் ஏற்ப்பட்ட சிறுநீரக பாதிப்பும் நீங்கும்.

கொத்தமல்லி இலையை அரைத்து நீர்த்து குடித்து வர சிறுநீரகம் புத்துணர்வுடன் இருக்கும்.

நீர்சத்துள்ள காய்கறிகளான சுரக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை ரசாயன நச்சுக்கள் இன்றி இயற்கை முறையில் விளையவைத்து உண்டு வருவது நித்தம் நித்தம் கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும்.

மாதவிடாய் கோளாறுகள்

கீல்கன்னதின் ஓரங்களில் ஏற்படும் கட்டிகளுக்கு விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சி தினம் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு வர மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

ஜீரண மண்டலம்

அடுத்ததாக நெற்றி, கீழ் கன்னம் இவற்றில் பருக்கள், கட்டிகள் தோன்றுவது நச்சுக்கள் ஜீரண மண்டலத்தில், இரைப்பையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

ஜீரணத் தொந்தரவுகள் முதலில் ஏப்பம், வயிறு ஊதல், வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கி நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுடன் நாளுக்கு நாள் உணவின் மேல் வெறுப்பையும் உண்டாக்கும்.

இவ்வாறு ஜீரண மண்டலம், இரைப்பையின் பாதிப்பை சீர்செய்ய வேம்பு தேநீர் வைத்து குடிக்கலாம். வேம்பு வயிறு, ஜீரண மண்டலத்தில் உள்ள நச்சு பொருட்களை அழிக்ககூடியதாகவும் சிறந்த கழிவு சுத்திகரிப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.

மாதம் ஒருமுறை விளகெண்ணை குடித்து வயிற்றை சுத்திகரிப்பதும், வாரம் ஒருமுறை இஞ்சி துவையல் செய்து உணவோடு உட்கொள்வதும் ஜீரண மண்டலத்தை பலப்படுத்தி நோய்கள் அண்டாது பாதுகாக்கும்.

வாரம் நான்கு நாட்களாவது இயற்கை முறையில் விளைந்த கீரைகள், நார்சத்து நிறைந்த சிறுதானியங்கள் உட்கொள்வது ஜீரணப் பாதையை உறுதியாக்கும். மாதம் ஒருமுறை உபவாசம் அல்லது பழ உணவு உட்கொள்வது மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.

(2 votes)