Vigna Mungo; Black Gram; உளுந்து
பருப்பு வகைகளில் பல சத்துக்களை கொண்ட சிறந்த ஊட்டச்சத்து நிறைந்தது உளுந்து. தமிழகத்தில் பச்சை பயறுக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய பருப்பு இது. நமது உணவுகளில் பெரும்பங்கு வகிக்கும் பொருளும் இது. அன்றாடம் உளுந்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக உளுந்தை தாளிப்பு முதல் இட்லி, தோசை, பாயசம், கஞ்சி, உளுந்தங்களி என பலவகைகளில் தமிழக சமையலில் நமது முன்னோர்கள் உட்புகுத்தியுள்ளனர். மேலும் முழு உளுந்தை முளைக்கட்டி அன்றாடம் ஒரு கையளவு உண்டு வர எப்பேர்பட்ட மூட்டு வலியும் பறந்து போகும். மாஷம், மாடம் என சில பெயர்களும் இந்த உளுந்துக்கு உண்டு.
ஒரு சிறுசெடி வகையைச் சேர்ந்தது உளுந்து. இதன் இலைகள் கூட்டிலைகளாக இருக்கும், மேலும் இதன் வேர்கள் வேர் முடிச்சுகளுடன் இருக்கக் கூடியது. இதனால் மண் வளம் அதிகரிக்கும். இதன் காய்கள் வெடிக்கும் தன்மையில் பல விதைகளுடன் இருக்கும். இந்த விதைகளே உளுந்து எனப்படுகிறது. இனிப்பு சுவைக் கொண்ட உளுந்து செடியின் விதை (பயிறு) மற்றும் வேர் பயனளிக்கும் பகுதிகள்.
காமத்தையும், ஆண்மையையும் பெருக்கும் ஆற்றலும், பால் பெருக்கியாகவும் செயல்படும் தன்மைக் கொண்டது உளுந்து. உடலுக்கு சிறந்த பலத்தை அளிக்கக் கூடியது. உளுந்தை அன்றாடம் ஒரு கையளவு உட்கொள்வதால் உடல் பலப்படுவதுடன் அழகையும் அளிக்கும். உடல் சூட்டை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
பெண்களுக்கு இடுப்பு பலத்தைத் தரும். இன்று நமக்கு பல வகைகளில் உளுந்து கிடைக்கிறது. அவற்றில் கருப்பு நிறத்தில் இருக்கும் தோல் நீக்காத உளுந்தைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் இட்லி மிளகைப் பொடி, இட்லி போன்ற உணவுகளை தயாரிக்கவும் கருப்பு உளுந்தை பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும்.
உடல் பலம் பெற
கருப்பு உளுந்தை மாவாக்கி உளுந்தங்களி, கஞ்சி, லட்டு போன்ற தின்பண்டங்களாகச் செய்து உண்டுவர உடல் பலம் பெறும். மேலும் உளுந்தை கஞ்சியாகக் காய்ச்சியோ அல்லது வடையாகச் செய்தோ உண்டுவர இளைத்த உடல் பருக்கும். உடல் பலம் பெறும். பச்சை உளுந்தமாவுடன் தேன் கலந்து சாப்பிட உடலுக்கு தெம்பையும், முக அழகையும் தரும்.
சிறுநீர் தொந்தரவுகளுக்கு
சிலருக்கு சிறுநீரக சம்மந்தமான தொந்தரவுகள், தொற்றுகள், நோய்கள் இருக்கும், அவர்கள் உளுந்தை நீரில் ஊறவைத்து, அந்த நீரை மறுநாள் அதிகாலையில் அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் மறையும்.
மூட்டுகளுக்கு உளுந்து தைலம்
உளுந்துத் தைலத்தை வாத நோய்கள், முடக்குவாதம், இடுப்பு வலி, மூட்டுவலி, ரத்தக்கட்டு போன்றவற்றிற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர விரைவில் நீங்கும்.
வீக்கங்களுக்கு, மூட்டு வலிகளுக்கு
உளுந்து வேரை அரைத்துச் சூடாக்கி வீக்கங்களின் மேல் வைத்துக் கட்ட வீக்கங்கள் மறையும். கருப்பு உளுந்தை மூளைக்கட்டி உண்டு வர மூட்டு வலி மறையும். முளைக்கட்டுவதற்கு கருப்பு உளுந்தை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின் அதனை வடிகட்டி ஒரு துணியில் கட்டி காற்றோட்டம் உள்ள இடத்தில் வைக்க ஐந்தாறு மணி நேரத்தில் முளைத்துவிடும்.