நாகரிகம் மாற மாற நமது இயற்கையான பழக்கவழக்கங்களும் செயல்களும் பெருமளவில் மாறுகிறது. காலை கண் விழிக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம், உழைக்கும் நேரம், உறங்கும் நேரம், ஓய்வெடுக்கும் நேரம் என அனைத்தும் இன்று தலைகீழாக மாறிவிட்டது. இயற்கையும் இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் இயற்கையுடன் இணைந்து பயணிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
காலை சூரியோதயத்தில் உயிரினங்கள் உறக்கத்திலிருந்து எழுவதும் தம் தம் பணிகளை செய்யவும் சூரியன் மறையும் பொழுது உறங்கச் செல்வது ஒவ்வொரு உயிரினத்தில் இயற்கையான செய்கையாகும். மனிதனுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் என அனைத்திற்கும் இது பொருந்தும். இன்றோ இவை முற்றிலும் தலைகீழ். படித்த நம் பிள்ளைகளின் வேலை தொடங்குவதே இன்று இரவில் தான். இதுவே மனிதனின் நோய்களுக்கும், ஆயுளுக்கும் காரணமாக உள்ளது.
சூரியன் உதிக்கும் நேரத்தில் மனிதர்களுக்கு தேவையான பல கண்ணுக்கு தெரியாத, அறிவியல் உலகம் கண்டுபிடிக்காத ஆற்றல் அன்றாடம் வெளிப்படுகிறது. இவற்றை உட்கிரகிக்க நாம் அந்த நேரம் விழித்திருப்பது அவசியம். நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும், உடல் உறுப்புகள் பிரபஞ்சத்தின், சூரிய வெளிச்சத்தின் இசைவைக் கொண்டு செயல்படுகிறது. குறிப்பாக காலையில் மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு குறைவது, இரவு இதுவே தூக்கத்தை அளிக்க அதிகரிப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய அறிவியல் உலகம் இரவு தூக்கம் கெடுவது, நேரம் கழிந்த தூக்கம், பகலில் இரவு தூக்கத்தை பெறுவது, உணவு உட்கொள்ளும் நேரம் மாறுவது ஆகியவை நோய்க்கான காரணங்களாக கூறப்படுகிறது.
உயிரியல் கடிகாரம் என்றால் என்ன? Biological Clock / Organ Clock
நமது உடல் சூரியனை மையமாக ஒரு கடிகாரத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நேரமும் இயங்குகிறது. சூரியன் மறைந்த பின் உடலின் இயக்க சக்தியும் குறைந்து ஓய்வு, தூக்கத்திற்கான தன்மையை அளிக்கிறது. அதனைப் புரிந்து கொண்டு உடலுக்கும் நாம் வாழும் உலகிற்கும் ஏற்ப செயல்பட நீடூழி நோய் நொடி இல்லாமல் வாழலாம். நாம் அறியாமலேயே நம் உறுப்புகள் இயற்கைக்கு ஏற்ப செயல்படுதலை ஆங்கிலத்தில் Circadian Rhythm என்பார்கள். இவற்றைக் கொண்டு உறுப்புக்கள் செயல்படுவதை உயிரியல் கடிகாரம் (Biological Clock / Organ Clock) என்பதுண்டு.
உடல் உறுப்புகள் இயங்கும் நேரத்தையும், அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியவற்றையும் இனி பார்ப்போம். இதனால் உடலின் இயக்கமும் இயற்கையோடு செயல்படும் உடல் ஆரோக்கியமும் மேம்படும், தவிர்க்க முடியாத இன்றைய நோய்களும் நீங்கும்.
நுரையீரல் நேரம்
அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது நுரையீரல் சுறுசுறுப்பாக செயல்படும். அந்த நேரத்தில் மூச்சுக்குழாய் தொந்தரவுகள், ஆஸ்துமா, இருமல் போன்ற பிரச்சனைகள் பலருக்கும் வெளிப்பட இதுவே காரணம். இந்த நேரத்தில் பிரபஞ்சமே தன்னை புதுப்பிக்கும் நேரம், அதனால் நாமும் அந்த நேரத்தில் கண்விழித்து தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வது நல்ல பலனை அளிக்கும்.
பெருங்குடல் நேரம்
சூரியன் உதயமாகும் நேரம் நமது பெருங்குடல் தன்னை புதுப்பிக்கும் நேரம். உடலின் கழிவுகளை வெளியேற்றி பெருங்குடல் செயல்படும் நேரத்தில் மலம் கழிக்க உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்க மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
உணவுக்கான நேரம்
சூரியன் உதயமாகி ஓரிரு மணி நேரம் நமது வயிற்றுப் பகுதி சிறப்பாக இயங்கும் நேரம். இந்த நேரத்தில் காலை உணவை எடுத்துக் கொள்வது சிறந்த ஆரோக்கியத்தையும் நோயற்ற வாழ்வும் அளிக்கும். உணவு என்றதும் ஏதோ கிடைக்கும் உணவை அதுவும் வயிற்றை நிரப்பும் உணவை அளிக்கக் கூடாது. நல்ல சத்தான ஆகாரம் அளிக்க வேண்டும். காலை உணவு ராஜா உண்ணும் உணவைப் போல் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் எதை உண்கிறோமோ அந்த உணவு முழுவதும் சிறந்த முறையில் உடலால் உட்கிரகிக்க படுகிறது. உடலும் தேவையான தெம்பையும் அந்த நாளுக்கு தேவையான பலத்தையும் இந்த காலை உணவே அளிக்கிறது. காலையில் நாம் உடலுக்கு இந்த நேரத்தில் கொடுக்கும் உணவே உடலை இயக்க வைக்கும் உணவு என்று சொன்னால் அது மிகையாகாது. மூளையின் சீரான இயக்கத்திற்கு இந்த நேர உணவு மிகவும் அவசியம்.
இடைப்பட்ட நேரம்
காலை உணவு கட்டாயம் சூரிய உதயத்திலிருந்து இரண்டு மூன்று மணி நேரத்திற்கும் இருக்க வேண்டும். அதன்பின் உடல் தனது மிக முக்கிய உறுப்புகளை சீரமைக்கும் பணிக்கு, உட்கொண்ட உணவின் தரமான ஆற்றலைப் பெறவும் உதவும். அதனால் இந்த நேரத்தில் உடல் இயக்கத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் எந்த உணவையும் உண்ணாமல் ஓரிரு மணி நேரம் இருப்பது சிறந்தது. தேவைப்பட்டால் மதிய உணவிற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன் ஏதேனும் காய்கறி சூப் போன்ற உட்கொள்ளலாம்.
மதிய உணவு
சூரியன் நடு உச்சி வானில் பயணிக்கும் நேரமே சரியான மதிய உணவுக்கான நேரம். இந்த நேரத்திற்கு பின் ஓரிரு மணி நேரத்தில் காலை உணவை விட குறைந்த அளவான உணவை உட்கொள்வது சிறந்தது. காலை அரசனைப் போலும், மதியம் அமைச்சரைப் போலும் உணவை உண்ண வேண்டும் என்பார்கள்.
பிற்பகல்
சூரியன் மறைவதற்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன் உடலின் சுத்திகரிக்கும் உறுப்புகள் இயங்கும் நேரம். அதனால் சூரியன் மறையும் நேரமும் அதற்கு முன் ஓரிரு மணி நேரமும் உடல் இயக்கத்திற்கு உதவும் வகையில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது சிறந்தது,
மாலை
சூரியன் மறைந்த பின் உடலும் தனக்கான இயக்க ஆற்றலை சற்று இழந்திருக்கும். அதனால் இந்த நேரம் எளிதாக செரிமானமாகும் உணவையும், எளிய உணவையும் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் தாமதமாக இல்லாமல் சூரியன் மறைந்த ஒரு மணி நேரத்தில் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். இதனை, காலை அரசனைப் போல், மதியம் அமைச்சரைப் போலும் இரவு பிச்சைக்காரனைப் போலவும் உணவு உண்ண வேண்டும் என்பார்கள்.
உறங்கும் நேரம்
சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்தில் உறங்கச் செல்வது உடலின் இயக்கத்திற்கும், உள்ளுறுப்புகளின் இயக்கத்திற்கும், ஹார்மோன் செயல்பாடுகளுக்கும் அவசியம். குழந்தைப்பேறு தொந்தரவுகள், மலட்டுத்தன்மை, இருதய நோய்கள், மலச்சிக்கல், பெண்களுக்கு வரும் கருப்பை தொந்தரவுகள் போன்ற பாதிப்புகள் நீங்க இரவு தொடங்கிய சில மணி நேரத்தில் உறங்க செல்வது அவசியம். நிம்மதியான, ஆழ்ந்த, தடைபடாத இரவு தூக்கம் எப்பேர்ப்பட்ட வியாதியையும் விரைவில் தீர்க்கும் தன்மை கொண்டது. தூங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன் தொலைபேசி, தொலைக்காட்சி பார்க்காமல் தூங்க செல்வது நல்ல தூக்கத்தை அளிக்க உதவும்.