தொல்லுயிர் கரைசல்

இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூலை எடுப்பதற்கு அவசியமானது மண் வளம். மண்வளத்தை மேம்படுத்தினாலே போதும் விளைச்சலும் மகசூலும் அதிகரிக்கும். மண்வளத்தை மேம்படுத்த மண்ணில் நுண்ணுயிர்கள் இருக்கவேண்டும். மண்புழுக்கள் உட்பட மண்ணின் நுண்ணுயிர்கள் அதிகமாக இருக்க மண் உயிருள்ள மண்ணாகவும் செடிகளுக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துகளையும் பெற்ற மண்ணாகவும் இருக்கும். மேலும் மண்ணில் நாம் இடும் மக்கும் சத்துக்களையும் எளிதாக செடிகள் உட்கிரகித்துக் கொள்ள இந்த நுண்ணுயிர்கள் மண்ணில் அவசியமாகிறது. இதற்கு இந்த நுண்ணுயிரிகளில் தொல்லுயிர் அவசியமானது.

தொல்லுயிர் கரைசல் தயாரிக்க தேவையானப் பொருட்கள்

புதிய சாணம் – 5 கிலோ
நாட்டுச் சர்க்கரை – 3/4 கிலோ
கடுக்காய்த் தூள் – 25 கிராம்
அதிமதுரப் பொடி – 2 1/2 கிராம்

தொல்லுயிர் கரைசல் தயாரிக்கும் முறை

ஒரு 50 லிட்டர் பிளாஸ்டிக் கேனை எடுத்துக் கொள்ளவேண்டும். புதிதாக கிடைத்த பசுஞ்சாணம் 5 கிலோ நாட்டுச்சர்க்கரை முக்கால் கிலோ, கடுக்காய் தூள் 25 கிராம் ஆகியவற்றை பிளாஸ்டிக் கேனில் போட்டு கலக்கவேண்டும். அதிமதுரம் இரண்டரை கிராம் நீரில் கலந்து கேனில் ஊற்றவேண்டும். பிறகு கேன் முழுக்க தண்ணீர் நிரப்பி நன்றாக மூடி வைத்துவிட வேண்டும்.

இரண்டு நாள் கழித்துப் பார்த்தால், கேன் விரிந்து உப்பி இருக்கும். அதைப் பார்த்ததுமே மூடியை லேசாக திறந்து விடவேண்டும். அப்போதுதான் உள்ளேயிருக்கும் மீத்தேன் வாயு வெளியேறும். இல்லையென்றால் கேன் வெடித்துவிடும்.

10 நாட்களுக்குப் பிறகு தொல்லுயிர் கரைசல் தயாராகிவிடும். இதை வேறு கேனில் மாற்றவேண்டும்.

தொல்லுயிர் மிகவும் தரமாக இருப்பதற்கான அடையாளம் அது நிறமற்று இருக்க வேண்டும்.
ஒரு முறை தயரித்ததை 2௦ நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

தொல்லுயிர் கரைசல் பயன்படுத்தும் முறை

ஒரு பங்கு தொல்லுயிர் கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம்.

பாக்டீரியாக்கள் எப்போதுமே ஒரு பொருளைச் உட்கொண்டவுடன் புதிய பொருளை உருவாக்கும். பயிர்களின் சல்லி வேர், சத்துக்களை உடனடியாக உறிஞ்சுவதற்கு தொல்லுயிரி ஊக்குவிக்கும்.

ஒரு ஏக்கருக்கு 2௦௦ முதல் 3௦௦ லிட்டர் தொல்லுயிர் கரைசல் போதுமானது. பாசன நீரோடு, இந்தக் கரைசலை 200 – 3௦௦ லிட்டர் கலந்து விடலாம். இதனுடன் அமிர்த கரைசல், தேமோர் கரைசல், மீன் அமிலத்துடனும் சேர்த்து அளிக்கலாம்.

தொல்லுயிர் கரைசல் பயன்கள்

  • செடிகள், பயிர்கள் மீது தெளிப்பதால், செடிகளின் இலைகள் பெரிதாக வளரும்.
  • இலைகள் பெரிதாவதால், ஒளிச் சேர்க்கை அதிகமாகி, விளைச்சலும் அதிகரிக்கும்.
  • காய்கள், பழங்கள் நல்ல விளைச்சலைத் தரும். இந்தக் கரைசல் பூச்சி விரட்டியாகவும் வேலை செய்கிறது.
  • செடிகளில் ஏற்ப்படும் சத்துப்பற்றாக் குறையை தடுக்கிறது.
  • சிறந்த வளர்ச்சி ஊக்கியாக உள்ளது.
  • அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
  • பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

மேலும் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறையை அறிந்துக்கொள்ள – இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள்.