இன்றெல்லாம் அலுமினிய பாத்திரங்களில் சமைப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நமது உணவுக் கலாச்சாரத்தின்படி அலுமினிய பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஏற்றதல்ல. காரணம் நமது உணவில் அதிகமாக தக்காளி, புளி போன்ற புளிப்பு சுவை நிறைந்த சேர்மானங்களை அதிகமாக சேர்த்து சமைப்பது வழக்கம். இவ்வாறு சேர்க்கும் இப்புளிச்சுவையுடைய சேர்மானங்களில் இயல்பாகவே அமிலத்தன்மை மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
நாம் அலுமினிய பாத்திரங்களை கொண்டு சமைக்கின்ற போது இப்புளிப்பு சேர்மானங்கள் அலுமினியப் பாத்திரத்தோடு எதிர்வினை புரிந்து நாம் சமைக்கும் உணவுப் பொருட்களுடன் சேர்ந்து நமது உடலினுள் செல்கின்றது. நமக்குத் தெரியாமலேயே உணவுப் பொருட்களுடன் உடலினுள் இது செல்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் பல. அவற்றில் முக்கியமானது உணவுக் கால்வாய் பகுதிகளில் புற்றுநோயினை ஏற்படுத்துவதும், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகமாக அதிகரிப்பதுமாகும்.
என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன், எப்படியும் அலுமினியப் பாத்திரங்களை உபயோகப் படுத்தியே தீருவேன் என்று பிடிவாதமாய் இருப்பவர்கள்(உதாரணம் ரைஸ் குக்கர்) , அதில் தக்காளி, புளி, எலுமிச்சை போன்றவற்றை வைத்து கொத்திக்க வைப்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
தக்காளி, புளி போன்றவை அமிலத்தன்மை கொண்டவை. அவை சிறிது சிறிதாய் பாத்திரத்தை அரிக்கும் இயல்பை கொண்டிருக்கும் என்பதால், சமைக்கும் உணவும் அந்த பொருட்களின் வேதி வினையின் விளைவால் நச்சுத் தன்மை பெற்று, அதனுடைய நற் குணங்களை இழந்து, உடலுக்கு கேடு (மட்டுமே) செய்யும்.
எனவே பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் நான் ஸ்டிக்கை முடிந்த வரை தவிர்ப்பது அவசியமானது. மேலும் இந்தப் பாத்திரங்களில் சமைக்கும்போது, சுவையும் வெகுவாகக் குறைந்து போகிறது என்பது கண்கண்ட உண்மை.
எனவே அலுமினியப் பாத்திரங்களில் சமைப்பதை நாம் தவிர்த்துக் கொண்டு, தொண்டு தொட்டு நாம் பயன்படுத்தி வந்த மண்பாண்டப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதுபோன்ற உடலியல் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
முன்னர் நம் வீடுகளில் அம்மா மற்றும் பாட்டி மார்கள் எல்லாம் அலுமினியப் பாத்திரங்கள் கொண்டு சமைக்க மாட்டார்கள் . பிரசாதங்களை அலுமினியப் பாத்திரம் கொண்டு சமைக்கக் கூடாது என்று அதற்குக் காரணமும் சொன்னார்கள். ஆனால் அதே பாட்டியும் அம்மாவும் இப்போது மாடர்னாய் வரும் குக்கர் , நான் ஸ்டிக் எல்லாம் வாங்கி மாடர்னாய் சமைக்கிறார்கள். அலுமினியப் பாத்திரத்தின் மீது தான் நான் ஸ்டிக் கோட்டிங் கொடுத்திருப்பதும்.
இந்தோலியமும் அலுமினியமும் வேறு இல்லை ஒன்றுதான். வெளிதோற்றத்தில் சிலபல மாற்றங்களை மேற்கொண்டு நமது பெரியவர்களையே பயன்படுத்த வைத்திருக்கிறது இந்த கலிகால உலகம்.
அலுமினியம் குக்கர், நான் ஸ்டிக், மேலமைன் போன்ற பொருட்களை தவிர்த்து, நமது ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் குயவர்களிடம் மண் பானை, சட்டி செய்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் இரும்புப் பாத்திரங்களை பேரிச்சம் பழத்திற்கு விற்று விடாமல் அதிலேயே சமைத்து சாப்பிட்டால் பேரீச்சம் பழத்தில் இருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விடக் கூடுதலாய் சத்தும் கிடைக்கும்.
“மண்பாண்ட சமையல்”
- ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது
- உணவில் சுவையைக் கூட்டக்கூடியது
- நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்
- உணவும் எளிதில் செரிமானம் ஆகும்
- மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்
- தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.
இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.
எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.
ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.
இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே!