‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் இன்று உலா வருகிறது. நடைமுறைக்கு மிகத்தொலைவில்.. ஒத்துவராததாகவும் உள்ளது.
உணர்ச்சியாகவும், கலையாகவும், கலாச்சாரமாகவும், பண்பாடாகவும், இனத்தின் அடையாளமாகவும், பண்டிகையின் கொண்டாட்டமாகவும், உறவினரின் பிணைப்பாகவும் நம்முடன் பின்னிப் பிணைத்திருந்த உணவு இன்று வெறும் பன்னாட்டு சந்தையின் அடைக்கப்பட்டிருக்கும் பொட்டலமாக மாறிவிட்டது.
நம்மையும் நமது தனித்தன்மையையும் அடையாளப்படுத்திய உணவு இன்று மறைந்து சமத்துவம் கண்டுள்ளது.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது சாத்தியமானதோ இல்லையோ ‘உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரே உணவு’ என்பது இன்று சாத்தியப்பட்டுள்ளது. இது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், பின்விளைவுகளும் அதிகம்.
காலநிலை, தட்பவெப்பம், உடலமைப்பு, மரபணு போன்றவற்றை சார்ந்த உணவு அனைவருக்கும் ஒன்றானது என்றால் ஏன் வராது நோய்களும், தொந்தரவுகளும்.
Lifestyle Disease இன்று அதிகமாகிக்கொண்டிருக்க அதற்கு மிக முக்கியமான காரணமாக நமது உணவு உள்ளது. விதையில் தொடங்கி பதப்படுத்திகள் வரை அனைத்திலும் நச்சு. இவற்றிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காக்க தற்சார்பு மட்டுமே தீர்வு.
நமது தேவைகளுக்கு நம்மால் முடிந்தவற்றை சீரமைத்து கொள்வதே இன்றைய காலத்திற்கு உகந்தது. அதற்கு முதல் படியாக வீட்டுத் தோட்டமும் நமது சத்தான உணவுகளுமே உதவும்.
வீட்டுத் தோட்டம் நச்சற்ற உணவை மட்டும் தரவில்லை.. வீட்டில் தோட்டம் வைப்பதால் பலப்பல நன்மைகள் நமக்கும் நம் குடும்பத்திற்கும் மட்டுமல்லாமல் நம் பூமிக்கும் கிடைக்கிறது.
வீட்டுத்தோட்டம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- காய்கறி, கீரைகள், பழங்களை இயற்கையாகவும், புதிதாகவும் பெறலாம்.
- சுவையும் மணமும் இயற்கையாகவே பெற்றுள்ளது.
- வீட்டு செலவை குறைக்கலாம். மருத்துவர் செலவை அகற்றலாம்.
- ஆர்கானிக் காய்களுக்கும், கீரைகளுக்கும் அலைய வேண்டாம். அதிக விலை என்று புலம்ப வேண்டாம்.
- நேரடியாக அறுவடை செய்து பயன்படுத்துவதால் அதிக உயிர்சத்துக்கள் கொண்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் கிடைக்கும்.
- நஞ்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்கள். (களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, இரசாயன உரமற்றவை).
- சாக்கடை கீரைகள், விஷம் ஊடுருவிய காய்கறிகள், விதையில்லா பழங்களுக்கு குட்பை.
- நாட்டுரக விதைகளைக் கொண்டு காய்கறி, கீரைகளை வீட்டில் வளர்ப்பதால் ஆரோக்கியம் பெருகும். மரபணு மாற்று விதைகள், ஒட்டுரக விதைகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அகலும். இவற்றால் உண்டாகும் மரபியல் நோய்களும், வளர்சிதை சீர்கேடு நமது தலைமுறையினருக்கும் வர வாய்ப்புகள் குறைவு.
- காய்கள், கீரைகள், பழங்கள் போன்றவை வாடாமலும், வதங்காமலும் பளபளப்பாக இருக்க தெளிக்கும் விஷங்கள், பதப்படுத்திகளில் இருந்து நம்மை காக்கலாம்.
- உணவு தட்டுப்பாடையும், விலைவாசி உயர்வையும் எளிதில் எதிர்கொள்ளலாம்.
- வீட்டுக்கழிவுகளை உரமாகவும், மறுசுழற்சி முறையில் தண்ணீரையும் பயனுள்ளதாக்கலாம்.
- காலியாக உள்ள இடத்தினை பயனுள்ளவையாக மாற்றலாம். வீட்டு மாடிகள், காம்பௌண்ட் சுவர்கள், ஜன்னல் பகுதி என அனைத்தும் பயனுள்ளவையாக அமையும்.
- வீட்டிலேயே ரூப் டாப் கார்டன் ரெடி செய்யலாம். குளுமையான இயற்கை பசுமைகுடிலை ஒரு கம்பியைக் கொண்டு அங்கங்கே குறுக்காகவும் நேராகவும் கட்டி அதில் கொடிவகை காய்களை படரவிட இரவு உணவையும், அதிகாலை உடற்பயிற்சியையும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் அமைக்கலாம்.
- செலவில்லாமல், பல நோய்களை உருவாக்கும் செயற்கை குளுரூட்டப்பட்ட அறைகள் இல்லாமல் இயற்கையான இடத்தில் செய்யும் உடற்பயிற்சிக்கும், தியானத்திற்கும் பல நன்மைகள் உள்ளது.
- இந்த இடத்தில் யோகா செய்ய பல நோய்கள் பறந்து போகும்.
- பல மலர்கள் பூத்து குலுங்கும் நமது தோட்டத்தில் தியானம் செய்ய மனமும், உள்ளமும் குளிரும்.
- மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவையே பல தொந்தரவுகளுக்கு, நோய்களுக்கும் காரணமாகிறது. அவற்றிலிருந்து விடுதலைபெற நமது மாடித் தோட்டத்தில் தியானமும், யோகமும் செய்யலாம்.
- இயற்கையான காற்றை பெற எங்கும் செல்ல தேவையில்லை. வீட்டில் உள்ள தோட்டமே போதும்.
- உடல் அழகை மெருகேற்றவும் வீட்டுத் தோட்டம் உதவும்.
- என்றும் இளமையாக இருக்க உதவும். புத்தி கூர்மையை அதிகரிக்கும்.
- தேவைக்கேற்ப பசுமைக் காய்களை பறித்து பயன்படுத்தலாம்.
- மூலிகை செடிகளை வளர்ப்பதால் தேவைக்கேற்ப எங்கும் அலையாமல் பயன்படுத்தலாம்.
- வீட்டில் வெயிலால் இறங்கும் சூட்டினை அறு முதல் எட்டு டிகிரி வரை குறைக்கும்.
- சாமந்தி பூ செடி வளர்க்க கொசுக்களை ஒழிக்கலாம், தேவைக்கும் அழகாக பயன்படுத்தலாம்.
- பலவகையான குருவிகள், தேனீக்களை காக்கலாம்.
- தினமும் பசுமையான கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, துளசி, கற்றாழை, கீரைகள் போன்றவற்றை பறித்து நேரடியாகவும் உண்ணலாம்.
- உலக வெப்பமயமாக்கலை தடுக்க நம்மால் இயன்ற முயற்சியும் இந்த வீட்டுத் தோட்டமாக அமையும். சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம்.
- lifestyle diseases எனப்படும் உடல்பருமன், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய், மூட்டு வலி, இருதய நோய், பக்கவாதம், சிலவகை புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கலாம்.
- தூக்கமின்மைக்கு சிறந்த நிவாரணம். மனதிற்கு சாந்தத்தையும், அமைதியையும் அளிக்கும்.
- ஒவ்வொரு நாளும் தனியாக உடற்பயிற்சி என்று கூட செய்யாமல் தோட்ட வேலைகளை பத்து நிமிடம் பார்த்தால் உடலும் மனதும் அமைதியாகும். இதுவே சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும்.
- குழந்தைகளுக்கு இயற்கையின் ரகசியத்தை புரியவைக்க எளிய முறை. குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த வாழ்வியல் பாடத்தையும், அனைத்து சூழலையும் சமாளிக்கும் கலையை எளிதில் கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகள் மண்ணை தொடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
- மீதமிருக்கும் காய்களை மற்றவர்களுக்கும் கொடுத்ததும் மகிழலாம்.
- விற்பனை செய்தும் பணமீட்டலாம். அதிலும் ஆர்கானிக் உணவுக்கு ஒரு தனி மௌசே இன்று உள்ளது. உங்கள் வீட்டிற்கே வந்து வாங்குவார்கள்.
மொத்தத்தில் விடுமுறைக்கு ஏதோ ஒரு ரிசார்ட்டுக்கு செல்வதில் கிடைக்கும் சந்தோஷமும், ஆனந்தமும் நமக்கும் நமது குடும்பத்திற்கும் வீட்டிலேயே கிடைக்கும்.
ஓய்வு, ஆரோக்கியம், சந்தோசம், நல்ல உணவு என அனைத்தையும் நமது வீட்டிலேயே நம் குடும்பத்துடன் பெறலாம்.
குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பதனையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது அவசியம் மட்டுமல்ல அது நமது கடமையுமாகும்.
புவி வெப்பமயம், மழையின்மை, தொற்றுநோய் பரவல், விவசாயம் பொய்க்க இருக்கும் காலத்திலும் உணவின் தேவை அதிகம்.. அதனை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் வருங்காலத்தினருக்கு ஏற்றவகையில் இயற்கை தோட்டத்தினை அமைக்கும் கலையை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஒரு விதையிலிருந்து கிடைப்பது செடியும், காய்களும் மட்டுமல்ல.. அந்த ஒரு விதையிலிருந்து ஆயிரம் ஆயிரம் விதைகளைப் பெறலாம். நாட்டு ரக விதைகளில் இருந்து முளைப்புத்திறன் மிக்க இவ்வளவு விதைகளைப் பெறலாம் என்பதனையும், இயற்கையின் ரகசியத்தையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இன்றைய நவீன விதைகள் முளைப்புத்திறன் அற்றவை, ஆனால் நமது நாட்டு ரகங்கள் தரமான விதைகளை இயற்கையாகவே உருவாக்குபவை என்பதனையும் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது நமது கடமை.
ஒன்றிலிருந்து பலவாக பெருக்கும் இயற்கையின் ரகசியத்தையும், வானிலை, மண்வளம், மண் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, நோய் மேலாண்மை, கால நிர்வாகம், சேமிப்பின் அவசியம், நீர் மேலாண்மை, திட்டமிடுதல், களை மேலாண்மை, விட்டுக்கொடுத்தல் என பல விதங்களில் ஒரு மேனேஜ்மென்ட் கோர்ஸையே எளிமையாக குழந்தைகளுக்கு இந்த வீட்டுதோட்டத்தின் மூலம் கற்றுக்கொடுக்கலாம்.
தன்னம்பிக்கையான வருங்காலத்தையும் எளிதில் உருவாக்க நமது தோட்டம் நமக்கு துணையாக இருக்கும். மொத்தத்தில் விதை தொடங்கி, பூப்பூத்தல், காய்ப்பு, அறுவடை, பின் அடுத்த சுழற்சி என இயற்கையின் சுழற்சியையும், வாழ்க்கைப் பாடத்தையும் அதன் தத்துவத்தையும் எளிதாக புரிந்தும் கொள்வார்கள்.
வீட்டுத்தோட்டம் வெறும் பொழுது போக்கோ அல்லது நஞ்சற்ற உணவின் தேவையோ மட்டுமல்ல.. இன்றைய சூழலில் பல சவால்களை சமாளிக்கும் ஒரு கலையும் கூடத்தான்.
மேலும் வீட்டுத் தோட்டம் பொழுதுபோக்கா? அவசியமா? என்பதையும், விதைகளைப் பற்றியும், பாரம்பரிய நாட்டு விதைகளின் அவைசியத்தையும், விதைகள் ஆரோக்கியத்திற்கு ஆதாரமா?, இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகள் – இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகளையும் அடுத்தடுத்து தெரிந்துக் கொள்வோம்.