சூரியன், சூரியஒளி என்றதுமே இன்றையவர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது sunscreen லோஷன் தான். இன்று வயது, பாலின வித்யாசம் இல்லாமல் அனைவரும் பயப்படுவது சூரியனைப்பார்த்து. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஏராளம் என்ற நிலையில் நமக்கு மட்டும் sunscreen-னா? நமது செடிகொடிகளுக்கும் சூரியனிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமே என்று புத்திசாலித்தனமாக நினைக்கிறோம். விளைவு green house, sun protective garden போன்றவை. இவை உண்மையில் நமக்கு நன்மை அளிக்கிறதா?
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் வாழ்வாதாரமாக இருப்பது சூரியனும் சூரியஒளியும். சூரிய ஒளி இல்லாத இடங்களில் உயிரினங்களின் எண்ணிக்கை சொற்பமே, அதுமட்டுமல்ல சூரிய ஒளி இல்லாத இடங்களில் இயற்கையாக உணவும் கிடைப்பதில்லை. உணவு உற்பத்திக்கு சூரியஒளி அவசியம். செடிகள் ஒளிசேர்க்கை மூலமே வளர்கிறது.
இந்தியாவிற்கும், உலக நாடுகளுக்கும் உள்ள வேறுபாடினை புரிந்து கொள்ளாமல் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு உலகையே இன்டர்நெட்டில் வலம் வருகிறோமே அதன் விளைவுதான் இந்த புரியாமை.
பொன் விளையும் பூமி என்ற பெயர்பெற்றது நமது நாடு.. இன்று இந்த நிலை இல்லையென்றால் அதற்கு காரணம் நாம் தான். நமது நாட்டில் இன்று விவசாயம் இல்லை ஆனால் சூரியனே இல்லாத நாடுகளில் விவசாயம் பிரமாதமாக நடக்கிறது என்ற தகவலையும், அவர்களின் தொழில்நுட்பத்தையும் மெச்சிக்கொண்டு வலைதளங்களின் உதவியுடன் அவற்றை தெரிந்துகொள்வோம். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இதுவே காரணம்.
பத்தாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் இருந்த நமது விவசாயத்தையும், விவசாயிகளையும், நமது தொழில்நுட்பத்தையும் தெரிந்துகொள்ளாமல் கத்துக்குட்டிகளிடம் இருந்து விவசாயத்தை பயில்கிறோமே, இது வேதனையை தருவது மட்டுமல்ல நமது திறமைகளையும் குறைகிறது.
சூரியஒளி தேவைக்கேற்றவாறு இந்தியாவில் சீராக கிடைத்ததே விவசாயம் செழித்ததற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தது. இதனால் செடிகள், மண், மக்கள் என அனைத்து செழித்தது. அவ்வாறான அற்புதமான புவியியல் அம்சங்கள் கொண்டு விளங்குகிறது.
மேற்கத்திய நாடுகளை அதிகமாக உற்றுநோக்கும் நமக்கு இந்தியாவின் தன்மைகள் மறந்து விடுகிறது. மேற்கத்திய நாடுகளில் வெயிலே சொற்பம் தான். நாம் சூரியஒளி நமது உடலில் படக்கூடாது என்று பெருமுயற்சிகளை செய்கிறோம், அவர்கள் ஆங்காங்கே கடற்கரையிலும், வெயில் கிடைக்கும் இடங்களிலும் நாள் முழுவதும் துணி கூட இல்லமால் படுத்திருப்பதை பார்த்திருப்போம் (திரைப்படங்களிலாவதும் பார்த்திருப்போம்). இதுதான் புதிரே..புரிந்தால் ஆரோக்கியமாக வாழலாம். புதிரில் மாட்டிக்கொண்டு பெருமை பேசினால் நோய்களும், சத்துக்குறைபாடுகளும் வரிசையில் காத்துக்கொண்டிருக்கும்.
சூரியனே இல்லாத பல நாடுகளில் அவர்களின் பெருமுயற்சியால் தொழில்நுட்பத்தை கொண்டு சூரியனைப்போலவே சூழலை உருவாக்கி செடிகளை வளர்க்கின்றனர். இதைப் புரிந்து கொள்ளாமல் வலைதளங்களில் செடி வளர்ப்பது என்று தேடிதேடி நாமும் அவர்களைப்போல் இயற்கையாக இருக்கும் வளங்களை மறந்து, அழித்து செயற்கையாக (உதாரணத்திற்கு green house) நவீனம் என்ற பெயரில் உருவாக்க அதுவே நமக்கு கேடாக விளைகிறது. மேலும் நம்மவர்கள் அதற்கு சொல்லும் காரணம் இன்னும் வேடிக்கையானது. செடிகள் வெயிலில் வாடிவிடும், வளர்ச்சி தடைபடும் போன்றவை. அதற்கு கிரீன்ஹவுஸ் அவசியமில்லை. கிரீன்ஹவுஸினால் சுற்றுசூழலில் வெப்பம் அதிகரிக்கும்.
கிரீன்ஹவுஸ் என்பது பார்க்க மாடிகளை அழகாக்கலாம், இயற்கையான தன்மைகளை அதில் விளையும் உணவுகள் பெற்றிருக்காது.
உலகில் உள்ள அனைத்து உயிரினமும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது, மனிதர்கள் மண்ணை நம்பி இருக்கின்றனர் என்று மண் பகுதியில் பார்த்தோம், மண்ணிலிருந்து கிடைக்கும் செடிகளின் மூலமே மனிதர்கள் தங்களின் உணவுத் தேவையை அடைகின்றனர். அவ்வாறு இருக்க இந்த செடி, கொடி, மரங்கள் தங்களுக்கு தேவையான உணவை சூரியஒளி மூலமே பெறுகிறது, மண், நீர், காற்று இவை அனைத்தையும் வளமாக மாற்ற உதவும் செடிகள் சூரியஒளியின் துணைகொண்டே இதனை சாத்தியமாகிறது.
ஆங்கிலத்தில் photosynthesis அதாவது ஒளிசேர்க்கையில் சூரியனிடம் இருந்து கிடைக்கும் ஒளியின் மூலம் தனக்கு தேவையான அனைத்தையுமே செடிகள் பெறுகிறது. ஒவ்வொரு வகை செடிகளும் ஒவ்வொரு வகையில் சூரிய ஒளியினை நாடுகிறது. சிலவகை செடிகளுக்கு அதிகமாக சூரியஒளி தேவை, சிலவகைகளுக்கு குறைவகத் தேவைப்படுகிறது. செடிகளும் அதற்கேற்றாற்போல் விளைகிறது. வெப்பம் அதிகம் தேவைப்படும் செடிகள் பொதுவாக வெப்பமான இடங்களில் இருப்பவர்களுக்கு உணவாகிறது. அதுவே வெப்பம் குறைவாக இருக்கும் இடங்களில் விளையும் செடிகள் அந்த இடங்களில் இருப்பவர்களுக்கு உணவாகிறது. இதுவே இயற்கையின் விதி. இதனை நாம் மாற்றும்பொழுது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
உதாரணத்திற்கு குளிரான இடத்தில் விளையும் காய்கள் அதிக மாவுச்சத்தினை பெற்றிருக்கும், அது குளிரான இடத்தில் வாழ்பவர்களுக்கு உடல் அதிக வெப்பம் தேவைப்பட அவர்களுக்கு ஏற்ற உணவு, அதனை கொண்டு போய் வெப்பமான இடத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்தால் பல பல உபாதைகள், நோய்கள் ஏற்படும். இதனை மனதில் கொண்டு எந்த செடியை, எங்கு விளையவைக்க வேண்டும் என்று நாம் தீர்மானிக்க வேண்டும். நாம் வாழும் இடத்திற்கு ஏற்ப செடிகளை முதலில் தேர்வு செய்ய வேண்டும். தமிழகத்தின் அனைத்து நாட்டுக்காய்களும் தமிழகத்தில் நன்கு விளையும், மலைப்பகுதிகளில் விளையும் காய்கள் அந்த பகுதியில் இயற்கையாக விளையும்.
இன்னும் பலருக்கு இன்று தமிழகத்தில் இருக்கும் வெப்ப காலத்தை நினைத்தாலே செடிகள் அனல் காற்றால் வாடிவிடுமே என்ற எண்ணம்வேறு பயமுறுத்தும். இதற்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை, பனிக்காலத்தில், குளிர்காலத்திலும் இலைகளை உதிர்த்த மரங்கள், வெயிலைக்கண்டதும் செழித்து வளர தொடங்குவதைப்போல வெயில் காலத்தில் செடிகளும், மற்ற கீரைகள், கொடிகளும் செழிப்பாகவே வளரும். கூடாரங்களைக்கொண்டு செடிகள் இருக்கும் இடங்களை செயற்கையாக மூடினால் தான் வெப்பமும், அனலும் அதிகரிக்கும். இல்லையானால் இயற்கையான வெப்பத்திலும் நமது செடிகள் தாக்குப்பிடித்து வளரும். அவற்றிற்கு தேவையான ஊட்டங்களையும், நீரையும் சீராக கொடுப்பதுடன், வேர்களை நன்கு மூடிவைத்து (மூடாக்கு இடுவது – வரவிருக்கும் இதழ்களில் பார்ப்போம்) பாதுகாப்பது செழிப்பான வளர்ச்சியைத்தரும்.
செடிகளை மண்ணிலோ அல்லது மண்தொட்டிகளில் மாடியில் வைக்கவோ எந்த நிழலும் தேவையில்லை. வெயில் காலங்களிலும் அன்றாடம் இரண்டு முறை நீரூற்ற செடிகள் நன்கு செழிப்பாக வளரும். செடிகளை வெயில் அதிகம் படும் சுவர்களுக்கு அருகில் வைக்காமல் இரண்டடி இடைவெளி விட்டு வைப்பது சிறந்தது, மாடியில் வைப்பதானால் ஏதேனும் மரக்கட்டைகளை வைத்து அதன்மேல் வைப்பதால் வெப்பம் நேரடியாக செடிகளுக்கு செல்லாது.
மண்ணும், மண்தொட்டியும் எந்த வெப்பத்தினையும் தேவையில்லாமல் செடிகளுக்கு அளித்து அவற்றை வாடா விடாது. அதுவே செடிகளை பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் அல்லது வேறு ஏதேனும் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மைகொண்ட கொள்கலனில் வைத்தோமானால் அதற்கு வெயில் காலத்தில் மட்டும் ஐம்பது சதவீத (50%) வெயிலை தடுக்கும் மேல் விரிப்புகளை பயன்படுத்தலாம். இதனை shade net என்பார்கள். அதிலும் ஒன்றை கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும், இந்த நிழல் வலையினை நாலாபக்கமும், மேல்பக்கமும் என்று அடைக்கக்கூடாது. செடிகளுக்கு மேல்புறம் மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இதனால் செடிகளின் மேல் படும் வெயிலின் அளவு குறைவதுடன், வெப்பமும் ஏற்படாது, நல்ல காற்றோட்டமும் நான்கு பக்கத்திலிருந்தும் இருக்கும், செடிகளும் செழிப்பாக வளரும்.
நிழல் வலைகள் பல வகைகளில் உள்ளது. பொதுவாக வெப்பமான காலங்களில் ஐம்பது சதவீத நிழல் வலைகளை செடிகளுக்கு மேற்பகுதியில் மட்டும் இடலாம் அல்லது செடிகளை ஏதேனும் மரங்கள் அருகில் வைக்கலாம். இதனால் வெப்பம் மட்டுமல்ல அனல் காற்றும் குறையும். இதிலும் பல செடிகள் வெயிலை விரும்பும் செடிகள், உதாரணத்திற்கு வெண்டை, கத்திரி, வெள்ளரி, தக்காளி போன்றவற்றை சாதாரணமாகவே வைக்கலாம், இவைகளுக்கு குறைந்தது 6-8மணி நேர வெயில் தேவை. இதே போல் பீன்ஸ், முட்டை கோஸ், காளிஃபிளவ்ர், காரட், வெங்காயம், முள்ளங்கி போன்றவைகள் வெயிலையும், நிழலையும் விரும்பும் செடிகள். இவற்றை அதற்கேற்றவாறு வைக்கலாம். வெந்தயக்கீரை போன்றவை நிழலை விரும்புபவை ஆயினும் வெயில் காலத்தில் செழிப்பாக வளரும். அதற்கேற்றவாறு செடிகளை முறையாக வைப்பதால் எல்லா காலத்திலும் வளமான விளைச்சலினைப் பெறலாம்.
செடிகளுக்கும், நமக்கும் எந்த sunscreenனும் இனி தேவையில்லை. வெயில்காலத்திற்கு மட்டும் 50% மேல்விரிப்பை அளிக்கலாம், அல்லது ஏதேனும் 3 மணிநேரம் மட்டும் வெயில் படும் நிழல்களில் செடிகளை வைக்கலாம். மரநிழல் அல்லது வீடுகளின் நிழலில் வைக்கலாம். அதுவும் நிலத்திலும், மண் தொட்டியிலும் வைக்கும் செடிகளுக்கு தேவையில்லை காரணம் இவை வெப்பத்தினை செடிகளுக்கு அளிப்பதில்லை. செடிகளும் செழிப்பாக வளரும். வீடுகளில் இனி செடிகளால் அழகுபடுத்துவோம், greenhouse சினால் அல்ல.. பச்சை போர்வையாக செடிகள் இருக்கட்டும். சூரியஒளியினை வீணடிக்காமல் அறுவடை செய்வோம்.