மூக்கு வடிதல் நிற்க

மூக்கில் நீர் வடிதல் என்ற பிரச்சனை பொதுவாக அனைவருக்குமே வரக்கூடியது தான். பெரியவர்களுக்கு தலை பாரமாக இருப்பது, சளி, இருமல், தும்மல் போன்றவையும் இவற்றுடன் சில நேரங்களில் இருக்கும் அல்லது இவற்றிற்குப் பின் மூக்கு வடிதல், மூக்கு ஊத்துதல் ஏற்படும்.

குனிந்தால் நிமிர்ந்தால் என தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் மூக்கில் நீர் வடிந்துக் கொண்டே இருக்கும். பெரியவர்களுக்கே இது ஒரு மிக பெரிய சவாலான தொந்தரவுதான் என்றால் அது மிகையாகாது.

அப்படியிருக்க குழந்தைகளுக்கு அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த தொந்தரவு ஏற்பட்டால் குழந்தையின் சுறுசுறுப்பும், புத்துணர்வும் குறைவதும் எந்நேரமும் தாயை தேடுவதும், தாயின் அரவணைப்பில் இருக்க நினைப்பதும், அழுவதும் சிணுங்குவதும் குழந்தைகளுக்கும் பெற்றவர்களுக்குமே ஒரு சங்கடத்தை அளிக்கும். இதனால் தூங்கவும் அதிகமாக சிரமப்படுவார்கள்.

பெரியவர்களுக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இந்த தொந்தரவை போக்க பல மருத்துவ முறைகள் உள்ளது. நான்கு மிளகை நெய்யில் வறுத்து உண்ணலாம், ஓமம் கசாயம் செய்து பருகலாம், தேனில் சுக்கு மிளகு திப்பிலி சூரணம் கலந்து எடுக்கலாம், மஞ்சள் அல்லது வசம்பு புகைக்கலாம், சளியும் பிடித்திருந்தால் கற்பூரம் கலந்த தேங்காய் எண்ணெயை சூடு செய்து நெஞ்சில் தேய்க்கலாம், கற்பூரவள்ளி, துளசி தேநீர் பருகலாம், இஞ்சி நீர் பருகலாம்.

அதுவே பச்சிளம் குழந்தைக்கு இந்த சிகிச்சைகள் பெருமளவில் செய்ய முடியாத நிலை ஏற்படும். மஞ்சள் வசம்பு புகை, கற்பூர எண்ணெய் பயன்படுத்தலாம். அதுவும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அடிக்கடி இந்த தொந்தரவு ஏற்படும், பொதுவாக ஒரு முறை ஏற்பட நீண்ட நாட்கள் தொடர்ந்து இருப்பதுமுண்டு. குழந்தைகள் இதனை வாய், நாக்கினால் மீண்டும் உண்பது அதிக தொந்தரவை ஏற்படுத்தவும் செய்யும். அதனால் நாள் கடத்தாமல் குழந்தைகளில் இந்த தொந்தரவை உடனுக்குடன் சரிசெய்வதும், மீண்டும் மீண்டும் வராமல் தடுக்கவும் வேண்டும். இதற்கு ஒரு சிறந்த கை கண்ட கை வைத்திய முறையை பார்ப்போம்.

குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், உடல் பலப்படவும், மூக்கு வடிதல் நிற்கவும் இஞ்சி பேருதவியாக இருக்கும். நமது கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் வீட்டு வைத்தியம் / பாட்டி வைத்திய முறை இது.

இஞ்சி சாறு வைத்தியம்

சிறிதளவு இஞ்சியை எடுத்து அதனை தோல் நீக்கி நன்கு மைய அரைக்க வேண்டும். அரைத்தப் பின் ஒரு துணியில் சாறு பிழிய வேண்டும். இவ்வாறு ஒரு சங்கு அளவு சாறு எடுத்து அதனை ஒரு கரண்டியில் எடுத்து, அடுப்பில் வைத்து சூடு காட்டவும். பின் அதனை சிறிது இளம்சூடாக ஆறவைத்து இளம்சூட்டில் இருக்க காலை நேரத்தில் குழந்தையின் உச்சியில் தேய்த்து ஒரு அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

babies running nose

அரைமணி நேரம் ஊறிய பின் இளம்சூடான வெந்நீரில் குளிக்க வைக்க வேண்டும். இந்த இஞ்சி சாறு குளிக்கும் பொழுது கண்களில் படாதவாறு குளிக்க வைக்கவேண்டும். குழந்தையில் தலையை தாழ்த்தி வைத்து தலைக்கு நீர் ஊற்றி குளிக்க வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலையில் இஞ்சி சாறு தேய்த்து குளிக்க வைக்க நாள்பட்ட மூக்கு வடிதல் விரைவில் மறையும்.

(1 vote)