பாற்சொரி கீரை

Asystasia gangetica: பாற்சொரி கீரை

வேறு பெயர்கள்

தமிழகம் மட்டுமில்லாமல் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் பொதுவாக பார்க்கப்படும் ஒரு கீரை தான் இந்த பாற்சொரி கீரை. கிராமங்களில் பாச்சட்டி கீரை என பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. பொத்திக்கீரை, நறும்சுவைக்கீரை, மிதிகீரை, அண்டவாய் கீரை என்று பல பெயர்களிலும் மக்கள் அழைக்கின்றனர்.

ஒரு கீரை வகை தான்

இந்த மூலிகை எல்லா இடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. இது ஒரு மூலிகை என்றாலும் ஒரு கீரை வகையை சேர்ந்ததும் தான். நீர்ப்பாங்கான பகுதிகளில் சாதாரணமாக பார்க்கப்படும் கீரை. மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் கீரை. பல நாடுகளில் அழகுக்காகவும் சாலையோரங்களில் வளர்க்கப்படும் தாவரம்.

parchori-keerai-tamil-mooligai

விவசாயத்திற்கு

அதிக சத்துக்களைக் கொண்ட இந்த கீரையை பொதுவாக விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும் விவசாய நிலங்களில் ஊடுபயிராக வளர்ப்பதுண்டு. இந்த பாற்சொரி கீரையின் பூக்கள் பூச்சிகளை ஈர்ப்பதால் மற்ற பயிர்கள் சேதமின்றி நல்ல விளைச்சலைத் தரும்.

வயிற்றுக்கடுப்பு

நிழலில் செழிப்பாக விளையும் இந்த கீரை கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாக சில நாடுகளில் பயன்படுகிறது. பாற்சொரி கீரையின் இளங்கீரைகள் சமைத்து உண்ண நல்ல சுவையாக இருக்கும். கீரையை எள் அல்லது வேர்கடலையை அரைத்து சேர்த்து சமைப்பது சுவையை அதிகரிக்கும். வயிற்றுக்கடுப்பு, மலம், சீதபேதி, இரத்தபேதி முதலியவற்றை குணப்படுத்தும்.

மூலம்

மூலம், வீக்கம், மண்ணீரல், முடக்கு வாதம், மூட்டுவலி, வாத வீக்கம் போன்ற தொந்தரவுகளுக்கு மருந்தாகவும் உள்ளது. பாற்சொறி கீரையின் வேர் பொடி வயிற்றுவலி, விசக்கடிக்கும் மருந்தாக உள்ளது. வெள்ளைப்படுத்தல், தோல் நோய்களுக்கும் இந்த கீரை மருந்தாக உள்ளது. சிலநாடுகளில் ஆஸ்துமாவிற்கும் இந்த கீரையை கை வைத்தியமாக பயன்படுத்துகின்றனர்.

தொண்டைக்கு

வறட்டு இருமல், தொண்டை வலிக்கு இந்த கீரையின் சாறுடன் எலுமிச்சை சாறு, வெங்காயத்தின் சாறு சேர்த்து கொடுக்க விரைவில் நல்ல பலன் கிடைக்கும். பாற்சொரி கீரையுடன் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டுவர சீதபேதியை குணப்படுத்தும், குடல் புண்ணை ஆற்றும்.

தேநீர்

இந்த பாற்சொரி கீரையில் தேநீரும் தயாரித்து அவ்வபொழுது பருக உடல் ஆரோக்கியம் கூடும். முடக்கு வாத வீக்கங்கள் உள்ள இடத்தில இந்த கீரையை அரைத்து பற்றாகவும் போடலாம். நிறைமாத கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும் இந்த கீரை உதவுகிறது.

(26 votes)