Saraca Asoca; Ashoka Tree; அசோகு
தமிழகத்தில் அழகுக்காக வளர்க்கப்படும் நீண்ட நெடு மரம் இந்த அசோகு மரம். வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகமாக இதனைப் பார்க்க முடியும். அசோகம், பிண்டி, விசித்திரம், கிருமி காரகம், காகோளி, ஆயில், செயலை, சாயை, அங்கணப் பிரியை என பல பெயர்கள் இதற்கு உண்டு.
அசோகம் மரத்தில் இலைகள் நீண்ட சிறகு வடிவ கூட்டிலைகளாக கீழ் நோக்கி இருக்கும். அசோகு மர பூ செம்மை நிறத்தில் பூங்கொத்து போல் இருக்கும். துவர்ப்பு சுவைக் கொண்ட இதன் பூ, பட்டை மருத்துவ பயன்கொண்டது.
பெண்ணுறுப்பில் ஏற்படும் வெப்பத்தை நீக்கி கருப்பையை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட இது குழந்தைப்பேறு கோளாறுகளை நீக்க உதவும் சிறந்த மூலிகை. மேலும் பெரும்பாடு, நீரிழிவு, வாயுத் தொல்லை, வயிற்றுவலி, பெண் மலடு, கருச்சிதைவு, நரம்பு, சதை வீக்கத்தையும் மட்டுப்படுத்தும்.
- இந்த அசோகப் பட்டையை பாலுடன் காய்ச்சி முறைப்படி பருக பெண்களின் ரத்தப் போக்கு, பெரும்பாடு, கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள், மாதவிலக்கு தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை அளிக்கும்.
- அசோகப் பூ மற்றும் மாம்பருப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை என இருவேளை பாலில் கலந்து பருக சீத பேதி, ரத்த பேதி நீங்கும். அசோகப் பூ பொடி எடுக்க பெரும்பாடு மறையும். அசோகப் பட்டைச் சாறும் பெரும்பாடு நீங்க பலனிக்கும்.