கோடைக்கு உடலை குளிர்விக்க உதவும் சிறந்த காய்களில் ஒன்று இந்த வெண்பூசணி. இதனை பல இடங்களில் தடியங்காய், சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்றும் அழைப்பதுண்டு. மூளைச் சோர்வு, உடல் அசதிக்கும் சிறந்த பலனை அளிக்கிறது இந்த வெண்பூசணி சாறு. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், உடலுக்கு தேவையான நீர் சத்துக்களையும், நார் சத்துக்களையும் அளிக்கும் அற்புத சாறு. அவ்வப்பொழுது இதனை பருக உடல் கழிவுகள் நீங்கும். ஆரோக்கியம் பெருகும், புத்துணர்வு அதிகரிக்கும்.
உடலில் ஏற்படும் பல தொந்தரவுகளுக்கு அன்றாடம் இந்த வெண்பூசணியை உட்கொள்ள பல நன்மைகள் ஏற்படும். பொதுவாக உடல் எடையை அதிகரிக்க உதவும் இந்த சாம்பல் பூசணி உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. நீர் சத்து குறைபாடு, நார் சத்து குறைபாட்டிற்கும் சிறந்த மருந்து. நாவறட்சி, அஜீரணம், குடல் புண், மலச்சிக்கல், நரம்பியல் நோய்களுக்கும் மா மருந்தாக உதவக்கூடியது.
வெண்பூசணி சாறு எவ்வாறு தயாரிப்பது
அன்றாடம் நூறு கிராம் அளவிலான இந்த பூசணியை துண்டுகளாக நறுக்கி சாறெடுத்து அதனில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலையில் பருக மூளைச் சோர்வு நீங்குவதுடன், உடல் புத்துணர்வுடனும் இருக்கும்.
நரம்பு நோய்களுக்கு
நரம்பு சார்ந்த நோய்களுக்கு இந்த சாம்பல் பூசணியை நூறு கிராம் எடுத்து துண்டுகளாக நறுக்கி சாறெடுத்து அதனுடன் மூன்று பங்கு நீர் அல்லது இளநீர் கலந்து பருக விரைவில் நல்ல குணம் தெரியும். மேலும் இவ்வாறு பருகுவதால் உடல் உஷ்ணம் குறையும், வாய்ப்புண், குடல் புண், அல்சர் ஆகியவையும் விரைவில் நீங்கும். மூலம், மலச்சிக்கலுக்கு சிறந்த பலனை அளிக்கும். கண் எரிச்சல், கட்டிகள், கல்லீரல் நோய்களுக்கும் நல்லது.
காலையில் இதனை பருகுவதால் உடலின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.