பிள்ளையாருக்கு உகந்த அருகம்புல்லில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளது. பஞ்சபூதங்களுக்கு அடையாளமான விநாயகருக்கு உகந்தது அருகம்புல். அருகம்புல்லில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்துக்களும் மிகவும் அதிகமாக உள்ளது. அருகம்புல்லை ஏதேனும் ஒரு வகையில் அன்றாடம் பயன்படுத்துவதால் உடலுக்கு புத்துணர்வு கிடைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
அருகம்புல் அருகில் கிடைப்பவர்கள் அன்றாடம் அருகம்புல் சாறு பிழிந்து பருகுவது சிறந்தது. அன்றாடம் பச்சையாக கிடைக்காது என்பவர்கள் அருகம்புல்லை கிடைக்கக்கூடிய இடத்தில் அல்லது கிடைக்கக்கூடிய காலத்தில் எடுத்து பதப்படுத்தி பொடியாக தயாரித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் பொடியை நீரில் கலந்து பருகுவதால் நோயற்ற வாழ்வை பெற முடியும். எவ்வாறு அருகம்புல்லை பொடியாக தயாரித்து சேமித்து வைத்து பயன்படுத்துவது என இனி பார்ப்போம்.
அருகம் புல் பொடி தயாரிப்பது
சுமார் ஒரு கிலோ எடையுள்ள பச்சை அருகம்புல்லை எடுத்து வந்து சுத்தம் செய்து நிழலிலும் வெயிலிலுமாக நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த பின் அதனை தூளாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரவை மில்லில் கொடுத்தும் அரைக்கலாம், வீட்டில் மிக்ஸியில் அரைப்பதானால் சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு அரைக்கவும், இல்லையானால் மிக்ஸியில் சுத்திக் கொள்ளும். தூளாக அரைத்த பின் மாசல்லடையில் சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலக்கி காலை நேரத்தில் குடித்து வரவும். இந்தப் பொடியைக் கொண்டு அருகம் புல் பொடி ஜூஸ் செய்தும் பருகலாம். இதனால் ரத்தம் சுத்தமடையும், இருதயம் பலப்படும், சுவாச கோளாறுகள் நீங்கும், ஜீரண மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும், மூளை விருத்தியடையும். அருகம்புல்லுடன் வேப்பிலையை கலந்தும் காயவைத்து அரைக்கலாம் அல்லது வில்வ இலையைக் கலந்தும் காயவைத்து அரைக்கலாம்.