Sida acuta; Arivalmanai poondu
தமிழகத்தில் தரிசு நிலங்களில், புதர்களில், சாலை ஓரங்களில் என எங்கும் மழைக் காலங்களில் மண்டிக்கிடக்கும் மூலிகைகளில் ஒன்று அரிவாள்மனைப் பூண்டு. அம்பு வடிவில் இருக்கும் இலைகளின் கூர்நுனிப் பற்கள் கொண்ட மிகக் குறுஞ் செடி இந்த அரிவாள்மனைப் பூண்டு. இந்த மூலிகையின் இலையே மருத்துவப் பயன் கொண்டது. இது ஒரு பூண்டு வகை மூலிகை.
இதன் இலை அரிவாள் வடிவத்தினாலும், இதன் மருத்துவப் பயனாலும் இந்த குறுஞ் செடிக்கு அரிவாள்மனைப் பூண்டு என பெயர் வந்திருக்கலாம். உடலில் ஏற்படும் வெட்டுகாயங்கள் அதாவது அந்த காலத்தில் இருந்த அரிவாளால் ஏதேனும் வெட்டு ஏற்பட்டு அதனால் காயங்கள், இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தால் அதனை தடுக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் மூலிகை இந்த அரிவாள்மனைப் பூண்டு.
அரிவாள்மனைப் பூண்டு மூலிகையின் இலையை கசக்கி அதன் சாறினை வெட்டுக் காயத்தில் பிழிந்துவிட இரத்தப் பெருக்கு, இரத்தக் கசிவு நிற்கும்.
இதனால் ஏதேனும் நஞ்சு ஏற்பட்டிருந்தால் அதனையும் முறிக்கும் ஆற்றல் கொண்டது. குப்பைமேனி இலையுடன் சமஅளவு அரிவாள்மனைப் பூண்டு இலையையும் எடுத்து அதனுடன் மூன்று மிளகு, இரண்டு பூண்டு பல் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உள்ளுக்குள்ளும் எடுத்து காயத்திற்கும் கட்ட விரைவில் நஞ்சு முறியும். இந்த சமயத்தில் பத்தியமிருக்க வேண்டும்.