அரைவட்டம் போல் உடலை பக்கவாட்டில் வளைக்கும் ஆசனம் இந்த அர்த்தக்காடி சக்ராசனம். ‘அர்த்’ என்றால் பாதி, ‘காடி’ என்றால் பக்கவாட்டில் என்றும் ‘சக்கரம்’ என்றால் வட்டம் என்றும் குறிக்கும். பாதி உடலை முன்பாகவோ, பின்பாகவோ வளைக்காமல் சரியாக பக்கவாட்டில் அரைவட்டம் போல் வளைக்கும் ஆசனம்.
அர்த்தக்காடி சக்ராசனம் செய்முறை
யோகா செய்யும் விரிப்பில் முதலில் நேராக நின்று பின் இரண்டடி தூரம் பக்கவாட்டில் காலை அகட்டி வைத்து வலது கையை தலைக்கு மேல் செங்குத்தாகத் தூக்கி காதோடு ஓட்டுமாறு வைக்கவேண்டும். இரண்டு கால் முழங்கால்களையும் மடக்காமல் இடது கையைக் கொண்டு காலை அல்லது தரையை தொடலாம். இவ்வாறு 20 நொடிகளுக்கு வைத்திருந்து பின் பழைய நிலைக்கு வந்து ஒரு நொடிக்குப் பின் இடப்பக்கம் மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு இரண்டு பக்கமும் செய்ய ஒரு ஆசனம் முழுமையடையும்.
அர்த்தக்காடி சக்ராசனம் பயன்கள்
மனிதர்களுக்கு இடுப்பை விட தோள் பட்டையின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். இன்று இந்த நிலை தலைகீழாக உள்ளது. இதனை சீராக்க அர்த்தக்காடி சக்ராசனம் உதவும். இடுப்பில் இருக்கும் அதிகப்படியாக சதை, பெருந்தொந்தி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி ஆகியனவற்றிற்கு சிறந்த ஆசனம். இடுப்பு, தொடை, தொப்புள், அடிவயிற்றிளிருக்கும் சதைகளைக் கரைக்கும்.
வயிற்றின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், சிறுகுடல் பெருங்குடலின் செயல்பாடு சீராகும், பெண்களுக்கு வரும் மாதவிடாய் கருப்பை தொந்தரவுகள் நீங்கும், சினை முட்டை உற்பத்தி சீராகும்.
அர்த்தக்காடி சக்ராசனம் யார் செய்யலாம்
திருமணமான ஆண்கள், பெண்கள் அனைவரும் அவசியம் செய்யவேண்டிய ஆசனம். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. குழந்தை பிறந்த பின் செய்ய வயிற்றுப் பகுதி சுருங்க உதவும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் சிறிது காலத்திற்குப் பின் பூரண நலத்திற்குப் பின் செய்வது சிறந்தது.