Ficus Religiosa; Peepal Tree; Sacred fig; அரச மரம்
கண்ணுக்கு தெரியும் கடவுள் இந்த அரசமரம் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ தேவைப்படும் பிராண சக்தியை அபரிவிதமாக அள்ளித்தரும் மரம். அரசமரத்தின் இலை, விதை, பட்டை, வேர் என பல பாகங்கள் மருத்துவ பயன்கொண்டதாக இருந்தாலும் இது இருக்கும் இடத்து காற்றை சுவாசித்தாலே போதும். புதிதாக ஒரு உயிரையே படைக்கும் ஆற்றல் இந்த அரச மர காற்றிற்கு உண்டு. அதனாலேயே நம்மூர் பெண்கள் குழந்தைப் பேருக்காக அரசமரத்து பிள்ளையாரை வளம் வருகின்றனர். இவ்வாறு சுற்றிவர கருப்பை பலப்படும்,குழந்தைப் பேறு உண்டாகும் என்பதே இதற்கு காரணம்.
பிப்பிலம், அஸ்வத்தம், திருமரம், சராசனம், கணவம், பேதி, பணை, கவலை, அச்வத்தம் என பல பெயர்கள் அரச மரத்திற்கு உண்டு. அரசமரம் கைப்பு கலந்த துவர்ப்பு சுவைக் கொண்டது, இதன் இலைகள் தனி இலைகளாகவும், சதைக்கனி கொண்ட அமைப்பையும் பெற்ற மரம். இது பல பெரிய கிளைகளுடன் இருக்கும் பெரிய மரமாகும்.
அரச மரத்தின் விதைகள் மலத்தை இளக்கச் செய்யும் தன்மைக் கொண்டது. இதன் மரப்பட்டை மற்றும் வேர்ப்பட்டை புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது, மேலும் விக்கல், நீர்வேட்கை, அஜீரணம், கருப்பை கோளாறுகளையும் நீக்கும். அதனுடன் நுரையீரல் நோய்கள், சுரம் மற்றும் ஆண் மலட்டுத் தன்மையைப் போக்கும் சிறந்த தன்மையும் கொண்டது. ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் உயிரளிக்கும் மரம் என்றால் அது மிகையாகது.
அரச மரம் – நன்மைகள்
- பித்த வெடிப்பிற்கு அரச மரத்து பாலை தடவ விரைவில் மறையும்.
- அஜீரணத்தைப் போக்கி, மலத்தை இளக்கும் குணம் கொண்டது அரசம்பழம்.
- அரச மரத்தின் துளிர் இலைகள் அல்லது மரப்பட்டை, வேர்ப்பட்டையை அரைத்து அல்லது சிதைத்து புண்ணில் கட்டினால் விரைவில் புண் ஆறும்.
- அரச துளிரை குடிநீர் செய்து பருக வயிற்றுவலி, விக்கல், அஜீரணம், தாகம், சுரம் குணமாகும்.
- அரசம் பட்டையைக் கொண்டு குடிநீர் செய்து குடித்துவர தீராத விக்கல் நோய் தீரும். இதனையே கொண்டு பெண்ணுறுப்பைக் கழுவ வெள்ளை நோய் விரைவில் நீங்கும்.
- அரசம் பட்டைத் தூளை தேங்காய் எண்ணெய் கலந்து பூச சரும நோய்கள் நீங்கும்.
- சிறிதாக இருக்கும் அரச விதைகள் உயிர்களை படைக்கும் பேராற்றல் கொண்டது. அரச விதைத் தூள் மலட்டுத் தன்மையை நீக்கி ஆண்களின் உயிர் அணுக்களைப் பெருக்க உதவும்.
- அரச விதைக் குடிநீர் நுரையீரல் நோய்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும்.