Withania Somnifera; Winter Chemy; Aswagandha
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மண்ணில் மருந்தாக பயன்படும் ஒரு அற்புத மூலிகை அமுக்கரா என்ற அஸ்வகந்தா. உடலில் ஏற்படும் வீக்கம், படபடப்பு, மனசோர்வு என பல தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்து. அமுக்கிரி, அமுக்குரவு, அமுக்கினாங்கிழங்கு, அஸ்வகந்தி, அஸ்வகந்தம், அசுவம், வராக கர்ணி, இருளிச் செடி, கிடிச் செவி என பல பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு.
மாற்றடுக்கில் தனி இலைகளுடன் சாம்பல் நிறத்துடன் இருக்கும் ஒருவகை புதர்ச் செடி இது. இந்த செடியின் தண்டு, கிளைகள் என அனைத்துப் பாகமும் மெல்லிய சொனைப் போன்ற உரோமத்தோடு காணப்படும். இதன் இலைகள் பச்சையானது மற்றும் வெளிறிய பச்சை நிற பூக்களையும் கொண்ட செடி. இந்த செடியின் முதிர்ந்த கனிகள் சிவப்பாகவும், உருண்டையாகவும் பழுப்பு நிறத் தோல் கொண்டிருக்கும். இந்த செடியின் கிழங்கே அமுக்கிராக்
கிழங்கு. அதுவே மருத்துவக் குணம் கொண்டதும். நாட்டு மருந்து கடைகளில் எளிதாக இதனைப் பெறலாம்.
ஆண்மைப்பெருக்கியாகவும், வீக்கம் மற்றும் கட்டிகளை
கரைக்கும் தன்மையும், நல்ல உறக்கத்தைத் தரக் கூடியதாகவும் இருக்கும் அற்புத மூலிகை.மேலும் உடலைத் தேற்றும் தன்மைக் கொண்ட இந்த மருத்துவ மூலிகை காய்ச்சல், களைப்பு, சளி, சரும நோய் ஆகியவற்றிற்கும் சிறந்தது. சிறுநீரை அதிகரித்து, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தி, பசியை உண்டாக்கும் பண்புகளையும் கொண்டது. மருந்தாக இந்த மூலிகையை தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்த சிறந்த பலனைப் பெறலாம். மருந்தாக இதனைப் பயன்படுத்த நீண்ட ஆயுளையும் பெறலாம். அமுக்கிரா அனைவருக்குமான உடல் தேற்றி மருந்துமாகும்.
உடல்பருமன் / வாதம் / கபம்
வாதம், கபத்தினால் ஏற்படும் நோய்கள் மற்றும் பசியின்மை, உடல்பருமன் ஆகியவற்றிக்கு ஓரிரு மாதங்கள் அன்றாடம் ஒரு சிட்டிகை அளவு அமுக்கிராப் பொடியை தேனுடன் உட்கொள்ள நல்ல பலனைப் பெறலாம்.
வீக்கம் / கட்டி கரைய
அமுக்கிராக் கிழங்கை நன்கு உரசி அல்லது அரைத்து புண், கட்டி, வீக்கம் ஆகியவற்றில் பற்றுப் போட விரைவில் அவை மறையும்.
விந்து பெருக
ஓரிரு சிட்டிகை இந்த அஸ்வகந்தா பொடியுடன் உருக்கிய நெய் கலந்து எடுக்க உடல் பலப்படும், விந்துவைப் பெருக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
பாலுடன் ஒரு சிட்டிகை அளவு அமுக்கிராப் பொடியை சேர்த்து காலை, மாலை பருக நரம்பு தளர்ச்சி நீங்கும். உடல் பலப்படும், உறுதியும் அழகும் கூடும்.