நெல்லி – நம் மூலிகை அறிவோம்

Phyllanthus Emblica; Indian Gooseberry; Amalaki; நெல்லி

தமிழகத்தில் பரவலாக பார்க்கப்படும் ஒரு மரம் நெல்லி மரம். இதன் கனிகள் நெல்லிக்கனிகள். நெல்லயில் பல வகைகள் உள்ளது அவற்றில் பல மருத்துவகுணங்களையும் நன்மைகளையும் கொண்டது நாட்டு நெல்லி ரகம்.

இலைகள் சிறிய இலைகள், சிறகு வடிவ கூட்டிலைகளாக மாற்றிலையில் அடுக்கத்தில் அமையப் பெற்றிருக்கும். நெல்லி மரத்தின் பூக்கள் சிறிய வெண்நிறப் பூக்கள், கொத்து கொத்தாகப் பூக்கும் தன்மைக் கொண்டது.

ஆம்பல், தாத்தாரி, ஆமலகம், ஆலகம், ஆமரிகம், தாத்தரி, கோரங்கம், மிறுதுபலா, மீதுந்து என பல பெயர்கள் நெல்லிக்கு உண்டு. அறுசுவையும் கொண்ட இதன் பிரதான சுவை புளிப்பு. நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது.

உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மைக் கொண்டது, சிறுநீரைப் பெருக்கும் ஆற்றலும், பெற்றது. மேலும் கபநோய்கள், உடல்வலி, ஞாபகமறதி, வாந்தி, மயக்கம், மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கும் சிறந்த பலனை அளிக்கும். இந்தப் பலன்கள் நாட்டு ரக நெல்லிக்கே.

இதன் கனிகள் மஞ்சளுடன் பச்சை கலந்த கனிகளாகவும், இந்த கனிகள் சதைப்பற்று கொண்டவை, உருண்டையானவை. இவற்றில் ஆறு விதைகள் இருக்கும். நெல்லியின் இலை, பூ, பட்டை, வேர், காய் ஆகியவை பயன்படும் பகுதிகள்.

நெல்லி வேர், விதை, பட்டை, ஈர்க்கு, காய், கனி, வற்றல் இவைகளை கற்ப முறைப்படி ஊறுகாய், துவையல், குடிநீர் செய்து முறையான பத்தியத்துடன் உபயோகித்து வர மூலம், உட்சூடு, பெருவயிறு, சூலைவலி, பாண்டு, பெரும்பாடு, ரத்த சோகை, மயக்கம், வாயு போன்றவை தீரும்.

பகலிலேயே நெல்லிகாயை உண்ணவேண்டும். மாலை நேரத்திற்குப் பின்னும் இரவிலும் நெல்லிக்கனிகளை உண்ணக்கூடாது. அதேப்போல் கிழமைகளில் வெள்ளிக்கிழமையும் நெல்லிகாய் உண்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு மாறாக உண்பதால் தூக்கமின்மை, மயக்கம் போன்ற சில உபாதைகள் ஏற்படும்.

இந்த நெல்லிக்காயை பகலில் உண்டு வர வாந்தி, மயக்கம், மலபந்தம், வாயில் அதிக உமிழ்நீர் சுரத்தல், கபநோய்கள் நீங்கும். நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு, தேன் வகைக்கு ஆகியவற்றை ஓவ்வொரு ஸ்பூன் அளவு என எடுத்து கலந்து காலையில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து வெளிவரலாம்.

நெல்லி வேர்ப்பட்டை

இந்த நெல்லிமரத்திலிருந்து கிடைக்கும் நெல்லிமர வேர்ப்பட்டையை தேனில் உரைத்து நாக்கில் தடவினால் நாக்கில் வரக்கூடிய புண் மறையும்.

நெல்லி வேர்

ஆன்மீகத்திலும், உயிர் ஆற்றலை அதிகரிக்கும் அபார ஆற்றல் கொண்ட நெல்லிமர வேரைக் குடிநீர் செய்து தினமும் 2 வேளைகள் பருகி வர வாந்தி, சுவையின்மை, வாத, பித்த, கபத்தினால் ஏற்படும் நோய்கள், பத்தியத்தால் உண்டான தொந்தரவுகள் நீங்கும். வயிறு நன்கு கழியும்.

நெல்லிக் காய்

ஒரு நெல்லிக்காயில் கால் பங்கினை எடுத்து அதனை இடித்து அரை லிட்டர் நீரில் சேர்த்து காய்ச்சி 100 மி.லி.யாக சுண்ட வைத்தப்பின் அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கால் பங்கு வீதம் 3 வேளைகள் என 4 நாட்கள் பருகி வர உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் தணியும்.

நெல்லி இலை

நாட்டு ரக நெல்லி இலையை நீரில் போட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க வாயில் ஏற்படும் புண் விரைவில் மறையும்.

நெல்லி முள்ளி

நெல்லி முள்ளியை தினமும் உண்டுவர சுவையின்மை, உட்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, பைத்தியம், வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளம் போன்றவைக்கு சிறந்த மருந்தாக இருக்கும். உலர்ந்த நெல்லியை நெல்லி முள்ளி என்போம்.

(3 votes)