என்றும் இளமையைக் காக்கும் ஒரு அற்புதக் கனி நெல்லிக்காய். சங்கத் தமிழில் நெல்லிக்கனிக்கு பல பல சிறப்புகள் உள்ளது. பித்தக் கிறுகிறுப்பு, மயக்கம், பைத்தியம், மனத்தடுமாற்றம், இரத்த சோகை இவற்றிற்கு நெல்லிச்சாறு அருமருந்து.
நெல்லிகனியில் அரு நெல்லிக் கனி குளர்ச்சி தரும், பித்தத்தைச் சமன்படுத்தும். காயை அரைத்து மோரில் கலக்கிக் உட்கொள்ள மஞ்சட்காமாலை குணமாகும். கரு நெல்லி என்ற வகை அபூர்வமானது. நெடுநாள் வாழ வைக்கும் தாதுப் பொருட்கள் இதில் உண்டு. இது பொதிகை மலைச்சாரலில் விளைகிறது. ஒளவைக்கு அதியமான் கொடுத்தது இதுவே.
நாட்டு நெல்லி பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பொதுவாக கார்த்திகை மாதம் முதல் மாசி வரை கிடைக்கக் கூடியது. கிடைக்கும் காலத்தில் பதப்படுத்திக் கொண்டு வருடம் முழுவதும் பயன்படுத்தலாம். நெல்லிக்கனியின் சில எளிமையான மருத்துவ பயன்களை தெரிந்துக் கொள்ளலாம்.
மல்டி வைட்டமின் பானம்
ஐந்து நெல்லிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து, அதே அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து, 2 ஸ்பூன் தேன் விட்டு அரை குவளை சுடுநீர் கலந்து காலையில் பருக நோய்கள் பக்கத்தில் வர நடுங்கும். மல்டிவிட்டமின் மாத்திரைகள், மல்டி வைட்டமின் துணை உணவுகளை விட சக்தி வாய்ந்தது இந்த பானம்.
குடல் பலப்பட
ஒரு அவுன்சு நெல்லிச்சாறுடன் அரை அவுன்சு தேன் கலந்து காலையில் உண்ண ஜிரண சக்தி அதிகரிக்கும். குடலில் ஏற்படும் பதிப்புகள் நீங்கும். குடல் பலப்படும்.
விக்கல் நிற்க
நெல்லிச்சாறுடன் கொஞ்சம் அரிசி திப்பிலிப்பொடியைக் கலந்து உண்ண விடாத விக்கல் நிற்கும்.
நரம்பு உறுதியாகும்
ஒரு கரண்டி நெல்லிச்சாறுடன் பசு நெய் சேர்த்துக் காலையில் சுவைக்க ‘நரம்புத் தளர்ச்சி” என்பது ஓடோடிவிடும்.
என்றும் இளமையாக இருக்க
இளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்ண வேண்டும். நெல்லி கிடைக்காத காலங்களில் நெல்லி லேகியம், நெல்லி ஜாம், நெல்லி வற்றல் ஆகியவற்றை தயாரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். அவையும் நன்மை தரும்.