சோற்றுக் கற்றாழை – நம் மூலிகை அறிவோம்

கற்றாழை என்றவுடன் ஏதோ காட்டுச்செடி என்று நினைக்கவேண்டாம், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய இந்த கற்றாழைக்கு இன்னொரு பெயர் குமரி. வயது கடந்தாலும் என்றும் குமரியாகவே நம்மை காக்கும் குணம் கொண்டது இந்த கற்றாழை. இந்த கற்றாழைக்கு கள்ளி என்று மற்றொரு பெயரும் உண்டு. இது ஒரு சிறு செடி வகையை சேர்ந்தது.

வாராவாரம் அழகு நிலையங்களுக்கு செல்ல செலவழிக்கும் நேரத்தைவிட குறைவான நேரமே போதுமானது நமது வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க. அதிலும் கற்றாழைக்கு என்று எந்த நேரமும் செலவழிக்க தேவையில்லை.

கற்றாழையை மாதம் இருமுறை உட்கொள்வதும், தினம் தினம் முகம், கண் வளையம், கழுத்து, கை கால்கள் போன்ற இடத்திற்கு பூசுவதன் மூலம் உடல் பொலிவும், அழகும் அதிகரிக்கும். தினமும் உழைப்பு, அலைச்சல், டென்ஷன், மனசோர்வு ஆகியவற்றால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும் இந்த கற்றாழை குறைத்து என்றும் பொலிவுடன் நம்மைக் காக்கிறது.

சோற்றுக் கற்றாழை பொதுவாக வெப்பமாக இருக்கும் இடத்தில் விளையக்கூடியது. தமிழகத்தில் அனைத்துப் பகுதியிலும் இதனைப் பார்க்க முடியும். கற்றாழையை மிக எளிதாக வீட்டிலேயே வளர்க்கவும் முடியும். மேலும் பல பல நன்மைகளையும், பயன்களையும் அளிக்கக் கூடியது இந்த கற்றாழை.

உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மிக சிறந்த ஒரு நிவாரணத்தை கற்றாழை அளிக்கிறது. கற்றாழையின் பால், மடற்சோறு, சாறு, வேர் ஆகியவை பயன்கொடுக்கக் கூடியது.

ஒவ்வொரு முறையும் கற்றாழையை உண்ணுவதற்கு முன் அதனை தோல் சீவிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஏழு முறை நன்கு நீரில் கழுவி விட்டு பின் பயன்படுத்த வேண்டும்.

கண்வலி கண்சிவப்பு குணமாக

கண் சம்மந்தமான தொந்தரவுகளுக்கு சோற்றுக்கற்றாழை பெரிய அளவில் உதவக்கூடியது. சரியான தூக்கம் இல்லாமல் ஓய்வின்றி இரவில் வேலை பார்க்கும் பலருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சனை கண் சிவப்பு அல்லது கண் சிகப்பாக மாறுதல். இதனால் கண் வலி, கண் எரிச்சலும் ஏற்படும். இதற்கு இந்த கற்றாழை நல்ல ஒரு பலன் கொடுக்கக் கூடியது.

கற்றாழை மடலை எடுத்து அதன் மேல் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை வட்டமாக வெட்டி முதலில் எடுத்துக்கொண்டு இரவு படுக்கும்முன் கண்களின் மேல் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து எடுத்து விடலாம் இந்த விதமாக மூன்று நாள் கட்டினாலே போதும் கண்களில் வரக்கூடிய பிரச்சனைகள், கண் சம்பந்தமான நோய்கள், கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

சிறுநீருடன் ரத்தம்

சிறுநீருடன் ரத்தம் போவது குணமாக சோற்று கற்றாழை மடலில் உள்ள மேல் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்துக்கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு ஏழு முறை கழுவ வேண்டும். அதில் கடுக்காய் சேர்த்து ஊறவைத்து மருந்து தயாரித்து பருக கால் மணி நேரத்தில் நீரடைப்பு உடைந்து சிறுநீர் வெளியேறும். நீர்கடுப்பும் நீங்கும்.

உஷ்ண வாயு குணமாக

உஷ்ண வாயுவிற்கு கற்றாழை பெருமளவில் உதவக்கூடியது. இந்த தொந்தரவிற்கு கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை கண்களில் சில மணி நேரம் கட்டி வைத்திருந்தாலே போதும் உஷ்ணத்தால் வரக்கூடிய பிரச்சனைகள், உஷ்ண வாயு, மூத்திர கடுப்பு, கண் சம்பந்தமான நோய்கள் ஆகியவை தீரும்.

இளமையுடன் இருக்க

கற்றாழையை நன்கு உலர்த்தி வற்றலாக தயாரித்துக் கொண்டு அதனை அன்றாடம் ௨ வேளை உண்டு வர உடலில் ஏற்படும் பல நோய்கள் மறையும். இதனையே பொடியாக்கி அன்றாடம் உண்டு வர என்றும் இளமையுடனும், வலிமையுடனும் இருக்கலாம்.

இரத்தக்கழிச்சல்

இரத்தக்கழிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த கற்றாழையின் சதைப் பகுதியுடன், சீரகம், கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து உண்ண உடனடியாக தீரும்.

நீர் சுருக்கு, உடல் எரிச்சல் நீங்க

கற்றாழை சாறு, மிளகுத்தூள், வெண்ணெய், கற்கண்டு சேர்த்து உண்பதால் உடல் வெப்பம், நீர் சுருக்கு, உடல் எரிச்சல் நீங்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு

கற்றாழையின் சதைப் பகுதியை எண்ணெயில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துவர முடி நன்கு வளரும். நல்ல ஒரு தூக்கத்தையும் இது அளிக்கும்.

சரும பளபளப்பு

கற்றழையை நன்கு அலசி அந்த சதைப் பகுதியை முகத்திலும், கழுத்து மற்ற இடங்களிலும் நன்கு தேய்த்து சிறிது நேரத்திற்குப் பின் குளிப்பதால் சருமம் பளபளக்கும். சருமத்தில் ஏற்படும் மங்கு, தேமல், திட்டு நீங்கும்.

(1 vote)