இரசாயன பூச்சிக்கொள்ளிகளால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.
இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது அக்னி அஸ்திரம். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம். இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.
செடிகளில் ஏற்படும் பூச்சி தாக்குதலை போக்கும் சிறந்த பூச்சி விரட்டியாக பாதுகாப்பை அளிக்கும் கரைசல் இந்த அக்னி அஸ்திரம்.
நாட்டு பசுமாட்டு சிறுநீர், புகையிலை, பச்சை மிளகாய், வேம்பு இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்த தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.
அக்னி அஸ்திரம் தயாரிக்க தேவையான பொருட்கள்
நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோ மூத்திரம்) – 5 லிட்டர்
புகையிலை* – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 1/4 கிலோ
பூண்டு – 60 கிராம்
வேம்பு இலை – 2 1/2 கிலோ
மண்பானை
அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை
நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோ மூத்திரம்) 5 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் கால் கிலோ, பூண்டு 60 கிராம், வேம்பு இலை 2 1/2 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது, வேறு பாத்திரங்கள் பயன்படுத்தினால் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்) சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். ஐந்து முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும்.
இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும்.
24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குப் பிறகு நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
அக்னி அஸ்திரம் பயன்படுத்தும் முறை
இதனை காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
100 லிட்டர் தண்ணீருடன் 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமூத்திரம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் ஓடி விடும்.
ஒரு ஏக்கருக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் அக்னி அஸ்திரம் எடுத்து அதனை 2௦௦ லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கலாம்.
அக்னி அஸ்திர நன்மைகள்
அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
* புகையிலை ஒரு மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி. இது ஒரு இயற்கை முறையாக இருந்தாலும், இயற்கை விவசாய சான்றிதழ் வாங்கியிருப்பவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது. சான்றிதழ் விதிகளின்படி இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி.
மேலும் இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறையை அறிந்துக்கொள்ள – இயற்கை உரங்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள்.