ஆடாதொடை; ஆடாதோடை; Adhatoda vasica
ஆடு + தொடா + இலை. ஆடாதொடை இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது அதிக உஷ்ணம் தாக்காத இடத்தில் ஆங்காங்கே பொதுவாக வளரும். கிராமங்களில் வேலியோரங்களில் வளர்க்கப்படும். இதன் இலைகள் மாவிலை வடிவத்தில் அதே அளவில் பச்சை நிறத்துடன் கூடியதாக இருக்கும். இதன் பூ மல்லிகைப்பூ போல சிறியதாக இலை மடிப்புக்குள் புஷ்பிக்கும். இதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டது. உடலில் ஏற்படும் சளியை நீக்கும் அற்புத மருந்தகவும், இருமலை போக்கவும், வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
இருமலுடன் இரத்தம் வருவதை நிறுத்த
ஆடாதொடை இலையை தேவையான அளவு கொண்டு வந்து சுத்தம் செய்து ஒவ்வொரு இலையையும் மூன்று துண்டுகளாக கிள்ளி வைத்துக் கொண்டு ஒரு சட்டிக்குத் துணி வேடு கட்டி, உள்ளே ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு துணியின் மேல் இலையைப் பரவலாக வைத்து சரியாக சட்டியை கொண்டு மூடி அடுப்பில் வைத்து புட்டு அவிப்பது போல் அவித்து, இலைகள் நன்றாக வெந்தவுடன் எடுத்து கையால் கசக்கி சாறெடுத்து அந்தச் சாறை ஒரு சுத்தமான கண்ணாடி கிண்ணம் அல்லது டம்ளரில் விட்டு பத்திரமாக மூடி வைக்கவும். இந்த மருந்தை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இந்த மருந்தில் 4 தேக்கரண்டி அளவு சுத்தமான தேன் விட்டுக் கலக்கிக் கொடுக்க வேண்டும். காலையில் எடுத்த சாற்றையே மூன்று வேளைக்கும் பயன்படுத்தலாம்.
சுரம் நீங்க (அஷ்ட கசாயம்)
ஆடாதோடை, கோரைகிழங்கு, பற்பாடகம், விஷ்ணு கிரந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் சேர்த்து அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மில்லி அளவு பருகி வர எவ்வித சுரமும் நீங்கும்.
நெஞ்சு கபத்தை வெளியேற்ற
ஆடாதொடை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை மூன்று துண்டுகளாக கிள்ளி ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து லேசாக வதக்கி 5 கிராம் அளவு சுக்கைத் தட்டிப் போட்டு, ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் ருசிக்காக சிறிதளவு நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். காலை, மாலை இரண்டு நாள் கொடுத்தால் நெஞ்சில் கட்டிய கபம் உடைந்து வெளியேறும்.
சுவாச காசம் குணமாக
ஆடாதோடை சாறு அரை டம்ளர் அளவு, புதினா சாறு அரை டம்ளர், இஞ்சியை நசுக்கி ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்தால் வண்டல் தங்கும். அதை மேலாக இறுத்த சாறு அரை டம்ளர் அளவு, எலுமிச்சை பழச்சாறு அரை டம்ளர் அளவு இவைகளை களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு கலக்கி ஒரு டம்ளர் ஓமத்தை சுத்தம் செய்து இதில் கொட்டி வெயிலில் வைத்துக் காய விட வேண்டும். எல்லாம் சருகாக காய்ந்த பின் இடித்து மாசல்லடையில் சலித்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு இதில் தினசரி மொச்சைக் கொட்டை அளவு எடுத்து தேன் சேர்த்து காலை மாலையாக 27 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச காசம் குணமாகும்.
சுகப்பிரசவமாக
ஆடாதொடை இலையில் கைப்பிடியளவு பாதியும், ஆடாதொடையின் வேரில் அரைக் கைப்பிடியளவும் நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை வேளையில் மட்டும் பிரசவ காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்து கொடுத்து வந்தால் எந்த வகையான சிரமமுமின்றி பிரசவமாகும்.
மூச்சுத் திணறல்
ஆடாதொடை இலை சாறும் தேனும் சம பங்கு கலந்து தினமும் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல் இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும். குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 துளிகளும் சிறியவர்கள் 20 துளிகளும் பெரியவர்கள் 30 துளிகளும் போதுமானது. இதனை பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
காசநோய்க்கு
10 ஆடாதொடை இலையை அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை 40 நாட்கள் பருகி வர காச நோயிலிருந்து விடுபடலாம். இரத்த காசம், சளி ஜுரம், இருமல், தலைவலி, விலா வலி ஆகியவை தீரும்.
சீதபேதி குணமாக
ஆடாதோடை இலையை கொண்டு வந்து சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 4 தேக்கரண்டி அளவு சாற்றில் அரை டம்ளர் அளவு எருமைத் தயிர் சேர்த்துக் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாள் கொடுத்து வந்தால் சீதபேதி பூரணமாக குணமாகும்.
கபம் கட்டி இருப்பதை வெளியேற்ற
ஆடாதொடை இலையை கொண்டு வந்து அதை பொடியாக கிள்ளி கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்க வேண்டும். நன்றாக வதக்கி பின் அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை மாலை இரண்டு-மூன்று வேளையாக கொடுக்க கபக்கட்டு உடைந்து வெளியேறிவிடும். தேவையான ருசிக்காக சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
இரத்த வாந்தி குணமாக
ஆடாதோடை இலையை இடித்து சாறு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் பத்து துளி வீதம் ஒரு நாளைக்கு 3 வேளை கொடுக்க இரத்த வாந்தி நின்று விடும்.