மருத்துவத்திலும் ஆன்மீகத்திலும் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்று இந்த ஆகாச கருடன் மூலிகை. இது ஒரு கிழங்கு வகை மூலிகை. பலருக்கும் வீட்டில் கட்டி தொங்கவிடும் மூலிகை என்பதால் பலருக்கும் இது தெரிந்த மூலிகையே. கண் திருஷ்டி, பில்லி, சூனியம், தோஷங்கள் தீர வீடுகளில் பயன்படும் இந்த மூலிகை பல மருத்துவ குணங்களையும் கொண்டது.
தமிழகத்தில் காடுகள், மலைகள் புதர்கள் போன்ற இடங்களில் காணப்படும் கிழங்கு மூலிகை இந்த ஆகாச கருடன். இது ஒரு ஏறு கொடி மூலிகை. மஞ்சள் நிறத்தில் சிறு பூக்களைக் கொண்ட மூலிகை. பழுத்தக் காய்கள் சிவப்பாக இருக்கும். இந்த கொடியின் இலை மற்றும் கிழங்கு மருத்துவப் பயன் கொண்டது.
வீட்டில் இதனைக் கட்டி தொங்கவிட அதனைப்பார்க்க ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போல் தோற்றமளிக்கும் என்பதால் ஆகாச கருடன் என இந்த மூலிகைக்கு பெயர் வந்திருக்கலாம். மேலும் நீர், மண் இல்லாமலும் இருந்தாலும் (வீட்டில் தொங்கவிட்டிருந்தாலும்) சுற்றியிருக்கும் காற்றையும், வெளிச்சத்தையும் கொண்டு வளரும் தன்மைக் கொண்டது, அதேப்போல் பட்டுப்போய் வறண்டு இருந்தாலும் மழைக்காலங்களில் உயிர்பித்து வளரக்கூடியது என்பதால் இதற்கு சாகா மூலி என்ற பெயரும்முண்டு.
விஷக்கடி / விலங்குக் கடி நீங்க
பாம்பு கடி போன்ற விஷக்கடிக்கு இந்த கிழங்கின் சிறு துண்டை கொடுக்க பலன் கிடைக்கும். இந்த கிழங்கை அரைத்து கடிபட்ட இடத்தில் பூச்சாகவும் போடா நல்ல பலன்கிடைக்கும். விலங்கு கடிக்கு சுண்டைக்காய் அளவு கிழங்கை அரைத்து மூன்று நாட்கள் காலையில் கொடுக்க நச்சுக்கடி நீங்கும். தேள் கடிக்கு சுண்டைக்காய் அளவு கிழங்கை வெற்றிலையுடன் கொடுக்க நச்சினால் ஏற்படும் கட்டிகள் தொந்தரவுகள் தீரும்.
வீக்கங்களுக்கு
விளக்கெண்ணையில் இந்த கிழங்கை சிறிதளவு சேர்த்து வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க உடலில் இருக்கும் வீக்கங்கள், வலிகள் தீரும். வாதத்திற்கு சிறந்த பலனை அளிக்கும்.