6-months-baby-food-tamil

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை குழந்தை உணவு

பிறந்த குழந்தை முதல் உணவு தாய்ப்பால் என்பதையும், அதன் நன்மைகளையும் வேறொரு  பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஆறு மாத குழந்தையின் உணவுகளை பார்க்கலாம். ஆறு மாதம் முடிந்த பின் ஒரு நேரம் தாய்ப் பாலை குறைத்து பிற உணவுகளை மெல்ல சேர்க்கத் தொடங்க வேண்டும். ஆறு மாதத்திற்குப் பின் இணை உணவுகள் அளித்தாலும் தொடர்ந்து இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

6-months-baby-food-tamil

குழந்தைக்கு கொடுக்க கூடாத உணவுகள்

ஒரு வயது வரை குழந்தைக்கு செயற்கை சர்க்கரை, செயற்கை உப்பு, ரசாயனங்கள் கலந்த உணவுகள் குறிப்பாக பாக்கெட் உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றை கொடுத்தால் இளம் பிஞ்சு நாக்குகள் தங்களின் இயல்பை மறக்கும், சுவை மொட்டுக்கள் இயற்கை சுவை, இயற்கை உணவுகளை நுணர மறுக்கும், ருசிக்கும் சுவை முட்டுக்கள் தங்கள் உணர்வையும் அதன் செயல் திறனையும் சற்று இழக்கும். அதனால் ஒரு வயது வரை செயற்கை உணவுகள், பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மைதா சார்ந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதேப்போல் பழைய உணவுகள், நேற்று, முந்தைய நாள் செய்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்க கூடாது. அன்றாடம் புதிதாக செய்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

இணை உணவுகள்

குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுடன் இணை உணவுகளை (Complementary foods) கொடுக்க வேண்டும். நமது குடும்ப பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் குடும்ப வழக்கப்படி எளிமையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இணை உணவுகளை ஆறு மாதம் முதல் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

ஆறு மாத குழந்தைக்கு என்ன கொடுக்கலாம்

தமிழகத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு கேழ்வரகு பால், கேழ்வரகு கூழ் கொடுக்கும் பழக்கமுண்டு. ஆரம்பத்தில் கேழ்வரகை பாலாக எடுத்து அதனை காய்ச்சி அளிப்பார்கள். பின் கேழ்வரகு கூழ், இட்லி, இடியாப்பம், ஆப்பம் என எளிதாக செரிமானமாகும், அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் உணவுகளை அளிப்பார்கள். வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை நன்கு மசித்து, பாசிப்பருப்பு, புழுங்கல் அரிசி, கீரை, கேரட் போன்றவற்றை நன்கு குழைய வேக வைத்தும் கொடுக்கலாம்.

குழந்தைக்கு எவ்வாறு புது உணவு அளிக்க வேண்டும்

ஆறுமாதத்தில் கேழ்வரகு பால் கூழ் கொடுக்க ஆரம்பிக்க அதனை ஒரு வாரம் முதலில் கொடுக்க வேண்டும். இந்த உணவு குழந்தைக்கு நன்கு பழக்கப்பட்ட பின் அடுத்த உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம். அதனையும் ஒரு வாரம் கொடுக்க வேண்டும். பல புதிய உணவுகளை சேர்த்து கொடுப்பது சிறந்ததல்ல. எந்த உணவுடனும் அரை உப்பு அல்லது அரை இனிப்பை மட்டும் சேர்க்க வேண்டும். உப்பு சாதாரணமாக கிடைக்கும் கடல் உப்பாக இருப்பது சிறந்தது. அதேப்போல் இனிப்பிற்கு வெல்லம், பனை வெல்லம், நாட்டு சர்க்கரை சேர்க்கலாம். பருப்பு காய் சாதத்தில் சிறிது பெருங்காயம், மிளகு தூள் சேர்க்கலாம்.

உலக சுகாதார நிறுவனம் ஆறு மாதம் முதல் குழந்தைக்கு கொடுக்கும் இணை உணவு சம்பந்தமான பத்து கட்டளைகளை கூறியுள்ளது.. அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(1 vote)