தோட்டங்களில் பல வகைகள் உள்ளது என வீட்டுத் தோட்டம் வகைகளில் பார்த்தோம்.. எந்த இடத்தில், எவ்வாறு, எவற்றைக்கொண்டு தோட்டத்தை அமைக்கின்றோமோ அதைப்பொருத்து அவற்றின் பெயர்கள் அமைந்துள்ளது.
ஒவ்வொரு தோட்ட முறைகளுக்குள்ளும் சில வேறுபாடுகளும், பல நன்மைகளும் உள்ளது. சிலவகை தோட்டமுறைகளில் அவ்வப்பொழுது உரமிடத்தேவையில்லை, சிலவற்றிற்கு அவ்வப்பொழுது நீரூற்றத்தேவையில்லை இப்படி ஒவ்வொன்றிலும் சில பிரத்தியேக நிலைகள் உள்ளது.
அதெல்லாம் சரி ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு தன்மை என இருந்தாலும்.. செடி வளர்ப்பு என்றால் சில அடிப்படைகள் அவசியம். ஏதோ ஒரு காய்கறி செடியையோ அல்லது கொடியையோ வளர்க்க வேண்டுமானால் அதற்கு அடிப்படையாக விதை அல்லது நாற்றுடன் பஞ்சபூதங்களான மண், சூரியஒளி, காற்று, நீர், மற்றும் வெற்றிடம் அவசியம். இவை சரியாக அமைந்தால் மட்டுமே செடிகளை வளர்க்கவும் முடியும், அதிகமாக விளைச்சலையும் எடுக்க முடியும்.
பல நேரங்களில் நாம் கவனித்திருப்போம், நீர் செடிகளுக்கு அவசியமான ஒன்று. அதற்காக அதிக நீரினை செடிகளுக்கு வடிகால் இல்லாமல் ஊற்றினால் அவை அழுகிப்போய்விடும். தேவையான நீரினையும் கொடுக்காமல் விட்டால் செடிகள் காய்ந்து கருகி விடும். தேவைக்கு அதிகமாகவும், குறைவாகவும் இல்லாமல் இருக்க சிறந்த விளைச்சல் கிடைக்கும்.
இவ்வாறு ஒவ்வொன்றையும் தேவையான அளவிலும், வகையிலும் அமைத்து விட்டால் நிச்சயம் நல்ல விளைச்சலை எடுக்க முடியும். காலத்தையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக இதனை செய்யலாம்.
தோட்டம் அமைக்க பஞ்சபூதங்களும் அவசியம்…
மண்
இயற்கை வழி வீட்டு தோட்டத்திற்கு மிகவும் அவசியமானதும், அத்தியாவசியமானது மண். ஆதிகாலம் தொட்டே மரங்களும் செடிகளும் எந்த பராமரிப்பும் இன்றி எல்லாக்காலங்களிலும் மண்ணைக்கொண்டு விளைந்து வருகிறது. ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் வாழும் இடத்தில் விளையும் பொருட்களை உண்ணவேண்டும் என்பது விதி.
அதாவது நாம் வாழும் மண்ணில் செடிகளும் மரங்களும் வளர அந்த இடத்திற்கு தகுந்த தாது உப்புக்களும் மற்ற கனிமங்களும் இயற்கையாகவே நமக்கு இந்த மண்ணின் மூலம் கிடைத்து விடும். இவற்றை உடலும் எளிதில் ஜீரணித்து சத்துக்களாக மாற்றிவிடும்.
மண்ணில் பலவிதமான உடலுக்கு தேவையான கனிமங்கள் அதுவும் தேவையான அளவில் உள்ளது. மண்ணிற்கு ஏற்ப காய்களின் அதாவது கத்திரிக்காய், வெண்டைக்காயின் சுவை மற்றும் சத்துக்களும் இருக்கும். பல நோய்களுக்கு மண்ணில் இயற்கையாக விளையும் இந்த உணவுகளே மருந்தாகவும் உள்ளது.
மண்ணில்லா விவசாயமும் ஆரோக்கியமானதா?
இன்று மிக பிரபலமாக மண்ணில்லா விவசாயமும், மண்ணில்லா தோட்டமுறைகளும் உள்ளது. மண்ணிற்கு மாற்றாக அல்லது மண்ணே இல்லாமல் தேங்காய்நாரை மட்டும் கொண்டு தோட்டத்தினை அமைக்கின்றனர். மண்ணில்லாமல் தேங்காய் நாரை மட்டும் கொண்டு செடிகளை வளர்த்து அதனை உண்ண பல சத்துக்குறைபாடுகள் ஏற்படும். தேங்காய் நாருடன் மூன்றில் ஒருபங்கோ அல்லது ஐந்தில் ஒருபங்கோ நிச்சயம் மண்ணினை கலந்தே செடிகளை வளர்க்க வேண்டும். இல்லையானால் தாது குறைபாடு, சத்துக்குறைபாடு, செரியாமை குறைபாடுகள் ஏற்படும்.
சூரியஒளி
அடுத்ததாக செடி, கொடி, மரங்கள் வளர மிக முக்கியமானதானது சூரியஒளி. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரம் சூரியஒளி. உலகில் உள்ள மனிதன் மற்றும் விலங்குகளுக்கு முதல் நிலை உணவாக விளங்குவது செடிகளும், மரங்களும். அவை தனக்கான உணவினை சூரியஒளியின் மூலமே பெறுகிறது.
ஒளிசேர்க்கையின் மூலம் தனக்கான உணவினை பெற அதன்மூலம் காய், கனிகள் உருவாக்குகிறது. சில செடிகளுக்கு சூரியஒளி முழுவதுமாக தேவைப்படுகிறது, சிலவற்றிற்கு குறைந்தநேரம் போதும்.
வீட்டில் தோட்டம் அமைக்கும் முன் எந்தெந்த செடிகளுக்கு அதிக சூரியஒளி தேவை என்று தேர்வு செய்து அவற்றை அதற்கேற்றவாறு தகுந்த இடத்தில் வைக்க வேண்டும். குறைந்த அளவே போதும் என்பது போன்ற செடிகளை மாடிப்படிகளிலும் மற்ற இடங்களிலும் வைக்கலாம்.
நீர்
அடுத்ததாக நீர். நீரின்றி அமையாது உலகு. உலகம் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் தங்களை வளர்த்துக்கொள்ள நீர் இன்றியமையாதது. செடி, கொடி, மரங்களுக்கும் அவ்வாறே.
நீர் அவசியம் என்பதற்காக அதிக அளவு நீரினை வீட்டில் இருக்கும் தொட்டிகளுக்கு ஊற்றினால் கீழிருக்கும் வடிகால் மூலம் நீர்மட்டும் வீணாக வெளியேறுவதில்லை அதனுடன் மண்ணிலிருக்கும் சத்துக்களும் சேர்ந்தே தான் வெளியேறுகிறது. சிலநேரங்களில் அந்த துவாரம் அடைத்திருந்தால் நீர் தேங்கியிருக்கும் ஓரிரண்டு நாட்களில் செடிகளில் வளர்ச்சி இருக்காது, செடி அழுகிவிடும். அதாவது அதிகமான தண்ணீர் செடிகளுக்கு தேவையில்லை. அதே போல் நீர் இல்லையானாலும் செடிகள் வாடி காய்ந்து விடும். செடிகளுக்கு ஈரப்பதம் தான் வேண்டும். அன்றாடம் தட்ப்பவெப்பத்திற்கு ஏற்றாற்போல் மாலையோ அல்லது காலையும், மாலையுமாகவோ தேவைக்கேற்றவாறு நீரினை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.
காற்றும் வெற்றிடமும்
அடுத்ததாக காற்று செடிவளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதிகமாக நீர் தொட்டிகளில் தேங்கும் பொழுது செடிகள் அழுகிவிடும் என்று தற்பொழுது பார்த்தோம். நீர் அதிகமாகும் பொழுது மண்ணிலிருக்கும் காற்றும் வெற்றிடமும் இல்லாமல் போவது தான் இதற்கு காரணம். இதன் மூலம் காற்று மட்டுமல்ல செடிகள் மரங்கள் வளர கண்ணுக்கு தெரியாத பஞ்சபூத சக்தியான காற்றும், ஆகாயம் என்ற வெற்றிடமும் தேவையென்பதை தெரிந்து கொள்வோம்.
தற்பொழுது இருக்கும் நவீன யுகத்தில் அனைத்துமே கணினியின் கட்டுப்பாடில் தான். செடிகளின் வளர்ச்சியும் அவை கொடுக்கும் காய், கனிகளின் வளர்ச்சியுமே இன்று மின்னணு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இது பெருமை படும் விஷயமில்லை. இயற்கைக்கு மாறானது. உலகிலிருக்கும் ஆயிரமாயிரம் தொழில்களில் ஒன்றல்ல உணவு உற்பத்தி என்பது. உயிருள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானது. உணவைக்கொண்டே மனிதனின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. அப்பேர்ப்பட்ட உணவினை செயற்கையாக பெறுவதால் பல பின்விளைவுகளை வரும்காலத்தில் சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க இன்றிருக்கும் ஒரே வழி நமக்கான தேவைகளை முடிந்தவரை நாமே தயாரிப்பது தான். அதற்கு முதல் கட்டமாக நமக்கான காய்களையும், கீரைகளையும் நாமே நமது வீட்டில் இயற்கையாக விளையவைத்து உண்பது தான்.