இயற்கை வளர்ச்சி ஊக்கி / Bio Fertilizer / Organic Growth Promoter
தென் தமிழகத்தில் பாரம்பரியமாக பூச்சிகளை விரட்டவும், செடிகளுக்கு ஊட்டமளிக்கவும் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஒரு முறை மண்பானை செடித் தைலம் முறை. இந்த கரைசலைக் கொண்டு பயிர்களை விளையவைப்பதால், உண்பவர்களுக்கு கேடில்லாத உணவை வழங்குவதும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமலும் விவசாயம் செய்யலாம். இதற்கு வேப்ப இலை, எருக்கு, நொச்சி இலை மற்றும் ஏதேனும் ஒரு பயிர் பொடியையும் பயன்படுத்த வேண்டும்.
மண்பானை செடித் தைலம் பயன்கள்
- சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
- பயிர் வளர்ச்சியின் செலவைக் குறைக்கும்.
- பயிர்களுக்கு பேரூட்ட நுண்ணூட்ட சத்துக்களை அளிக்கும்.
- மண்ணிற்கும் ஏற்றது. மண்வளத்தை அதிகரிக்கும்.
- சுற்றுசூழலுக்கு உகந்தது.
- விளைபொருளை பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
- பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
மண்பானை செடித் தைலத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்
- வேம்பு இலை – 25 கிராம்
- எருக்கு – 25 கிராம்
- நொச்சி இலை – 25 கிராம்
- ஏதேனும் ஒரு பயிர் பொடி – 25 கிராம்
தண்ணீர் தேவையான அளவு - தயிர் – 2 – 3 லிட்டர்
- மண்பானை – 1
மண்பானை செடித் தைலம் தயாரிக்கும் முறை
செடிகளுக்கு ஊட்டத்தையும், செடிகளுக்கு தீமைசெய்யும் பூச்சிகளை விரட்டும் தைலம் தயாரிக்க வேப்ப இலை, எருக்கு மற்றும் நொச்சி இலையை முதலில் பறித்து நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ள வேண்டும். பயிர் பொடி என்பது கடலை மாவு, பயத்தமாவு, உளுந்து மாவு, கொள்ளு மாவு போன்ற ஏதேனும் ஒரு பயிறு வகைப் பயிர்களின் மாவாகும்.
கூழாக்கி வைத்துள்ள பச்சிலைகளுடன் பயிர் பொடியைக் கலந்து விட வேண்டும். அதன் பின் இந்த கலவையில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து தயார் செய்யப்பட்டுள்ள இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை மண்பானையில் கவனாமாக வைத்து கலந்து விட வேண்டும். மண்பானையின் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இந்த கலவையை காலை மாலை ஒரு குச்சிக் கொண்டு கலந்து விட வேண்டும். 15-20 நாட்களுக்குப் பிறகு தயாராகிவிடும். செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
மண்பானை செடித் தைலம் பயன்படுத்தும் முறை
இந்த மண்பானை செடித் தைலத்தினை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும். அதிகாலை நேரம் அல்லது அந்தி சாயும் மாலை நேரங்களில் செடிகளின் மீது தெளிப்பது சிறந்தது. விவசாய நிலங்கள், செடிகள், பயிறுகள், மரங்கள், வீட்டுத் தோட்டத்திற்கும் இந்த தைலம் சிறந்த பலனை அளிக்கும்.