நமது பாரம்பரிய வாழ்வியல் முறைகளில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதிலும் போற்றுவதிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. அந்த வாழ்வியல் முறைகளில் உழைப்பும் உணவும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது.
அவ்வாறான வாழ்க்கை முறையில் இருந்து உழைப்பு மட்டும் பொருள் சேர்ப்பதற்காக என்று எப்போது மாறியதோ அன்றுமுதல் உழைப்பிற்கும் உணவிற்கும் இருந்த தொடர் சங்கிலி அறுபட தொடங்கியது. அறுபட்ட சங்கிலியில் உழைப்பிற்கும் உணவிற்குமான தொடர்போடு ஆரோக்கியமும் சிக்கிக் கொண்டது கவணிக்கப்படவேண்டியது.
உழைப்பும் உணவும் காணாமல் போக உடல் நலம் இடம் தெரியாமல் சென்று விட்டது. இன்றைய பொருளாதார வாழ்வில் தொலைத்த இடத்தில் தொலைத்தவற்றை தேடுவதில்லை. பணம் கொடுத்தால் எங்கும் எதையும் பெறலாம் என்கிற மனநிலையில் வாழ்கிறோம். உடல் நலத்தையும் பொருளாதாரத்திலேயே தேடுகிறோம். விசித்ரமான தேடல்தான், ‘போகாத ஊருக்கு வழிகேட்பதுபோல’.
இந்த தேடலில் நமக்கு இருக்கும் புரிதல் என்னவேன்றால் நாம் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுக்க முடியும். உடனே நமக்கு தேவையான ஆரோக்கியத்தை யாராவது ஒவ்வொன்றாக சொல்லித்தரவேண்டும், எங்கிருந்தாவது உதவிகள் வர வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளைப்போல திரும்பத் திரும்ப எதிர்பார்க்கிற சோம்பல் நிறைந்திருக்கிறது. தெரிந்தவற்றை திரும்ப திரும்ப சொல்லிக்கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியம் நமக்குள்ளயே நம் ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது என்பதுதான்.
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது‘ – இந்த ஒற்றை வரியே வாழ்வின் சூட்சமத்தை மிகத் தெளிவாக வெளிக்கொணர்கிறது. மேலும் இந்த அனுபவச்சொல் வாழ்க்கையின் ஆணிவேர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதற்கும் ஆரோக்கியதிற்கும் வேண்டுமானால் தொடர்பு உள்ளது, அது எப்படி வாழ்க்கைக்கும் இந்த வரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கேட்பது புரிகிறது.
உண்ணுவதற்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக உண்ணுகிறோமா என்ற கேள்வியின் பதில் தான் அவற்றிற்குள் உள்ள தொடர்பு…
மனிதனின் வாழ்வும் உடல் நலமும் உணவில் தான் துவங்குகிறது. உடலுக்குள் உணவு பலவகையில் சென்றாலும் நம் விருப்பங்களுடன் சமையல் முறையில் செல்லும் உணவு பிரதானமாகிறது.
தமிழக சமையல் முறை
நமது சமையல் முறையில் பலவகைகள் உள்ளன. சமைக்கும் உணவினை அவிப்பது, வறுப்பது, பொரிப்பது, பொங்குவது, காய்ச்சுவது என விதவிதமாக பண்படுத்துகிற வேலையை இன்றும் பின்பற்றி வருகிறோம். நவீனமும் வாழ்வியல் முறைகளும் மாறினாலும் என்றும் மாறாமல் இருப்பது நமது அடிப்படை உணவு தயாரிக்கும் முறை. மேலை நாட்டு உணவுகள் நம் நாட்டிற்குள் வந்தாலும் அவற்றை தயாரிக்கும் முறைகளை நம் சமைக்கும் முறைகளிலேயே அடக்கிவிடுகிறோம்.
உதாரணமாக ஓட்ஸ் – பல நாடுகளில் கால்நடைகளுக்கு தீவனங்களாக விளையவைக்கப்படுவதில் ஒன்று. அதனை கஞ்சி, உப்புமா, இட்லி என்று வித விதமாக தயாரித்து அருந்துவது நம் கண்டுபிடிப்பு. அதற்கு காராணம் உடலுக்கும் உண்பதற்கும் புத்துணர்வை தருகிற நம் பாரம்பரிய சமைக்கும் முறை தான். இந்த புத்துணர்வு வேண்டும் என்பதற்காகவே ஓட்ஸ் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் விளையும் தானியங்களை நம் சமைக்கும் முறைக்குள் கொண்டுவந்து பாடாய்ப்படுத்துகிறோம், நாமும் பாடாய்ப்பட்டுக்கொள்கிறோம்.
அவித்தல்
நம்மவர்களின் சமையல் முறையில் அவித்தல் என்பது தண்ணீரை கொதிக்க வைத்து வருகின்ற ஆவியில் வேகவைக்கும் சமையல் முறை. இட்லி, கொழுக்கட்டை, இடியப்பம் போன்றவற்றை அவித்தல் முறையில் பெரும் உணவு வகைகள்.
காய்ச்சுவது
அதைப்போலவே காய்ச்சுவது என்றால் நீர்ம பொருளை சூடேற்றி, கொதிக்கவைத்து பருகுவது. கசாயம், பால், கஞ்சி போன்றவை காய்ச்சுவதன் முறையில் பெரும் உணவு வகைகள்.
இவ்வாறு பல விதமான உணவுப் பொருட்களை பலவகையில் இன்றும் நாம் தயாரிக்கின்றோம். ஒவ்வொரு சமையல் முறையும் ஒவ்வொரு விதமான உடல் வலிமையைத் தருகிறது. இவ்வாறு காய்ச்சும் வகையில் தயாரிக்கப்பட்டு உடல் வலிமைக்கு பெரும் பங்கை வகிக்கிற ஒரு உணவு நம் கஞ்சி.
காய்ச்சலுக்கு மட்டுமா கஞ்சி
பொதுவாக கஞ்சியைப் பொறுத்தவரை காய்ச்சல் காலங்களில் மட்டும் குடிப்பதற்காக உள்ள உணவு என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காய்ச்சல் காலங்களில் குடிக்கிற போது உடலுக்கு லேசான தெம்பைக் கொடுத்தாலும் விவசாய வேலை செய்பவர்கள், பாரம் தூக்கும் வேலை செய்பவர்கள், கணிப்பொறி வேலை செய்பவர்கள், அரசு வேலை செய்பவர்கள் என அனைவரும் பருக ஏற்ற உணவு கஞ்சி.
எளிதில் ஜீரணிக்கும் கஞ்சி, உடலுக்கு பேராற்றலை தரவல்லது. நமது பாரம்பரிய உணவு வழக்கத்தில் கஞ்சியின் பங்கு நிறையவே உண்டு. உமிமட்டும் நீக்கிய அரிசியை உடைத்த நிலையில் கஞ்சி தயாரிப்பது என்பது பொதுவான முறை.
இந்த சமையல் முறையில் கஞ்சி தயாரிக்கும் பக்குவத்திற்குள்ளேயே நம் உடல் ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது. உணவை மென்று உண்பவர்கள், வயோதிகர்கள், குழந்தைகள், கர்பிணிகள், விளையாட்டு வீரர்கள், உடல் நலமில்லாதவர்கள், உடல் பெருத்தவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவு கஞ்சி.
இன்று நம் வாழ்வில் அரிசியை உடைத்து கஞ்சி தயாரிக்கக் கூட நேரமில்லாத அவசரம் சூழ்ந்துள்ளது. ஆனாலும் கூட கஞ்சி மட்டுமே குடித்தால் போதும் என்கிற உடல் நலமே நம்மிடம் இருக்கிறது.
இந்த முரண்பாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் உண்கிற உணவிற்கு முன்பு அரை டம்ளர் அளவில் எதாவது ஒரு பாரம்பரிய அரிசியிலான கஞ்சியை உணவாக அருந்தலாம்.
வடிகஞ்சி
கஞ்சி அருந்தலாம் என்றதும் எதாவது பாரம்பரிய அரிசியில் உடனடியாக கஞ்சி தயாரித்து உண்பது ஒருவகை அல்லது வடிகஞ்சி எடுத்து மறுநாள் காலை உணவிற்கு கஞ்சியக்கிக் கொள்வது இன்னொரு வகை.
சுடு கஞ்சி
எளிமையாக தயாரிக்கும் வடிகஞ்சி உணவிற்கு ஒருநாள் காத்திருத்தல் வேண்டும். என்னதான் வடிகஞ்சியில் பல சத்துகள் இருந்தாலும் சுடு கஞ்சி பிரியர்களுக்காக இந்த பாரம்பரிய அரிசியில் செய்த உடனடி கஞ்சி (Instant Kanji) உதவும்.
உடனடி கஞ்சி என்றால் என்ன?
அதென்ன உடனடி கஞ்சி என்கிறீர்களா? உடலைக் குளிர்விக்கும் மகத்துவம் வாய்ந்த கஞ்சியைத் தயாரிக்க எதாவது ஒரு பாரம்பரிய அரிசியை (கருங்குறுவை, குள்ளக்கார், குடைவாழை…) ஒன்றும் பாதியுமாக உடைத்து கால் கப் எடுத்துக் கொள்ளவும், மிளகு, சீரகம் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, தண்ணீர் ஒரு கப் சேர்த்து கொதிக்க விட கிடைப்பதே உடனடிக் கஞ்சி.
இந்த எளிமையான வாழ்க்கை முறையில் அருமையான ஆரோக்கியத்தை நமக்கு பெற்றுக் கொடுப்பதில் மிக முக்கியமானப் பங்கு பெற்றுள்ளது இந்த கஞ்சி. நவீன உணவு வளர்ச்சியில் உயர்ந்த உணவகங்களில் கஞ்சி உணவு பரிமாறப்படுவது நமக்கெல்லாம் ஆச்சரியம் அல்ல, ஆறுதல். தொடர்ந்து காலை அல்லது மாலை எளிதாக தயாரிக்கும் இந்த கஞ்சியை பருகுவோம், பலம்பெருவோம்.