சின்னி செடி – நம் மூலிகை அறிவோம்

Acalypha Fruticosa; சின்னி

தமிழகத்தில் பரவலாக வேலியோரங்கள், சாலை ஓரங்களில் வண்ண வண்ண பூக்களுடன் இருக்கும் ஒரு மூலிகை செடி சின்னி. இந்த மூலிகையின் பெயர் தெரியாது பலரும் கடந்து சென்றிருப்போம். மேலும் வறட்சியைத் தாங்கக் கூடிய இந்த மூலிகை தென்னிந்திய மலையடிவாரக் காடுகளில் அதிகமாக வளர்கின்றது. பெரு சின்னி, சிறு சின்னியுமுண்டு. இது கொடியைப்போல் வளர்ந்து படரும் ஒரு செடி வகை மூலிகை. சிறு சின்னி, கிட்டிக் கிழங்கு, கப்புதழை என பல பெயர்கள் இதற்கு உண்டு.

இந்த செடியின் இலைகள் தனி இலைகளுடன் காணப்படும். பூக்கள் சிவப்பு, இளங் சிவப்பு, மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் கூட்டாக இருக்கும். கைப்பு சுவை கொண்ட இந்த மூலிகையின் சமூலமே மருத்துவ பயன்கொண்டதாக இருக்கும். இந்த செடி குப்பைமேனி செடியின் குடும்பத்தை சேர்ந்தது, பார்க்கவும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் ஆனால் இதன் இலைகள், பூக்களின் அமைப்பு வேறு.

உடலைத்தேற்றி, உடலில் இருக்கும் நசுக்களை நீக்கக் கூடியதாகவும், செந்நீரிளக்கியாகவும் உள்ளது. மேலும் வெள்ளை, மந்தம், கணச்சுரம், அஜீரணம், வாந்திபேதி, மூலம், விஷக்கடிகள், காணாக்க கடி, இடுமருந்து ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்து.

வாத, பித்த, கபநோய்களுக்கு

சின்னிலையை மட்டும் வெறும் வயிற்றில் காலையில் 1 கைப்பிடியளவு மென்று தின்று வர வேண்டும். இவ்வாறு 40 நாட்கள் உண்டுவர இரத்தம் சுத்தம் ஆகும். வாத, பித்த, கப நோய்கள், வயிற்றுவலி, அஜீரணம், வாய்வுப் பொருமல், வாந்தி பேதி, மந்தம் ஆகியவை நீங்கி உடல் பலம் அதிகரிக்கும்.

மூலம், ரத்தப்போக்கு நீங்க

சின்னி வேருக்கு சின்னிக் கிழங்கு என்று பெயர். இதை உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேன் அல்லது நீருடன் எடுத்து வர மூலம், ரத்தப்போக்கு நீங்கும். பொடியை அதிகமாக உண்டால் கழலையையும் வீக்கத்தையும் உண்டாக்கும். அதனால் கவனமாக பயன்படுத்தவேண்டும்.

இடு மருந்து, விஷக்கடி நீங்க

இரு கைப்பிடி அளவு சிறு சின்னியிலையுடன் மூன்று பூண்டு பல், 10 மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை, மாலை ஒரு சுண்டக்காய் அளவு எடுத்துவர வண்டுக்கடி, இடு மருந்து, விஷக்கடி, காணாக்கடி ஆகியவை மறையும்.

(1 vote)