தோட்டம், செடி, உணவு, மனித ஆரோக்கியத்திற்கும் ஆதாரமாக இருக்கும் வித்துக்கள் அதாவது விதைகளை பற்றியும் அவை ஆரோக்கியத்திற்கு ஆதாரமா என்றும் பார்ப்போம்.
செடிகளின் இலையில் இருக்கும் ஒரு செல்லை வைத்தே இன்று செடி, மரம் என எதை வேண்டுமானாலும் வளர்க்க முடியும் என்ற காலம் இந்த நவீன காலம். செடி வளர்ச்சிக்கு இன்று விதைகள் தேவையில்லை என்ற பொழுது விதைகள் எவ்வாறு ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகும்? என்கிறீர்களா..
உண்மைதான், விதையில்லாத காய்கறி, பழங்கள் என பலவற்றை பெருமையாக சிரமமின்றி உண்பதற்கு இன்று பழகிவிட்டோம். மேலும் அடுத்த தலைமுறை விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவதும், மண் மலடானதால் விளைச்சல் குறைந்ததும், மழை பொய்த்ததும், ஆரோக்கியம் என்ற வார்த்தையைக் கூட இணையத்திலும் வலைதளங்களிலும் மட்டுமே தேட கூடியதாக இருப்பதும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளாகத்தான் உள்ளது. இவையெல்லாம் பார்க்க தனித்தனி நிகழ்வுகளாக தோன்றலாம். ஆனால் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதுதான் உண்மை.
என்று விதைகள் மறந்ததோ (குறைந்ததோ அல்லது மாற்றப்பட்டதோ) அன்றே நமது ஆரோக்கியமும் மறைந்தது. காய்களுக்குள்ளும், பழங்களுக்குள்ளும் இருந்த விதைகள் நமக்கு சிரமமாக தோன்றி அதனை தொலைத்துவிட்டோம். இதனால் உடலில் இருக்கும் விதைகள் குறைந்துள்ளது. இன்றைய தலைமுறையினர் தங்களது வாரிசுகளை பெறுவதற்கு போராடுகின்றனர். ஆண், பெண் மலட்டுத்தன்மை மேல்நோக்கி உள்ளது.
உடல் ஆரோக்கியமும் இயற்கை தன்மை மாறாத உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. உணவும் விவசாயமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. மொத்தத்தில் உடலாரோக்கியம், உணவு, விவசாயம் ஆகிய மூன்றும் ஒன்றுக்குள் ஒன்று அடக்கமானவை. இன்று உணவின் வித்தான விதைகள், உணவினை தரக்கூடிய விவசாய முறைகள் ஆகியவை தொலைந்ததால் ஆரோக்கியமும் தொலைந்துவிட்டது.
ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமான உணவிற்கு ஆதாரமாக இருக்கும் விதைகளே மனித சமூகத்தின் பேராயுதம். விதைகளை பேணிப்பாதுகாப்பதாலேயே சிறந்த ஆரோக்கியம், சிறந்த சுற்றுச்சூழல், சிறந்த வாழ்வியலை பெறமுடியும்.
அனைத்தும் தொழில் மயமாக்கல் நவீன கோட்பாட்டில் விதைகளும் இன்று அடங்கியுள்ளது. இயற்கையில் பிரமிப்பை ஏற்படுத்தும் பறந்து விரிந்த ஆலமரத்தினை பிரம்மாண்டத்தை கடுகளவு விதை அடக்கி வைத்திருக்கிறது. இன்றைய நவீன வளர்ச்சியோ எதையும் விட்டு வைக்கவில்லை. அந்த ஆலமரத்தின் விதையை பிரித்து அதன் மரபணுவை மாற்றி தனக்கு தேவையான வடிவம், இலைகள், உயரம், அகலம், காய்கள், விழுதுகள் என அனைத்தையும் வடிவமைத்து நவீனப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல அந்த விதைகள் துளிர்க்கும், வளரும், காய்க்கும் ஆனால் மீண்டும் தனது இனத்தை பெருக்கத்திற்கு ஏதுவான விதைகளை அளிக்காது. மாறாக மலட்டு விதைகளை மட்டுமே அளிக்கும். இந்த நவீன விதையின் ஆலமரத்திலிருந்து கிடைக்கும் மலட்டு விதைகளை மீண்டும் மண்ணில் இட்டால் அவை பொதுவாக முளைப்பதுமில்லை, வளருவதுமில்லை அல்லது காய்ப்பதுமில்லை. இதனால் இயற்கை இனப்பெருக்க சுழற்சி அறுபடுகிறது. ஒன்றுக்கும் உதவாத விதைகளாகிறது.
பின் எதற்காக இந்த விதைகள்? என்கிறீர்களா. அதுதான் தொழில் வளர்ச்சி. வியாபாரம். நீங்கள் ஆலமரத்தை வளர்க்க வேண்டும் என்றால் அந்த தொழில் நிறுவனத்திடம் மட்டுமே விதைகளை பெற வேண்டும் (வாங்க வேண்டும்). ஆலமரத்திற்கு மட்டுமல்ல இந்த கதி. நாம் அன்றாடம் சாதாரணமாக உண்ணும் அரிசி பருப்பு தொடங்கி தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் என அனைத்தின் விதைகளும் இவ்வாறானவைகளே.
நாம் உண்ணும் உணவின் விளைச்சலை அதிகப்படுத்த இவ்வாறான நவீன விதைகள் என்ற விளம்பரத்துடன் வெளிவந்த இவ்வகை விதைகள் உண்மையில் விளைச்சலை அதிகப்படுத்தவில்லை மாறாக சுற்றுச்சூழலுக்கு, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் கேட்டினை விளைவித்தன. இன்றைய நவீன நோய்கள் அதாவதும் வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இவ்வகை விதைகளிலிருந்து கிடைத்த உணவுகள். இந்த வகை hybrid விதைகளை அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகள் (high yielding variety) அல்லது அதிக உரத்தை சார்ந்து விளையக்கூடிய விதைகள் (fertiliser responsive variety) என்று கூறுவார்கள்.
விதைகளின் தன்மையை மாற்றியதால் உடலுக்கு தகுந்த இயற்கையான சத்துக்களை அளிக்க இவ்வகை உணவுகள் தவறியதும், அதிக இரசாயனங்கள், பூச்சி கொல்லிகள், களைக்கொல்லிகள் போன்ற நச்சுக்களை கொண்டு வளருவதால் இவற்றை உண்ணும் மனிதர்களுக்கு இந்த நச்சுக்களினால் உடலின் செயல்பாடுகள், நரம்புகளின் செயல்பாடுகள், இரத்தத்தின் தன்மை, ஹார்மோன் சுரப்புகள் போன்றவை மாற்றமடைய வாழ்வியல் நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இவற்றிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவும், நமது குடும்பத்தையும் நமது அடுத்த தலைமுறையினரையும் அதற்கடுத்த தலைமுறையினர் உருவாகவும் சில குறைந்தளவு முயற்சியையாவதும் இன்று செய்தாக வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். அந்த முயற்சித்தான் வீட்டுத்தோட்டம் என்றாலும் அதற்கு பயன்படுத்தும் விதைகள் மிகமுக்கியமானது.
விதைகளில் இன்று மூன்று வகைகள் உள்ளது. ஒன்று பாரம்பரிய விதைகள், நாம் தெரிந்து கொண்ட ஹைபிரிட் விதைகள் மற்றொன்று மரபணு மாற்றப்பட்ட விதைகள் (GMO seeds அதாவதும் தாவர இனத்திற்கு சம்மந்தமில்லாத வேறொரு இனத்தின் மரபணுவை விதைக்குள் புகுத்துவது).
இன்று சந்தையில் அதிகமாக கிடைக்கக்கூடிய விதைகள் என்பது ஹைபிரிட் விதைகள் தான். இவற்றை தவிர்த்துவிட்டு நமது பாரம்பரிய நாட்டு விதைகளையே நமது வீட்டு தோட்டத்தில் பயன்படுத்த வேண்டும். நாட்டு விதைகள் என்பது காலம் காலமாக விதை, செடி, பூ, காய், விதை மீண்டும் செடி. பூ, காய் என்று சுழற்சியில் வரக்கூடியது. நமது மண்ணிற்கும், நமது சூழல், நமது நீர், நமது தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப வளரக்கூடியவை. இவ்வகை விதைகளிலிருந்து வரும் செடிகள் இயற்கையிலேயே பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை எதிர்த்து வளரக்கூடியவை. இரசாயன உரங்களை ஏற்காதவை. அதிக வெயில், மழை என எல்லா சூழலையும் தாங்கிவளரக்கூடியவை. இயற்கையிலேயே பல பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை கொண்டவை. இதனால் இவற்றை உண்பவர்களுக்கு தேவையான சத்துக்களையும், நுண்காரணிகளையும் எளிமையாக அளிக்கக்கூடியது. இவ்வகை நாட்டு விதைகளிலிருந்து கிடைக்கும் உணவை உட்கொள்வதால் பலவகை நோய்கள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
வீட்டுதோட்டம் என்பது நமது ஆரோக்கியத்திற்காக நாம் பார்த்துப் பார்த்து வளர்க்கும் தோட்டம். வீட்டினருகில் இருக்கும் காய்கறி விற்கும் அங்காடிக்கு சென்று எந்த நேரமும் எவ்வளவு வேண்டுமானாலும் வெண்டைக்காய் வாங்கிக்கொள்ளலாம். அதுவே நமது வீட்டிலோ விதையை விதைத்து இரண்டு மாதங்கள் அதற்கு தேவையான இயற்கை ஊட்டம், நீர் போன்றவற்றை பார்த்துப்பார்த்து அளித்தபின்பே அரைகிலோ வெண்டைக்காயைப் பார்க்கமுடியும். நமது வீட்டில் வளர்ப்பது, அதனை பராமரிப்பது என்பதெல்லாம் விருப்பத்திற்கு மேல் சற்று சிரமமான காரியம் தான் என்றாலும் நமது குடும்பத்தின் ஆரோக்கியமே அந்த அரை கிலோவில் தான் உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது..
மேலும் விதைகளைப்பற்றி தெரிந்துக்கொள்ள – விதைகள்.