நம் உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை என ஏழு தாதுக்களால் ஆனது. மூளை சரியாக இயங்க வேண்டும் என்றால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் இருக்க வேண்டும். ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகள். துவர்ப்பு ரத்தத்தை பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்கிறது. புளிப்பு, கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது.
துவர்ப்பு
உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாவடு, மாதுளை, மஞ்சள், அத்திக்காய் போன்றவை உவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு
இது அதிகமானால் எடை கூடும், உடல் தளரும், சோர்வும், தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருட்களில் இனிப்பு அடங்கியுள்ளது.
புளிப்பு
உணவின் சுவையை அதிகரிக்கும், பசியை தூண்டும், நரம்புகளை வலுவடையச் செய்யும். அளவுக்கு அதிகமானால் பற்களை பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக்கொதிப்பு, அரிப்பு உண்டாகும். எலுமிச்சை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர் ஆகியவை புளிப்பு சுவை உடையவை.
காரம்
பசி மற்றும் செரிமானத்தை தூண்டும். உடலில் சேர்ந்துள்ள நீர் பொருளை வெளியேற்றும். ரத்தத்தை தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவையில் இச்சுவை உள்ளது.
கசப்பு
பெரும்பாலும் நாம் வெறுக்கக்கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய சுவை இதுவே. இது நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படும். ரத்தத்தை சுத்திகரிக்கும். பாகற்காய், கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இச்சுவை உள்ளது.
உவர்ப்பு
தவிர்க்க இயலாதது. உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளை சமன் செய்யும். உண்ட உணவை செரிக்க செய்யும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
சிலர் இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே இருப்பார்கள். அது தவறு. உணவை முழுமையாக பரிமாறப்பட்ட பின் முதலில் உண்ண வேண்டியது இனிப்பு. அடுத்ததாக புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின் இறுதியாக துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதால் உடலில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களும் சமநிலை பெறும். முடிவில் தயிருடன் உப்பு கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்தம் நீங்கிவிடும். உடலில் நோய் தோன்றுவதற்கான காரணிகள் அகற்றப்பட்டுவிடும்.
கோபமோ, கவலையோ ஏற்படும் போது உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். உண்பதற்கு வாழை இலை பயன்படுத்தினால், உணவால் உண்டாகக்கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உண்டபின் சிறிது தூரமாவது நடக்க வேண்டும். இதைவிடுத்து, எதை எப்பொழுது சாப்பிடுவது என்றில்லாமல், எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கம் தான் நோய் உண்டாவதற்கு காரணமாகிறது.
மேலும் உணவும் அறுசுவையும் பற்றி தெரிந்து கொள்ள இதனை படிக்கவும் – உணவும் அறுசுவையும்